Friday, 7 May 2010

கருணாநிதி- சில கிலு கிலுப்பைகளும்…. ஒரு கருப்புக் கொடியும்

குழந்தைகளுக்கு நாம் கிலு கிலுப்பை வாங்கிக் கொடுப்போம். ஆனால் என்னதான் விசித்திரமான சதங்கள் வருகிற கிலு கிலுப்பை என்றாலும் குழந்தை சில நாட்கள் மட்டுமே கிலு கிலுப்பையை ரசித்துச் சிரிக்கும்… பின்னர் கிலு கிலுப்பை சலித்து விடும். அடுத்த பொம்மையைக் கொண்டு வந்து குழந்தைக்கு கொடுத்தால் அதோடு விளையாடத் துவங்கி விடும்.

ஆனால் வித விதமான கிலு கிலுப்பைகளை வைத்து ஒரு எண்பது வயது குழந்தைக்கு கிலுக்கம் ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையும் கொஞ்சம் கூட சலிக்காமல் காட்டப்படுகிற கிலு கிலுப்பைகளுக்கெல்லாம் பல மணி நேரம் ஒதுக்கி ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஊரெங்கும் பாராட்டு விழா, பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா என்று ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே கருணாநிதிக்கு காட்டப்படும் கிலு கிலுப்பைகளின் ஊழைச் சத்தம் தாங்க முடியவில்லை.

சமீபத்தில் ஒரு செய்தி. சில மூத்த பத்திரிகையாளர்கள் கலைஞரைச் சந்தித்தார்களாம். பெண் சிங்கம் படத்தில் வந்த வருமானத்தை மக்களுக்கு வழங்கியமைக்காகவும், இளைஞன் பட வருமானத்தை மக்களுக்கே வழங்கியதற்காகவும் இனி உங்களை கலைஞர் என்றே சொல்லக் கூடாது. வள்ளல் என்றுதான் சொல்ல வேண்டும் என பத்திரிகையாளர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனாராம் கலைஞர்.

தொடர்ந்து காட்டப்படும் இந்த கிலுக்குகளில் உள்ள ஏளனத்தைக் கூட இவர்கள் அந்த முதியவரிடம் எடுத்துச் சொல்வார்களோ என்னவோ? இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், தமிழார்வலர்கள், இலக்கியவாதிகள், என எல்லோருமே இப்படி கையில் ஆளுக்கொரு கிலுக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். ” கோவையில் நடை பெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலைஞருக்கு தொல்காப்பியர் விருது வழங்க வேண்டும்”" என்று செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்தார் தமிழண்ணல். ஆறிக்கை விட்ட மறுநாளே அவருக்கு மாநாட்டுக் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி வளைப்பது?

எப்படி துதிப்பது என்பதை எல்லாம் இந்த தலைமுறை இளைஞர்கள் இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கிலு கிலுப்பைகளின் உச்சம் என்றால் காஞ்சிபுரத்தில் நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவைச் சொல்லலாம். திமுக நடத்திய அந்த விளாவில் திமுக வருடாவடம் கொடுக்கும் விருதில் ஒரு விருதான அண்ணா விருதை திமுக தலைவர் கருணாநிதியே பெற்றுக் கொண்டார். பெற்றுக் கொண்டார் என்பதே எவ்வளவு அபத்தம் பாருங்கள். விழா நடத்தவோ, மேடை போட வேண்டிய அவசியமோ இல்லாமல் பேசாமல் அறிவாலயத்திலிருந்தே அந்த விருதை எடுத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால் அதுதான் கருணாநிதி. அதை ஒரு மாநாடு மாதிரி நடத்தி பல பேர் வேடிக்கை பார்க்க தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வார். ஆக இந்த எண்பது வயது குழந்தை. தனக்கான கிலுக்கை தானே செய்து கொள்கிறது. கருணாநிதி கிலுக்குகளை மட்டுமே விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட ஜெகத்ரட்சன் திடீரென மத்திய அமைச்சர் ஆவதில் உள்ள ரகசியமும் இதுதான், தமிழண்ணன், சிலம்பொலி செல்லப்பன். முகம் மாமணி போன்ற அல்லக்கைகள் பண்ணுகிற அலப்பறைகளின் தந்திரமும் இதுதான். விரைவில் மேலவை வர இருப்பதால் இன்னும் பல கிலுக்குகளை நீங்கள் கேட்கலாம். பார்கக்லாம்.

இடைவிடாது கேட்டுக் கொண்டே இருந்த கிலுக்குச் சதங்களுக்கிடையில் கருணாநிதிக்கு தோழர்களின் அந்தச் சத்தத்தைக் கேட்க சகிக்கவில்லை. கையில் கருப்புக் கொடியோடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களைத் தாக்கிய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு காட்டப்பட்ட கருப்புக் கொடிதான் எதிர்ப்பரசியலில் கருணாநிதிக்கு காட்டப்பட்ட முதல் எதிர்ப்புக் கிலுக்கு. இப்படியும் செய்வார்களா? இவர்கள் யார்?

ஒரு சிறு குவினர், ஐந்து, அல்லது ஆறு பேர், ஊடக விளம்பரத்துக்காக, என்றெல்லாம் பேசுகிறவர்கள்தான் கருணாநிதிக்கு வித விதமான கிலுக்குகளைக் காட்டி உற்சாகத்திலாழ்த்தியவர்கள். இதை எப்படி டீல் செய்வது என்பது தெரியாது கருணாநிதியோ உயர்நீதிமன்றத்தில் கருப்புக் கொடி காட்டிய்வர்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள், தலித் விரோதிகள் என்று பிரச்சனையை மடை மாற்றினார்.

கருப்புக் கொடியை ஆதரிப்போம்

………………………………………………………………

கருப்புக் கொடியின் வலிமை கருணாநிதிக்கும் தெரியும் பல மணிநேரங்கள் இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்துக்குள் முடக்கிய கருப்புக் கொடிகள் கருணாநிதியினுடையது. ஆனால் தேர்தல் அரசியலில் கலந்து போர் வெறி இந்திய அரசுக்கு காவடி தூக்கும் ஏவல் ஆளாக மாறிப் போன பின் கருப்பு மறைந்து மஞ்சளும் பச்சையும் பிடித்த நிறமாகிப் போனது அவருக்கு, அதனால்தான் பார்ப்பனர்களே கருணாநிதியை பாராட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதை சிலர் முதிர்ச்சி என்கிறார்கள்.

பச்சையான குடும்ப,சர்வாதிகார சந்தர்ப்பவாதத்தைத் தவிற இதில் வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்கள் மீது காட்டுமிராண்டித்தமான தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர் கருணாநிதி. அன்றைக்குப் உயர் நீதிமன்றம் போர்க்களாமான மாலையில் ஏதோ தனக்குத் தெரியாமல் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது போல பதறிய கருணாநிதி.

சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த படியே உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது. நீங்கள் விரும்பினால் நானே ஆம்புலன்சில் உங்களை வந்து நேரில் சந்திக்கிறேன் என்று கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு அன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. மரியாதையும் இல்லை அசம்பாதிவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதி விரும்பியிருந்தால் அப்போதே அவர்களை பதவியை விட்டு நீக்கியிருக்கலாம். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவருக்கு பதவியுர்வு வழங்கி கோவைக்கு அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் ஒருவர் இன்னொருவர் மீது பழியைப் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றீக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகளோ ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகளாக மாறி அடிவாங்கிய வழக்கறிஞர்களுக்கே அட்வைஸ் செய்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் இன்றுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவோ துரை ரீத்யாக நடவடிக்கைக்கோக் கூட உள்ளாகவில்லை.

ஒரு வருடம் கழிந்து விட்டது. இடையில் கருணாநிதிக்குக் காட்டப்பட்ட கிலுக்குகளில் வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்றமும் விடுபடுகிறதே என்று கருணாநிதி நினைத்து அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார். அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர் நீதிபதிகள். அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவ கருணாநிதியையே அழைப்பது என்று முடிவெடுத்தனர். உயர்நீதிமன்றத்திற்குள் கருணாநிதி நுழையக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வந்தார் கருணாநிதி. முகத்துக்கு நேர மனித உரிமை பாதுகாப்பு மையத்ச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள்.

ஆர்.சி. பால்கனகாராஜ்.

……………………………………

தங்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டி கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் திமுக ரௌடிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்க, சென்னை மாவட்ட வக்கீல் சங்கத் தலைவரான பால் கனகாராஜோ கருணாநிதிக்கு பொக்கே கொடுத்து பல்லிளித்தபடி போஸ் கொடுத்தார். அப்படி என்றால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை கிளித்தெரிந்ததும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பை மீறி பணிக்குச் சென்ற திமுக வழக்கறிஞர்களை சங்கத்தை விட்டு நீக்குகிறோம் என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று உதார் விட்டதும், இப்போது வெறும் நாடகம் என்பது உண்மையாகியிருக்கிறது. திமுகவின் வேலைத் திட்டத்தின் கீழ் கொதித்தெழுந்த வழக்கறிஞர்களுள் ஊடுருவி சங்கத் தலைவர் பதவியை பயன்படுத்தி அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தவர்தான் இந்த பால் கனகாராஜ். இப்போது மேடையிலேயே தாக்க போலீசை அனுப்பியவருக்கு பூச்செண்டு கொடுத்தன் மூலம் அது அம்பலமாகியிருக்கிறது.

டாக்டர் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் யார்?

………………………………………………………………………

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களைப் போலீசை ஏவித் தாக்குதல் நடத்தியதோடு போலீசையும் பாதுகாத்தார் கருணாநிதி. இப்போது வழ்க்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது என்று கருப்புக் கொடி காட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களை தன் கட்சிக் குண்டர்களை விட்டுத் தாக்கியதோடு. அவர்களை தலித் விரோதிகளாகவும், அம்பேதகருக்கு எதிரிகளாகவும் சித்தரித்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞர்கள் அம்பேத்கர் சிலை திறந்ததையோ அந்த விழாவையோ தடுக்க வில்லை. வழக்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிம்னற வழகாத்திற்குள் வரக்கூடாது என்பதுதான் அவர்கள் வைத்த கோரிக்கை. விழா நடந்தது, அம்பேதகர் சிலை திறக்கப்பட்டது, நீதிபதிகளும் பேசினார்கள். யாருக்கும் எந்த எதிர்ப்பும் காட்டப்படவில்லை.

கருணாநிதி பேசத் துவங்கியதும் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடியைத் தூக்கி கோஷமிட்டனர். என்பதோடு சென்னை உயர்நீதிம்னறத்திலிருந்து பதவி உயர்வுபெற்றுச் செல்லும் நீதிபதிகள் நன்றிக்கடனுக்காவே இந்த விழாவை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கோகலே என்ற உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று பதவி உயர்வு பெற்று உச்ச நீதிம்னறம் சென்றார். அப்படிச் செல்லும் போது, வழக்கறிஞர்களிடம் போராடாதீர்கள். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

இவர் எப்படி போராடும் சக்திகளுக்கு நீதி வழங்குவார் என்பதை நினைத்துப் பாருங்கள். சரி கருணாநிதியின் அம்பேதகர் மீதான திடீர் பாசத்தையும் தலித்துக்கள் மீதான பாசத்தையும் நாம் அவசியம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். பண்ணைகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் இவர்கள் அரசியலில் அறிமுகமானார்கள். இந்த நாற்பது ஆண்டுகளில் பண்ணைகளாகவும், மன்னர்களாகவும், குறு நில மன்னர்களாகவும், இவர்களே மாறிப் போனார்கள், உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் தொடர்பாக பிரச்சனை எழுந்த போது கடைசி வரை அதில் மௌனம் காத்தார். கடைசியில் தீண்டாமைச் சுவரில் ஒரு செங்கல் அளவுக்கு பெயர்த்து ஒற்றையடிப் பாதை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது திமுக அரசு, தமிழகமெங்கிலும் கோவில் நுழைவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் தெரியும் கருணாநிதியின் தாழ்த்தப்பட்டோர் மீதான பாசம்.

திண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகமெங்கிலும் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்த போது பதறிப் போய் அய்யய்யோ அது வேண்டாம் என்று பதறித் துடித்தவர்தான் இந்தக் கருணாநிதி. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எது எதெல்லாம் பெரும்பான்மை சாதியோ அந்தச் சாதிகளையே பிரதிநிதித்துவம் செய்யும் கருணாநியின் ஆட்சியில்தான் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய 19 விவசாயக் கூலிகள் அடித்துக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள். அன்றைக்கும் காவல்துறை கருணாநிதியின் கையில்தான் இருந்தது.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றொரு சட்டம் கொண்டு வரப்படும், அர்ச்சகர் பயிற்ச்சிப்பள்ளிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அர்ச்சகர் பள்ளியில் படித்த பல நூறு மாணவர்கள் கையில் சான்றிதழோடு தெருவில் நிற்கிறார்கள். அரசு நிர்வாகமே இந்து நிர்வாகமாக மாறி அவர்களை ஆலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறது. அத்தோடு அர்ச்சகர் பயிர்சிப்பள்ளிகளையே இழுத்து முடியது கருணாநிதி அரசு. உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கில் கூட மனு தர்மத்திற்கு எதிராகவோ, ஆகம விதிகளுக்கு எதிராகவோ தனது வாதத்தை வைக்க வில்லை இந்த பெரியாரின் தம்பியின் அரசு. இதுதான் கருணாநிதியின் அம்பேதகர் பாசம். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்திரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும். ஆமாம் தோழர்களே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியவர்களும் அவர்கள்தான் சிதம்பரம் கோவிலில் தமிழ் உரிமைக்காக போராடி வென்றவர்களும் அவர்கள்தான்.

வழக்கறிஞர்களை தாக்கி விட்டு அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க கருணாநிதி அணிந்த முகமூடிதான் அம்பேதகர். கருணாநிதி இப்போது அணிந்துள்ள அம்பேதகர் முகமூடியைத்தான் சட்டக்கல்லூரி மோதல் சம்பவத்தின் போது நாம் பார்த்தோமே! அன்பார்ந்த நண்பர்களே!

………………………………………..

எல்லோரும் எல்லா காலத்திலும் மடையார்களாக இருக்க மாட்டார்கள். எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு தன்னை எல்லோரும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிற கருணாநிதி ஊடகங்க முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாயை அடைக்கிறார். ஈழப் போரின் போது, சேதுக்கால்வாய் திட்டத்தின்போது, முல்லைப் பெரியார் விவாகரத்தில், ஓகேனக்கலில் என கருணாநிதியின் உண்மை முகம் வெகு வேகமாக அம்பலப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு எந்த விதமான எதிர்ப்புகளும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கருணாநிதி ஊடகங்களை செய்தி வெளியில் வராமல் இருக்க ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறார்.

கருப்புக் கொடி விவாகரத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதியையும் மீறி உண்மை வெளிப்பட இப்போதோ கருங்காலிகள் என்றும், தலித், அம்பேதகர் விரோதிகள் என்றும் தோழர்களை முத்திரை குத்துகிறார். சுப்பிரமணியசுவாமி என்னும் மொசாட்டின் பார்ப்பன ஏஜெண்டுக்காக அடியாள் வேலை பார்த்த கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் காட்டிய கருப்புக் கொடி போராட்டம் நியாயமானது மட்டுமல்ல ஜனநாயக ரீதியிலானதுமாகும் கூட, அதை போலீசிடம் அனுமதி வாங்கி விட்டுச் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று சாதாரண ஒரு அரங்கக்கூட்டம் நடத்தக் கூட போலீஸ் அனுமதி என்னும் அளவுக்கு போலீஸ்சிடம் அதிகாரத்தை குவித்து வைத்துள்ள கருணாநிதி. இந்திராவுக்கு எதிராக மதுரையில் கருப்புக் கொடி காட்டிய போது எந்த போலீசில் அனுமதி வாங்கினார். ஆகவே தோழர்களின் எதிர்ப்பு நியாமானது.அதை நாம் ஆதரிக்க வேண்டும். தொடர்ந்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடும் தோழர்களை ஆதரிப்பதன் மூலம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பார்ப்பன அடிவருடிகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்து நிறுத்த வேண்டும்.

வெண்மணி - நன்றி இனியொரு

Thursday, 18 March 2010

போராளிகளும் நாய்களும் - கருணாநிதியின் பச்சை வேட்டை

கருணாநிதி / மாறன் குடும்ப பத்திரிகையான தினகரன் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி இது-

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை கண்டவுடன் வெட்டிக் கொல்ல வேண்டும் என கிராம மக்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள். காரணம் இரவில் அவர்கள் நடமாடும்போது குரைக்கிறதாம். மேற்கு வங்கத்தில் அதிரடிப்படை முகாம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை ஒழிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து Ôகிரீன் ஹன்ட்Õ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இரவில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டத்தின்போது, தெரு நாய்கள் குரைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதாம். அதனால் எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீ.வாதிகள். இதையடுத்துத்தான் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக கிராமம்தோறும் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. நாய்கள் என்ன பாவம் செய்தன? அவற்றை ஏன் கொல்ல வேண்டும்? உங்கள் சண்டையில் நாய்களை ஏன் இழுக்கிறீர்கள்? தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள் என பீட்டா அமைப்பும் கெஞ்சிப் பார்த்துவிட்டது. ஆனாலும் மாவோ தீவிரவாதிகள் தங்கள் உத்தரவை வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள். கிராம மக்களுக்கு ஒரு பக்கம் தீவிரவாதிகளால் பிரச்னை. மறு பக்கம் அதிரடிப் படையினரின் விசாரணை தொல்லை. இவை போதாதென்று, நாய்கள் படுகொலை என்ற புதிய பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.

இந்த தினகரன் செய்தி சொல்ல வருவதென்ன?

ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க பிரதேசங்களில் பழங்குடி மக்களின் பூர்வீக வாழிடங்களை இந்திய அரசாங்கம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு விற்று விட்டமையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது . பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இது எதுவுமே இந்த தினகரன் பத்திரிகைக்கு தெரியவில்லை. அங்குள்ள மக்களது உண்மை நிலையை அறிய தினகரன் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டதா ?

தினந்தோறும் கொல்லப்படுகின்ற மக்கள் குறித்தோ ..இராணுவ படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்தோ...அழிக்கப்பட்ட கிராமங்கள் குறித்தோ.. தகவல்களை தேடியறிந்து தினகரன் செய்தி வெளியிட்டதா?

'ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள்' என்று எழுதும் தினகரன் அங்கு கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு துளியும் கவலைப்படவில்லை.

அடிக்கின்ற கொள்ளையை பங்கிட்டு கொள்ளவும், நித்தியானந்தா விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தவும், நடிகைகளை வைத்து போட்டி நடத்தவுமே இந்த கொள்ளைக்கார கருணாநிதி குடும்ப ஊடகங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்தி வெளியிடுவது?

குறிப்பிடப்படுகின்ற பிரதேசங்களுக்கு சுயாதீனமாக செய்தியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்களது உண்மை நிலையை எடுத்துச்சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 'எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீவீரவாதிகள்' என்ற விடயம் மட்டும் தினகரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

என்னே ஒரு பத்திரிகா தர்மம்.....என்னே ஒரு நடுநிலை...

வாழ்க ஊடகத்துறை!

சென்னையிலிருந்து இரா. வெங்கட் மணி

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- ஜீவேந்திரன்

Jeevendran

Saturday, 13 March 2010

சந்தி சிரிக்கும் தமிழர் அரசியல் - தமிழ் ஈழம் 20/20

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடம்பெற்று வருகின்ற கூத்துகள் மக்களிடையே ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் தேசியம் தமிழர் விடுதலை என்று வாய்கிழிய பேசியவர்கள் இன்று நாடாளுமன்ற பதவிகளுக்காக வெட்கம் மானம் இழந்து அடிதடியில் இறங்கியுள்ளனர்.

காலம் காலமாக இவ்வாறான பிழைப்புவாத அரசியலையே தமிழர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கேவலமான அரசியல் காரணமாகவே தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சிங்கள அரசியல்வாதிகள் தமிழரது சுயநல கேவலங்கெட்ட அரசியலை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தினார்கள். தமிழ் நண்டுகள் ஒரு போதும் இலக்கை அடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அது கடந்த காலம் போகட்டும் என்று ஒதுக்கி விட்டாலும் இப்போது என்ன நடக்கிறது?

பல்வேறு வழிகளிலும் பெரும் இழப்புகளை சந்தித்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் பெரு மூச்சு விட்டார்கள். இனியாவது தமது தலைவர்கள் ஒற்றுமையாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பாடுபடுவார்கள் என நம்பினார்கள்.

நந்தவனத்திலோர் ஆண்டியைப்போல விடுதலைப்பானையை முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் போட்டுடைத்த பின்னர் தமிழர்களுக்கு இருந்த ஒரு நம்பிக்கை வெளிச்சமாக தமிழ் கூட்டமைப்பே காணப்பட்டது. புலிகள் அரசியல் தெரியாதவர்கள் துப்பாக்கியை மட்டுமே நம்பியவர்கள், தமிழ் கூட்டமைப்பு அப்படியல்ல. அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் எனவே அரசியல் ரீதியாக விடுதலை வென்று எடுக்கப்படும் என பல ஆய்வாளர்கள் வழமை போல தமது பத்திகளை நிரப்பினார்கள். வழமை போல மக்களும் நம்பினார்கள்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் பொய்த்து போய்விட்டது.

முள்ளிவாய்க்காலில் அங்குசம் காணாமல் போய்விட்டதால் தமிழ் கூட்டமைப்பு யானை தறிகெட்டு ஓடத்தொடங்கி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி 8 அணிகளாக பிரிந்து IPL 20/20 போட்டியில் ஆடுவதைப்போல இப்போது தமிழ் கூட்டமைப்பு நான்கு துண்டுகளாக பிரிந்து தேர்தல் போட்டியில் ஆடுகிறது.

அணி 1. சம்பந்தர் மாவை சுரேஷ் ஆகியோரின் கூட்டமைப்பு.

அணி 2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தமிழ் காங்கிரஸ்

அணி3. சிவாஜிலிங்கம்,சிறீகாந்தா ஆகியோரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

அணி 4. மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ள சிவநாதன் கிசோர் , கனகரத்தினம், தங்கேஸ்வரி ஆகியோரின் அணி

இப்போது அணிகளின் விவரங்களைப்பார்ப்போம்.

சிவநாதன் கிசோர் புலிகளின் தோல்வியுடன் மகிந்தவை போய்ப்பார்த்து சரணடைந்தார். ஆசையோடு மகிந்தவை கட்டித்தழுவி தனது பிழைப்பை உறுதிப்படுத்தினார்.

தமிழ் மக்களது வாக்குகளால் பதவியை பெற்று தமிழரை கொன்றவனின் கால்களை நக்கியதால் அவர் மைதானத்திற்கு வராமலேயே ஆட்டமிழந்தார். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தராமையால் கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றோரும் மகிந்தவிடம் சரணடைய நேர்ந்தது.

அடுத்தது புலம்பெயர்ந்த தமிழர்களால் வீணாக போனவர்தான் சிவாஜிலிங்கம். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் வழமைபோல வெளிநாடுகளில் வசதியாக வாழும் அரசியல் சனிகள் மன்னிக்கவும் ஞானிகள் கொதித்து எழுந்தார்கள். மகிந்தவும் சிங்களவன்தான் சரத்தும் சிங்களவன்தான். ஒருவன் கொல்லச்சொன்னவன், மற்றவன் கொன்றவன். எதற்காக அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்? ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எம்மிடம் ஒரு தமிழன் இல்லையா? என்று வீராவேசமாக கர்ஜித்தார்கள்.

இதைக்கேட்ட சிவாஜிலிங்கம் முந்திரிக்கொட்டை போல முன்வந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒதுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அநியாயமாக ஆட்டமிழப்பு செய்யப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படி உசுப்பேத்தியவர்கள் கூட தேர்தலின் போது அவரைக்கண்டு கொள்ளவில்லை.

தமிழ் கூட்டமைப்பில் சம்பந்தர் மாவை சுரேஷ் தரப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் தரப்பும் ஒரு அணி போல தோன்றினாலும் உள்ளே பிரச்சனைகள் ஆரம்பித்திருந்தன. இந்த நிலையில்தான் தமிழ் கூட்டமைப்பில் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. இதை காரணமாக கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகி தாம் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இப்போது முக்கியமான பலப்பரிட்சை இந்த இரு அணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு முழுவதிலும் அவர்களுக்கு செல்வாக்கு உண்டு. தமிழ் காங்கிரசிற்கு குடாநாட்டில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் ஞானிகளும் கூட்டமைப்புக்கு சார்பாகவும் தமிழ் காங்கிரசுக்கு ஆதரவாகவும் என பிரிந்து நிற்கிறார்கள்.

இங்கே ஒரு உண்மை வெளிப்படையானது. தமிழர்கள் பலமாக இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். தமிழர்கள் ஒரு அணியாக பலமாக இருந்தால் அது எப்போதுமே ஆளும் சிங்கள தரப்பிற்கு நெருக்கடியாகவே அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதிலும் நரி மூளை படைத்த மகிந்த பிரித்தாளும் தந்திரத்தில் தேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை பிளந்தவர். ஒற்றுமைக்கும் கட்டுக்கோப்புக்கும் பெயர்போன ஜேவிபி கட்சியை உடைத்தவர், முஸ்லிம் காங்கிரசை சிதைத்தவர்.

எனவே தமிழர்கள் ஒரு அணியாக பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர விடுவாரா என்ன. எனவேதான் அவர் பிள்ளையான் முதல் சுயேட்சைகள் வரை களத்தில் இறக்கியிருக்கிறார். இப்படியான ஒரு நேரத்தில்தான் கூட்டமைப்பும் காங்கிரசும் பலிக்கடாவாக தாமே போய் மகிந்தவிடம் கழுத்தை நீட்டியிருக்கிறார்கள்.

சரியோ பிழையோ விடுதலைப்புலிகள் தமிழரது தலைமைத்துவமாக கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை எதோ ஒரு நம்பிக்கையில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.இப்போது தமிழர்களுக்கென ஒரு உறுதியான தலைமைத்துவம் இல்லாமல் போயுள்ளமை வெளிப்படையானது. இது தமிழருக்கு மிகவும் ஆபத்தான சூழலாகும்.

இப்படியான ஒரு தருணத்தில் பிரிந்து மோதிக்கொள்ளும் தமிழ் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் தாமே தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் என்கிறார்கள்.தமிழ் காங்கிரசானது சம்பந்தர் தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது.

'சம்பந்தர், மாவை, சுரேஷ் தரப்பு இந்தியாவின் தாளத்திற்கு ஆடுகின்றனர். அடிக்கடி இந்தியாவிற்கு சென்று ஆலோசனை பெறுகின்றனர். இந்தியாவே அவர்களை இயக்குகிறது' என்பது ஒரு குற்றச்சாட்டு . இதே குற்றச்சாட்டையே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

'தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது.சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது' என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு தமிழ் கூட்டமைப்பு,

'தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்தன' என பதில் சொல்கிறது.

அடுத்ததாக தமிழ் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு

'2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர்'

'அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர். மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் அடித்துக் கூறிவிட்டனர்.தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பானது,

'எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம்'

'இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். ஆனால் இன்று ''மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம்'' என்று கூறுகிறார். ஓர் வரைபு உருவாக்கப்பட்டால்தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத்தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது.

கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா?தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை' என்கிறது.

தமிழ் காங்கிரசின் அடுத்த குற்றச்சாட்டு

'விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. இது விடுதலைப்புலிகளின் சார்பு அணியினரை அகற்றும் மறைமுகமான நடவடிக்கை' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பு

'பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். மே 2009 ற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் விடுப்பு எடுத்தால் பதவி பறி போகும் என்ற நிலையில் பதவிகளை காப்பாற்ற வேண்டும் என பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்புகிறது.

இதே வேளை தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாதுரை விநாயகமூர்த்தி கூறும்போது, 'செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி கூட்டமைப்பைப் சிதைப்பது உகந்தது அல்ல. அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது?

இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே! அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது. கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, வரலாற்றுத் தவறு இழைக்கத் தாம் விரும்பவில்லை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்ட எல்லா விடயங்களையும் வழங்குவதற்குத் தமிழ்க் கூட்டமைப்புத் தயாராக இருக்கும்போது அதிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்தும் காரணம் ஏதும் அகப்படவில்லை எனவே வெளியேறும் முடிவை ஏற்றுக்கொள்ளவேயில்லை' என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள்... ..பதில்கள்... ..எதிர் குற்றச்சாட்டுகள்... ..அவதூறுகள்.. ..என IPL 20/20 போட்டிகளை போல தமிழ் ஈழ போட்டிகள் மிக விறு விறுப்பாக இடம்பெற்று வருகிறது.

இந்த சுற்றுப்போட்டியை மகிந்த டக்லஸ் கருணா பிள்ளையான் சித்தார்த்தன் குழுவினர் மிகவும் அனுபவித்து உற்சாகமூட்டி பார்த்து வருகிறார்கள். ஒரு வகையில் இந்த போட்டியை அவர்களே ஏற்பாடு செய்திருப்பதால் போட்டியின் இலாபங்களை அவர்களே அனுபவிக்க போகிறார்கள்.

ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இராணுவ காவலில் உள்ளமை பற்றியோ .. 20 000 இற்கும் அதிகமான இளையவர்கள் புலிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியோ.......நாளாந்தம் சிறுக சிறுக சத்தமின்றி கொன்று புதைக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ...இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மீள குடியேற சென்ற மக்களுக்கு எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, தொழில் தொடங்க எந்த உதவியும் இல்லை. இவை குறித்து எமது தமிழர்களின் பிரதிநிதிகளாக கூறிக்கொள்கின்ற இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு எப்படியாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் போதும்.

இவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதனூடாக தமிழ் மக்களது எல்லா பிரச்சனைகளும் தீரப்போகிறது.

தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது...

உரிமையா? வெங்காயம்....

விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க.....

வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜீவேந்திரன்

Jeevendran

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Saturday, 6 March 2010

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்

( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம் ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! போடப்போட புவனேஸ்வரி, காட்டக் காட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா? அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி. இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது! (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும், அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு.. காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்)

—ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

Tuesday, 2 March 2010

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் தரப்பு தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க முன்றில் இரண்டு பெரும்பான்மை கோரி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. தேர்தல் முறையை மாற்றி அமைத்தல், இனப்பிரச்சனைக்கு சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்கல் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க வேண்டுமென மகிந்த தரப்பு கூறுகிறது.

இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ள ஆளும் தரப்பானது , இலங்கை நாடானது அபிவிருத்தியை நோக்கி மிக வேகமாக பயணிக்கின்றது என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் நாட்டை மீட்க வந்த தேவ தூதர்களாக தம்மை காட்டி வருகிறார்கள். வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்தமை, மகிந்த தரப்பின் இந்த பிரசாரத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு எதிராக கண்டனங்களை எழுப்புதல், அறிக்கைகளை வெளியிடல், விமல் வீரவன்ச போன்ற அடிபொடிகளைக்கொண்டு தூதரகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் போன்ற செயல்பாடுகளின் ஊடாக மகிந்த தரப்பானது சிங்கள மக்கள் மத்தியில் தம்மை சர்வதேசத்திற்கு அடிபணியாதவர்களாக தம்மை காட்டிக்கொள்கிறது . இந்த பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் எடுபட்டும் வருகிறது.

அதேவேளை சரியோ பிழையோ கடந்த அரசாங்கங்களை விட மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது சர்வதேசத்திற்கு பயப்படாமல் செயலாற்றி வருகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது எழுந்த அழுத்தங்களை எதிர்கொண்ட போதும், ஐநா மனித உரிமை விவகாரத்தின் போதும் சர்வதேசத்திற்கு அடிபணியாமல் மகிந்த செயலாற்றி இருந்தார். சோனியாவின் சேலையில் மறைந்து கொண்டு இந்த வீரத்தை அவர் காட்டி இருந்தாலும், இதனால் சிங்கள மக்கள் மத்தியில் அவரின் மதிப்பு பெருமளவு உயர்ந்தது என்பதே தமிழருக்கு கசக்கின்ற உண்மை.

இவ்வாறு உள்ளூரில் தன்னை சண்டியனாக மகிந்த உறுதிப்படுத்திக்கொண்டாலும் சர்வதேச ரீதியாக இடம்பெறுகின்ற விடயங்கள் மகிந்த தரப்பிற்கு அவ்வளவு நல்ல சகுனங்களாக தெரியவில்லை.

அதில் ஒன்றாக GSP+ ஆறு மாத காலத்துக்கு ரத்து என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளமை அமைகிறது. இலங்கையில் ஏற்கனவே ஆடை, இறப்பர், தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதிகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை புள்ளி விபர திணைக்களத்தின் தகவலின் படி சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, 60 000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை வழங்க இந்த அரசாங்கம் செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. GSP + சலுகை இழப்பு காரணமாக 200000 இற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழக்க வேண்டிவருமென கலாநிதி ரூபசிங்க போன்ற மகிந்தவின் எடுபிடி அரசியல் ஆய்வாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

இது போதாதென மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த சொல்லி இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்த மீள் குடியேற்றம் நடந்து அனைத்து தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டால் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு எவ்வாறு தொழில் வழங்குவது என்பது இலங்கை அரசுக்கு தலைவலியாக இருக்கும்.

தமிழ் இளைஞர்களுக்கு அன்போடு வேலை கொடுக்க மகிந்தவிற்கு மனமில்லாவிட்டாலும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மீண்டும் புரட்சிகர இயக்கங்கள் உருவாகலாம். தமிழர்கள் மட்டுமில்லாது சிங்கள மக்கள் மத்தியிலும் ஆயுத கலாசாரம் மீண்டும் தலை தூக்கி கொலை கொள்ளை போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கலாம். இதனால் ஜனாதிபதிக்கு எதிரான சக்திகள் பெரும்சக்தியாக உருவெடுக்கலாம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறான நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர மகிந்த அரசாங்கம் ஆயுதப்படைகளின் உதவியையே நாட வேண்டி ஏற்படும். ஏற்கனவே இந்த சூழலை மனதில் கொண்டே வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே நிலப்பரப்பு, மக்கள் தொகை என்பவற்றோடு ஒப்பிடும் போது உலகத்திலேயே அதிக ஆயுதப்படையினர் இருப்பது இலங்கையில்தான் என சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதேவேளை சர்வதேசத்துடன் குறிப்பாக மேற்கு நாடுகளுடன் இலங்கை முறுகிக்கொண்டுள்ள நிலையில் ஜப்பான்,இந்தியா, சீனா போன்ற நாடுகளே இலங்கையை தாங்கிப்பிடிக்கின்றன. அதிலும் கடந்த வருடம் உலக வங்கி, உலக நாடுகள் எல்லாவற்றையும் விட சீனாவே இலங்கைக்கு அதிக கடன் உதவிகளை வழங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், பாதை அபிவிருத்தி, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி போன்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், திட்டக்கடன்களாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், நிதிகளாக 279.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனூடு சீனா இலங்கை மீது மேற்கொள்ளப்போகும் செல்வாக்குகள், அழுத்தங்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லாம் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இதனிடையே இந்த 2010 மார்ச் மாதம் வழங்கப்படவேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் தொகையான 2 .6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 260 பில்லியன் ரூபாய்கள்) கால அளவு குறிப்பிடப்படாமல் தாமதப்படுத்தப் பட்டிருக்கின்றது.

ஜி.எல் பீரிஸ் போன்றோர், GSP+ சலுகை அப்படி ஒன்றும் பெரிய விடயம் அல்ல, சர்வதேச சந்தை விரிந்து கிடக்கின்றது,சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப்பெற்றுக்கொள்வதற்காக யாரது காலிலும் விழ மாட்டோம் என்று கூறுவது வடிவேலின் கைப்பிள்ளை தனமான நகைச்சுவையாக உள்ளது. எனினும் இது சிங்கள மக்களை உருவேற்றத்தான் என நம்பலாம்.

இவ்வாறான ஒரு சூழல் காரணமாக அத்தியாவசிய பண்டங்களின் விலை குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிக்கும். மின்சாரம், நீர் போன்ற அனைத்து அடிப்படை சேவைகளுக்கான வரி மிக அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களாகவே இருக்கப்போகிறார்கள். அதிலும் அடிமட்ட சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது உறுதியானது.

உண்மையில் கடந்த வருடத்தில் ஏற்றுமதி படு பயங்கர வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மகிந்தவின் கடந்த 4 வருட ஆட்சிக்காலத்தில் 2 ட்ரில்லியன் ரூபாய்களாக இருந்த கடன் தொகையானது தற்போது 4 .1 ட்ரில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என லங்கா பிசினஸ் ஒன்லைன் பெப்ரவரி வெளியிட்ட மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அரசு 459 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. இந்த இழப்பானது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு வருட இழப்பை 100,000 ரூபாய்களாக உயர்த்தியுள்ளது. தற்போது சிறிலங்காவில் உள்ள ஒரு குடும்பத்தின் கடன்சுமை 835,000 ரூபாய்கள் ஆகும்.

எனினும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித உயர்வும் ஏற்படவில்லை. இதுவே இன்றைய உண்மை நிலையாகும். இந்த ஆபத்தான சூழலை சாதாரண சிங்கள மக்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இந்த உண்மையை மகிந்த தரப்பு திட்டமிட்டு மூடி மறைக்கிறது. யுத்த வெற்றி என்ற சகதிக்குள் சிங்கள மக்கள் சிக்கியிருப்பது மகிந்தவிற்கு வசதியாக போய்விட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக போர்க் குற்றம் தொடர்பில் இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டப்ளினில் போர்குற்றம் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மகிந்தவிற்கு எதிராக பெரும் விசாரணை ஒன்று இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வாய்ப்பில்லை என்றாலும் கூட (இந்தியாவை ஆளும் இத்தாலிய அம்மையாரின் கருணையால்) இந்த விடயம் மகிந்தவிற்கு பெரும் மண்டைக்குடைச்சலாகவே இருக்கப்போகிறது. போதாக்குறைக்கு அமெரிக்க, பிரித்தானிய, ஆஸ்திரேலியா முக்கிய பிரமுகர்கள் தமிழர்களின் கோரிக்கை தொடர்பாக ஆதரவு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் போன்றோர் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மகிந்தவின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலம் மலர்படுக்கையாக இருக்கப்போவதில்லை. அது சர்வதேசம் தீட்டிவைத்த ஆப்பால் ஆன மஞ்சமாகவே இருக்கப்போவதாக தோன்றுகிறது. சோனியாவின் சேலை எவ்வளவு காலத்திற்கு இந்த ஆப்பிலிருந்து மகிந்தவை காப்பாற்றப்போகிறது?

கா.ஜெயகாந்தன்

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- கார்த்திகேசு ஜெயகாந்தன்

Thursday, 25 February 2010

இந்தியாவில் ஒரு ஈழம்- Avatar Returns

பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப்பெற்றுக்கொண்டு நாட்டை கொள்ளையடிப்பதற்கு உலகிலுள்ள பல அரசாங்கங்கள் சட்ட அனுமதி வழங்குகின்றன. ஆபிரிக்காவில் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு குழப்பங்களுக்கும் , போர்களுக்கும் இதுவே காரணமாக அமைகிறது. நைஜீரியாவில் பெற்றோலிய எண்ணெய் வளத்திற்காகவும், கொங்கோவில் கொல்டான் (Coltan) கனிமத்திற்காகவும் பல வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.
கொள்ளையுடன் நின்று விட்டால் பரவாயில்லை அதற்கு தடையாக இருக்கின்ற மக்கள் முக்கியமாக பிரதேசவாசிகள் பழங்குடிகள் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே சியராலியோனில் வைரங்களுக்காக இதே மேற்கு நாடுகள் படுகொலைகளை ஏற்படுத்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளை மேற்கு செய்தி ஊடகங்கங்கள் உள்நாட்டு குழப்பங்களாக குறிப்பிட்டு உண்மையை மறைத்து வருகின்றன.
இலங்கையில் கூட விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த வளங்களை சுரண்டுதல் என்ற விடயம் அமைந்தது. இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளம், அதிலுள்ள மீன் வளம் மட்டுமல்லாது எண்ணெய் வளமும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கிழக்கு கரையோரங்களில் காணப்படுகின்ற இல்மனைட் போன்ற தாதுப்பொருட்களை (மற்றும் திருகோணமலை துறைமுகம் போன்றவையும் கூட) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகளை களத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.
வடகிழக்கின் நிலங்களையும் அங்குள்ள வளங்களையும் இப்போது தங்கு தடையின்றி அரசாங்கம் அபகரித்து வருகிறது. புலிகளின் அழிவிற்காக காத்துக்கொண்டிருந்த பல இந்திய நிறுவனங்கள் இப்போதே தமது கடையை விரித்து விட்டன. இந்தியா மூதூர் கிழக்கில் அமைத்துவரும் அனல் மின்நிலையத்திற்காக , அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஏறத்தாழ 45 ஆயிரம் குடும்பங்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
இது போலத்தான் இந்திய அரசாங்கங்களும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக கோடிக்கணக்கில் பணத்தையும் சொத்துகளையும் வாங்கிக்கொண்டு கொள்ளை அடிப்பதை ஊக்குவிக்கின்றன. தமிழக அரசாங்கமானது ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த பரிமாற்றத்தில் அரசியல்வாதிகளுக்கு பலகோடிக்கணக்கான பணம் கிடைத்தாலும், விற்பனைத்தொகையில் தமிழக அரசு உரிமை ஊதியம் (ரோயல்டி) 0.02% மட்டுமே என்பது பலரும் அறியாதது.
அதே போலத்தான் ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அங்குள்ள பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டொலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) . ஆனால் இந்திய அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ள உரிமை ஊதியம் (ரோயல்டி) 7% க்கும் குறைவானதாகும்.
மலையை தமது பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட பழங்குடி மக்கள் இந்த பகல் இரவு கொள்ளையை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் மலைகள் அவர்களின் வாழிடம் மட்டுமல்ல கடவுளும் கூட. எனினும் இந்த மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளைப்போலவே இங்கும் இராணுவ நடவடிக்கைகள் முழு மூச்சாக இடம்பெறுகின்றன. முள்ளிவாய்க்காலில் யுத்தம் இடம்பெறுகிறது என்பது உலகத்திற்கு தெரிந்திருந்தது - ஆனால் அது இந்தியாவின் அழுத்தம் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் உதவியுடன் தமிழர்களும் புலிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
இங்கு பழங்குடிகளுக்கு எதிரான போரை இந்தியாவே நேரடியாக நடத்துகிறது. ஆனால் உலகத்திற்கு தெரியாமல் பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது. காந்தியம் சாத்வீகம் என பேசிக்கொண்டு நீண்ட காலமாகவே பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் அடியாளாகவே இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் எப்போதும் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்கள். ஆனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி, தொடர்கள் கிரிக்கெட் என மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்ற பொது அறிவு இல்லாமல் மக்கள் தனித்தனி தீவுகளாக வாழ்கின்றனர்.
இந்த மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட் குழுக்கள் போராடி வருகிறார்கள். இந்திய அரசாங்கமோ இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தினமும் மக்களை வேட்டையாடி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்தொகையான மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு பெரிய மனிதப்படுகொலைகளையும் அநீதியையும் இந்திய அரசாங்கம் செய்துகொண்டு உலகத்திற்கு இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் கூறி வருகிறது. செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பழங்குடி மக்கள் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவர்கள் மாவோயிஸ்ட்களாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்களது சடலங்கள் காடுகளில் வீசி எறியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன.
இவ்வளவையும் செய்து விட்டு இது எல்லாமே இந்த பழங்குடி மக்களது நன்மைக்காகத்தான் அவர்களது முன்னேற்றத்திற்காகத்தான் என கூசாமல் மன்மோகன்சிங் பொய் சொல்கிறார்.
இந்தியா சுதந்திரமடைந்த இந்த 60 ஆண்டுகளில் இந்த பழங்குடி மக்கள் கல்வி, மருத்துவம்,சுகாதாரம் , போக்குவரத்து, அடிப்படை வசதிகள், நிவாரணங்கள் எதுவுமே கிடைக்கப்பெறாதவர்களாகவே வாழ்கின்றனர். அவர்களிடம் எஞ்சியிருப்பது அவர்களது உயிரும் வாழும் மலையுந்தான்.
அந்த மக்களை வேட்டையாடுவதற்காக பல்வேறு பெயர்களில் இராணுவப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. எப்படி இலங்கை அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே மிக கொடூரமான போரை நடத்தி கடைசி சில நாட்களில் மட்டும் 40 000 இற்கும் அதிகமான மக்களைக்கொன்றதோ, அதே போன்று இந்தியா இப்போது செயற்படுகிறது. ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவதார் திரைப்படத்தில் இடம்பெறுகின்ற அதே விடயம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. நாவி இந்தத்தவருக்கு பதிலாக இங்கே பழங்குடிகள். பண்டாராவுக்கு பதிலாக இங்கே பழங்குடிகள் வாழும் மலைகள். பாத்திரங்களின் பெயரும் இடமும் வேறு ஆனால் கதை ஒன்று. திரைப்படத்தில் கனிம வளத்திற்காக ஆக்கிரமிக்கும் தீயவர்களுக்கு எதிராக நாவி இனத்தவர்கள் போராடி வெற்றி பெற்றதைப்போல இந்திய பழங்குடிகளும் வெற்றி பெறுவார்களா? அல்லது முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதைப்போல இந்திய பழங்குடிகளும் தோற்றுப்போவார்களா?

-- ஜீவேந்திரன்
Jeevendran
இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Friday, 19 February 2010

மகாசங்கத்தினரின் சொம்பை களவாடிய மகிந்த

இலங்கை அரசியலிலும் ஆன்மீகத்திலும் சிங்கள பௌத்த சமூகத்திலும் கொடிகட்டிப்பறந்த நாட்டாமைகளான மகாசங்கத்தினரின் சொம்பு களவாடப்பட்டுள்ளது. இதை களவாடியவர் வேறு யாருமல்ல அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கையின் இன்றைய அரசனான மகிந்த ராஜபக்ஷவே. எந்த மகாசங்கம் அவருக்கு சிறந்த பௌத்த நாயகன் என்று விருது கொடுத்ததோ, எந்த மகாசங்கம் புலிகளை தோற்கடித்தவுடன் தேசப்பிரேமி என பட்டம் கொடுத்து கௌரவித்ததோ அதே மகாசங்கத்தின் சொம்பைத்தான் மகிந்த இன்று களவாடி இருக்கிறார். தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த நாட்டாமைகள் இப்போது சொம்பிழந்து நிற்கிறார்கள்.

தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்து ஜனாதிபதியாக முடிசூடிக்கொண்டாலும், சரத்பொன்சேகா தனக்கு பெரும் குடைச்சலாக இருப்பதை மகிந்தவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தோற்கடிக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த தன்னை, சிங்கள மக்களும் நாடும் தான் வாழும் வரை மன்னனாக.. தெய்வமாக போற்றி புகழ் பாடும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சக்கரவர்த்தியாக கொண்டாடும். எதிர்ப்பில்லாத தனிப்பெரும் தலைவனாக தானும் தன் குடும்பமும் உற்றார் உறவினரும் போட்டியாளர் இல்லாமல் நாட்டை ஆளலாம் (கொள்ளையடிக்கலாம்) என்ற மகிந்தவின் கனவுக்குளத்தில் சரத் பொன்சேகா பெரிய கல்லை தூக்கிப்போட்டார். ஜனாதிபதித் தேர்தலில் மோசடி செய்து வெல்ல வேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டார்.

போதாக்குறைக்கு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வேறு வருகிறது. இந்த நிலையில் தனது கனவுகளுக்கு தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்கும் சரத்பொன்சேகாவை களத்திலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் மகிந்தவுக்கு நேர்ந்தது. இந்த நேரம் பார்த்து போர்க்குற்றவாளிகளை தான் காட்டிக்கொடுக்கப்போவதாக சரத் பொன்சேகா செய்தியாளர் மாநாட்டில் உளறிக்கொட்டினார். ஏற்கனவே தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்ததால் துரோகியாக பார்க்கப்பட்ட சரத் பொன்சேகாவை உள்ளே தூக்கிப்போட இது வசதியாக அமைந்து விட்டது.

எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் இடையில் இந்த மகா சங்க நாட்டாமைகள் புகுந்தார்கள்.

மகா சங்கத்தினர் என்று சொல்லப்படுவது ஈரானின் ஆன்மீக தலைமைக்கு சமமானவர்கள். இலங்கையின் உண்மையான அரசர்கள் அவர்களாகவே இருந்தனர். அஸ்கிரிய, மல்வத்தை எனும் இரு பௌத்த உயர் பீடங்கள் இலங்கையின் சர்வ வல்லமை கொண்ட ஆன்மீக பீடங்கள். ஜனாதிபதி முதல் கொண்டு சகலரும் அடிக்கடி அவர்களை கண்டு காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொள்வது வழமை. ஏதாவது திட்டங்களை செய்யும் முன்னர் அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்வார்கள். அதே போல மகாசங்கத்தினரும் சிங்கள பௌத்த நலனை முன்னிறுத்தி ஆலோசனைகளை முன்வைப்பார்கள்.

ஈழப் பிரச்சனையிலும் கூட தமிழர்களுக்கு அதிக உரிமைகள் சென்று விடக்கூடாது என்பதில் மகாசங்கத்தினர் மிக கவனமாக இருந்தனர். ஈழக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் புலிகளுடன் சில உடன்பாடுகளுக்கு வர முற்படுகையில் , அதற்கு தடையாக இவர்கள் இருந்தனர். மகாசங்கத்தினரை மீறி ரணில் அல்ல யாருமே எதுவுமே செய்ய முடியாத சூழலே இதுவரை இருந்தது.

எனினும் வீழ்த்தப்பட முடியாத புலிகளை வீழ்த்தியது போலவே இப்போது மகாசங்கத்தினரையும் மகிந்த வீழ்த்தி இருக்கிறார். இது இலங்கை அரசியலில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

சரத்பொன்சேகாவை கைது செய்தமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாட்டாமைகளான மகாசங்கத்தினரை சந்தித்து முறையிட்டனர். அவர்களும் மகாசங்க சபாவைக்கூட்டி மகிந்தவை கண்டித்து (அல்லது சரத்பொன்சேகாவை விடுதலை செய்யும் படி) ஒரு கூட்டறிக்கையை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மகிந்தவிற்கு ஆதரவான பிக்குகள் விடயத்தை மகிந்தவின் காதில் ஓதிவிட்டனர்.

இந்த கூட்டறிக்கையை வெளியிட வேண்டாமென மகிந்த தனது அமைச்சர்கள் மூலம் மகாசங்கத்தினருக்கு தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்தினர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

அரசியல் நரியான மகிந்த அடுத்தகட்ட காய்நகர்த்தலை மேற்கொண்டார். தமக்கு சார்பான பௌத்த பிக்குகளில் ஒரு பிரிவினரைக்கொண்டு சில முக்கிய தலைகளை வளைத்துப்போட்டார். முக்கியமாக களனி பல்கலைக்கழக பெருந்தலையான வண. பலபிட்டியாவே குசலதம்ம ஹிமி , மேலும் சில முக்கிய தலைகளான வண. கம்புருகமுவே வஜித, வண. பெங்கமுவே நாலக போன்ற பிக்குகளை கொண்டு திட்டத்தை வகுத்தார். முதல் கட்டமாக அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தோன்றி சரத்பொன்சேகா கைது தொடர்பில் மதகுருக்கள் தலையிடுவது தவறு என தெரிவித்தனர். தவறு செய்த சரத்பொன்சேகா அதற்குரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு எதிராக பிக்குகள் செயற்படுவது அநீதியானது என மறைமுகமாக மகாசங்கத்தினரை சாடினார்கள்.

அடுத்த கட்ட தாக்குதலாக மகிந்த மகாசங்க பீடத்தின் கீழ் மட்ட பிக்குகளை குறிவைத்தார். அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி தேசத்தை பாதுகாக்கவருமாறு வேண்டினார். மீன்கள் தாமாகவே மகிந்தவின் வலைக்குள் துள்ளி குதித்தன. (அவை தற்போது மீன்தொட்டியில் வசதியாக உள்ளன). இதன் மூலம் மகாசங்க பிக்குகளிடையே மகிந்த ஆதரவு, மகிந்த எதிர்ப்பு என்ற இரு தரப்புகள் உருவாகின.

இந்த பிரித்தாளும் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. மகாசங்கத்தினர் கொஞ்சம் திணறித்தான் போனார்கள். இருந்தாலும் சங்கசபாவை கூட்டி மிகுதியை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த மகாசங்கத்தினருக்கு இடியாக இறங்கியது அந்த செய்தி.

சங்கசபா கூட்டப்பட்டால் கண்டியிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விடப்படும். வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படும். அந்தப்பழி மகாசங்கத்தினர் மீது சுமத்தப்படும் என்பதுதான் அந்த செய்தி.

அரண்டு போனார்கள் மகாசங்கத்தினர். இத்தனை காலமாக தீர்ப்பு சொல்லிவந்த நாட்டமைகளின் அடிமடியிலேயே கைவைத்தார் மகிந்த. வயிறு கலங்கிப்போனது மகாசங்கத்தினருக்கு. வெளிக்குப்போகலாம் என்று சொம்பைத்தேடினால் சொம்பைக்காணவில்லை.

சொம்பிழந்த நாட்டாமைகள் இனி எப்படி தீர்ப்பு சொல்லப்போகிறார்கள்??? என்று மட்டும் நீங்கள் கேட்காதீர்கள் ஏனென்றால் தீர்ப்பு சொல்ல மட்டுமல்ல ‘அதுக்குக்கூட’ இப்போது சொம்பில்லாமல் போய்விட்டது.

-- ஜீவேந்திரன்

Jeevendran

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Monday, 15 February 2010

காமம் கொலை ஜெயேந்திரர் - வாழ்க சங்கர மடம்

சங்கரராமன் கொலை வழக்கில் நடப்பவற்றைப் பார்த்தால் இந்தியாவில் எவ்வளவு மோசமான ஊழல் மோசடி நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்திய சட்டமும் நிர்வாகமும் பிராமண சாதியாருக்கு சார்பாக எவ்வாறு வளைகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த சாட்சியாக அமைகிறது.

ஒவ்வொரு தடவை சாட்சிகள் விசாரிக்கப்படும் போதும் சாட்சிகள் தாம் அப்படி சொல்லவில்லை என்று பிறழ்சாட்சியாக மாறுவதும், தமிழ்நாட்டு பத்திரிகைகள், ‘சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் இரண்டு சாட்சிகள் பல்டி’... ‘மேலும் ஏழுசாட்சிகள் பல்டி’.. என செய்திகள் போடுவதும் வழமையாகி விட்டது. இப்படி இதுவரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ள போதும் தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் ஏதோ கிரிக்கெட் விளையாட்டில் நேர்முக வர்ணனை செய்வது போல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவதை வெகு சாதாரணமாக சொல்லுகின்றன. நீதியின் பக்கம் இருக்க வேண்டிய செய்தித்தாள்களுக்கு பிரபுதேவா நயன்தாரா பிரச்சனை பற்றி எழுதவே நேரம் போதாமல் இருக்கிறது.

ஆனால் இதே தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு அவரது காமலீலைகள் விசாரணைகளில் வெளிவரத்தொடங்கியதும் ஆனந்தக்கூத்தாடின. ஒரு கொலைகாரன், காமக்கொடூரன், மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்பதற்காக அவை அப்படி ஆனந்தக்கூத்தாடின என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். தங்களுக்கு கிளுப்பான செய்தி கிடைத்துவிட்டது...ஜெயேந்திரரின் ஜல்சா என்று எழுதியே பத்திரிகை விற்பனையை கூட்டி விடலாம் என்பதுதான் அதற்கு காரணம்.

அவை போட்டி போட்டு செய்திகளை வெளியிட்டன. ஜெயேந்திரர் ஹார்லிக்ஸ் ஷர்மிலாவுடன் உல்லாசம், லீலாவுடன் லீலை, சீரங்கம் உஷாவுடன் அர்த்தராத்திரியில் சௌன்தர்ய லஹரி, சொர்ணமால்யாவுடன் காம லீலை இப்படி சினிமா கிசுகிசு போல படு இரசனையாக எழுதித்தள்ளின.

இத்தனைக்கும் சங்கரராமன் உயிரோடு இருந்த போது இந்தப் பத்திரிகைகளுக்கு சங்கர மடத்தில் நடக்கின்ற ஊழல்கள்களை பல கடிதங்கள் மூலம் தொடர்ந்து தெரிவித்திருக்கிறார். ஆனால் யாரும் அதுபற்றி கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பில் புலன்விசாரணையை மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்த வேண்டிய பத்திரிகைகள் நடிகைகள் யாரோடு படுத்தார்கள், யாரோடு இரவு விடுதிகளில் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டார்கள் என்பது பற்றி வாசகர்களுக்கு சுடச்சுட செய்திகளை தந்து கொண்டிருந்தன .

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று தெரிந்த சங்கராச்சாரி காவிக்கும்பல் வழக்கை தமது பிராமண சக்தியை பாவித்து புதுவைக்கு மாற்றிக் கொண்டனர். ( தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை என்னால் விசாரிக்க முடியாது. நான் ஜெயேந்திரரின் பக்தன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.) காவிக்கும்பலுக்கு காவடி எடுக்கும் உச்ச நீதிமன்றும் தன்னாலான உதவிகளை தமது ஆன்மீக குருக்களுக்கு செய்தது. தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று கட்டளையிட்டது.

பத்திரிகைகளும் காம லீலைகளை எழுதி எழுதி ஓய்ந்து விட்டதாலும் அதன் பிறகு பிரபுதேவா நயன்தாரா போன்ற நாட்டுக்குத்தேவையான சமூக விடயங்கள் வந்து விட்டதாலும் ஜெயேந்திரரை மறந்துவிட்டன. எப்போதாவது சாட்சிகள் பல்டி என ஒரு செய்தியைப்போட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கின்றன.

ஆனால் கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201) போன்ற கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு அதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு , குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு ஜெயேந்திரர் 61 நாட்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையிலும், விஜயேந்திரர் 31 நாட்கள் சென்னை மத்தியச் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது பற்றியோ, இந்த வழக்கிலுள்ள நியாய தர்மங்கள் பற்றியோ அவை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

சங்கரராமன் குடும்பத்தினர் காலங்காலமாக சங்கரமடத்தில் சேவை செய்து வந்தவர்கள். ஜெயேந்திரரும் விஜெயேந்திரரும் காவியை போர்த்துக்கொண்டு மடத்தில் அடிக்கின்ற கொள்ளைகள், காம கூத்துகள் தொடர்பில் சங்கரராமன் பெரும் அதிருப்தியை கொண்டவராக இருந்து வந்திருக்கிறார். இது தொடர்பில் சோமசேகரகனபாடிகள் எனும்பெயரில் காவல்துறை, பத்திரிகைகள், வருமான வரித்துறை,அறநிலையத்துறை போன்றவற்றுக்கு அடிக்கடி ஆதாரங்களுடன் புகார் கடிதங்களை எழுதி வந்திருக்கிறார். ஆனால் பிராமண சக்தியின் சர்வ வல்லமையை உணர்ந்தவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை.

பின்னர் இறுதி எச்சரிக்கை என ஜெயேந்திரரின் கொள்ளைகள் காம லீலைகள் தொடர்பில் ஒரு கடிதத்தை எழுதி தன் சொந்தப்பெயரிலேயே ஜெயேந்திரருக்கு அனுப்பிஇருக்கிறார். அந்தக் கடிதத்தை அனுப்பிய மூன்று நாட்களிலேயே அவர் கூலிப்படையால் கொல்லப்பட்டார். ரவி சுப்பிரமணியம், அப்பு போன்ற சிலரின் உதவியுடன் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சங்கரராமனை கொல்லும்படி ஜெயேந்திரர் உத்தரவிட்டது முதல் திட்டம் தீட்டப்பட்டு கொலை நிகழ்த்தப்பட்டது வரை அரசதரப்பு சாட்சியாக மாறிய ரவி சுப்பிரமணியம் அளித்த 20 பக்க வாக்குமூலத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயேந்திரர் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு வாங்கிக்கொடுத்தது, சொர்ணமால்யாவின் கணவரை மிரட்டி விவகாரத்து வாங்க வைத்தமை முதல் ஹார்லிக்ஸ் ஷர்மிளா, லீலா ,சீரங்கம் உஷா, பிரேமா, பத்மா போன்ற பல பெண்களுடனான ஜெயேந்திரர் கொண்டிருந்த தகாத காம உறவுகள் வரை ரவி சுப்பிரமணியம் அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விஜெயேந்திரர் அவரது தம்பி ரகு போன்றோரின் பண, நகை, நில கொள்ளைகள், சங்கர மடத்திலேயே இடம்பெற்ற விபசார நடவடிக்கைகள் என்பவற்றையும் ஜெயேந்திரரின் வலது கையாக விளங்கிய ரவி சுப்பிரமணியம் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதுதவிர தனது கணவரின் கொலை குறித்து தமிழக பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்திருந்த சங்கரராமனின் மனைவி பத்மாவும் குடும்பத்தினரும் ஜெயேந்திரரே இந்த கொலையின் பின்னணியில் இருப்பதை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்ததுடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பலதடவைகள் ஜெயேந்திரரின் சகாக்கள் நள்ளிரவுகளில் சங்கரராமனின் வீட்டில் நுழைந்து மிரட்டியும் வீட்டை உடனே காலி செய்யுமாறும் எச்சரித்தும் வந்திருந்தனர்.

இது எதுவும் கண்டு கொள்ளப்படாத நிலையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புதுவை நீதிமன்றில் இடம்பெற்ற குறுக்கு விசாரணையின் போது சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் ஏற்கனவே காஞ்சிபுரம் நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து மாறி சாட்சியமளித்தனர். அதற்கான காரணத்தை நிர்பந்தத்தை யாரும் அறிவர்.

''காவ‌ல்துறை‌யின‌ர் காட்டிய புகைப்படங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம்'' எ‌ன்று‌ம் ''எங்கள் வீட்டிலிருந்து காவ‌ல்துறை‌யின‌ர் எடுத்து வந்த கடிதம் சங்கரராமனின் கையெழுத்து இல்லை...இந்த கடிதத்தை இப்போதுதான் பார்க்கிறோம் எ‌ன்று‌ம் கொலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது'' எ‌ன்று‌ தெரிவித்ததாக வெட்கமில்லாமல் தமிழக பத்திரிகைகளும் இதழ்களும் செய்தி வெளியிட்டன. இங்கு நடந்திருக்கக்கூடிய ஊழல், மிரட்டல், உயிர் அச்சுறுத்தல், சங்கர மடத்தின் கொடூரம் பற்றி பத்திரிகைகள் மட்டுமல்ல வேறு எந்த அமைப்புகளும் கூட கவனத்தில் கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

இதே போல் ஆனந்த கிருஷ்ண தர்மா, காசாளர் கணேஷ் நேரடி சாட்சிகளான கணேஷ் குப்புசாமி துரைக்கண்ணு எனத்தொடங்கி இப்போது வரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் கொலை கொள்ளை காம வெறியாட்டம் என சகல குற்றங்களையும் செய்த ஜெயேந்திரரும் காவிக்கும்பலும் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படப்போகிறார்கள். சுமார் பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கொண்ட சங்கர மடம் மீண்டும் ஒருமுறை தனது பலத்தை பிராமணிய வெற்றியை நிருபிக்கப்போகிறது. இளிச்சவாயர்களான தமிழர்கள் நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டே வழமைபோல தோற்கப்போகிறார்கள் . தமிழனின் தலை எழுத்தை யார்தான் மாற்றமுடியும்?

(அதுசரி ஜெயேந்திரர் செய்த குற்றங்களைத்தானே பிரேமானந்தாவும் செய்தார். அவருக்கு ஆயுள் தண்டனை . பிராமணன் என்பதால் ஜெயேந்திரருக்கு விடுதலையா என்று மட்டும் நீங்கள் பின்னூட்டத்தில் கேட்கவேண்டாம்).

சென்னையிலிருந்து - இரா. வெங்கட்மணி

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Jeevendran

Thursday, 11 February 2010

நீலப்படமும் சாரு நிவேதிதாவும்

அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அதை வாசிக்கும் போது ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக எழுத முடியுமா என்றுதான் நினைத்தேன் (இந்தாளை நிறையப்பேர் எழுத்தாளன் என்று சொல்வதில்லை 'அரிப்பெடுத்த ஒரு லூசு' என்றுதான் சொல்கிறார்கள்). இவர் கமல்ஹாசனைப்பற்றியும் இளையராஜவைப்பற்றியும் கேவலமாக எழுதும் போதெல்லாம் இந்தாள் ஒரு மன நலம் சரியில்லாதவர் என்றே எனக்கு தோன்றியிருக்கிறது. அப்போதெல்லாம் இந்தாளுக்கு மறுப்பெழுத நினைத்ததுண்டு...ஆனால் போனால் போகட்டும் லூசு என்று வாளாவிருந்தேன்.

இவரைப்போன்ற சிலர் பிரபலங்களை திட்டி எழுதி பிரபலமாக நினைக்கிறார்கள். பிரபலங்களை பற்றி ஏதாவது வேண்டுமென்றே சர்ச்சையாக எழுதிவிட்டால் வாசகர் வரவு அதிகரிக்கும் என்பது சாரு நிவேதிதா போன்ற பன்னாடைகளின் தந்திரம்.(அல்லது இருக்கவே இருக்கிறாரே இந்து தீவீரவாதி ஜெயமோகன்..அவரைப்பிடித்துக்(கொல்வார்) ) இது ஒரு சாபக்கேடு. கமல்ஹாசன் ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரை மாற்றி உன்னைப் போல் ஒருவன் என்று வைக்க காரணம் தனது விமர்சனம்தானாம் என்கிறார் சாரு. தனது தளத்தை வாசித்து விட்டு (பயந்து போய்) படத்தின் பெயரை மாற்றிவைத்தாராம் கமல்.(இது என்ன கொடுமை? சுய புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? )

சாரு நிவேதிதாவிடம் தரமான படங்கள் என்றாலே அது ஹொலிவூட் படங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை ஹொலிவூட் புராணந்தான். ஆனால் அமெரிக்காவில் தயாராகும் முக்கால்வாசிப்படங்கள் குப்பை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவதார் போல ஒருசில படங்கள் வந்து உலகை கலக்குவதால் சாருவுக்கு அந்த பிரமை ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் அமெரிக்காவுக்கு வெளியேதான் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன. ஈரான்,கொரியா, இலங்கை(சிங்களம்), ஜப்பான் , சீனா, பிரான்ஸ் போன்ற இன்னும் எத்தனையோ கவனிக்கப்படாத நாடுகளில் வெளிவந்த திரைப்படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பரிசுகளை அள்ளிச்செல்கின்றன. அமெரிக்க படங்களுக்கு பரிசு கொடுக்க அமெரிக்காவின் ஒஸ்காரை விட்டால் வேறு கதி இல்லை. அமெரிக்காவின் உலக வர்த்தக பலத்துடனான தயாரிப்பு சக்தியை வைத்துக்கொண்டு தமிழ் படங்களை விமர்சனம் செய்கின்ற சாரு நிவேதிதா தான் ஒரு கூமுட்டை என்பதை காட்டிவிடுகிறார் .

//நான் சோழர் குலப் பெருமை பேசும் வீரத் தமிழன் இல்லை; ஆனால் சோழர்கள் மேற்கே தென்னாஃப்ரிக்காவை ஒட்டியுள்ள தீவுகளிலிருந்து கிழக்கே கம்போடியா வரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர்கள். அவர்களைத்தான் இப்படிக் காட்டுமிராண்டிகளைப் போல், நர மாமிசம் தின்பவர்களாகக் காட்டியிருக்கிறார் ஒரு தமிழ் இயக்குனர். பாரம்பரியப் பெருமை கொண்ட ஒரு இனத்தின் மீதே சேற்றை வாரி இறைத்து விட்டு, டைட்டிலில் சோழர், பாண்டியர் குல வரலாற்றுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போட்டு விட்டால் ஆயிற்றா..//' என்கிறார் சாரு நிவேதிதா.

ஒரு திரைப்படம் கட்டாயம் வரலாற்று உண்மைகளையும், சரித்திர ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறு சரித்திர ஆய்வுகளின் அடிப்படையில் தயாராகின்ற எத்தனையோ படங்கள் இருகின்றன. ஆனால் புனைகதைகளின் அடிப்படையில், கற்பனைகளின் அடிப்படையில் கடந்த காலத்தில் நடந்தாக ஒரு திரைப்படம் வெளிவரக்கூடாதா?

ஒரு இயக்குனரின் படைப்பாளியின் கற்பனையை சாரு நிவேதிதா கட்டுப்படுத்த நினைப்பது சர்வாதிகாரமில்லையா?

இதைவிடக்கொடுமை எதுவென்றால், எழுத்துலகில் மிக கேவலமான காமவெறிபிடித்த எழுத்தாளராக காறித்துப்பப்படும் சாரு நிவேதிதா ஆயிரத்தில் ஒருவன் பற்றி இப்படி சொல்கிறார்-

//ஏற்கனவே வன்முறையும், பாலியல் விபரீதங்களும் மிகுந்த நமது தமிழ் சமூகத்தில் இது போன்ற படங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாக இந்தப் படத்துக்கு வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்கின்றனர். ” என் கிட்ட ’ காண்டம் ’ இருக்கு; படுத்துக்க வர்றியா? ” என்று ஆண்ட்ரியாவிடமும், ரீமா சென்னிடமும் கேட்கிறார் கார்த்தி. ஒரு காட்சியில் அதே கார்த்தியை மல்லாக்கப் போட்டு அவருடைய இரண்டு பக்கத்திலும் அந்த இரண்டு பெண் பாத்திரங்களும் குப்புறப் படுத்த நிலையில் ஏறிக் கொள்கின்றனர். காட்டில் குளிர்கிறதாம். இவ்வளவுக்கும் ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார். அப்படியே அவர் தன்னுடைய பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது திரை அரங்குகளில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. ’ காண்டம் இருக்கிறது; செய்யவா? ’ என்று கேட்ட கார்த்தி அந்த இனிய வாய்ப்பை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஐயம் கார்த்திக்கு எழுந்ததோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழுந்தே இருக்கும். இப்படி படத்தின் முதல் பாதி முழுவதும் நீலப்படமாக (Threesome) இருக்க , இரண்டாவது பாதியை பைத்தியக்காரனின் உளறல் என்று சொல்லலாம். //

இதை எழுதின விதத்தை பாருங்கள் //கார்த்தியை மல்லாக்கப் போட்டு....// ... //ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார்//....//பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது// ... படத்தை பார்த்த யாருக்கும் இவ்வளவு கேவலமான எண்ணங்கள் தோன்றியிருக்குமா? அல்லது எழுதியிருப்பார்களா? போதாதற்கு இன்னும் சொல்கிறார்-

//இந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. ஆயிரத்தில் ஒருவனில் இது போன்ற ஏராளமான கிளுகிளு காட்சிகள் தணிக்கைத் துறையினரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் முதல் நாள் பார்த்த போது இருந்த இந்த உலகத்தரமான காட்சி மறுநாள் அதே திரையரங்கில் பார்த்தபோது நீக்கப்பட்டிருந்தது. செல்வராகவனே கால் மணி நேரப் படத்தை நீக்கி விட்டதாக பேட்டி அளித்துள்ளார். ஆனால் ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை//

படம் சரியில்லை என்றால் இரண்டாவது தடவை ஏன் போனார்?? அதிலும் -'ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை' -என்ற கோபம் வேறு(ஆசையாக எதிர்பார்த்து போனவருக்கு கோபம் வராதா என்ன?).

அடுத்ததாக சொல்கிறார்-

//நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த fetish ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும் பல காட்சிகள் ஆயிரத்தில் ஒருவனில் உண்டு. செல்வராகவன் ஆங்கிலப் படங்களுக்கு இணையான தரம் என்று இதைத்தான் சொல்கிறார் என்று கருதுகிறேன்//

இந்த கண்றாவி எல்லாம் வருவது இவருக்கு எப்படி தெரியும். இந்த மாதிரியான fetish வகை படங்களையும் நீலப்படங்களையும் பார்த்துவிட்டுத்தான் சாரு நிவேதிதா தனது எழுத்துகளில் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

அது போகட்டும் என்று விட்டால் திடீர் என்று இலங்கைப்பிரச்சனைக்கு தாவுகிறார்.

//ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது? //

இப்படி செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி குறைகூறும் சாரு நிவேதிதா ஈழப்போராட்டம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? //இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான்//

ஈழப்போராட்டம் ஆரம்பமானது எப்போது...? இந்திய இராணும் வந்தது எப்போது...? இந்திய இராணும் கற்பழித்தது வடகிழக்கு தமிழ் பெண்களையே தவிர சிங்கள பெண்களை அல்ல. இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல் எழுதுகின்ற சாரு நிவேதிதா செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி பேசுவதை பார்க்கும் போது வாயடைத்துப்போகிறோம்.

அதுமட்டுமல்ல அவர் ஆடை வடிவமைப்பாளரையும் கூட விட்டு விடவில்லை...

//இந்தப் படத்தில் பாராட்டக்கூடிய அம்சங்கள் என்று ஆடை வடிவமைப்பாளர் (எரும் அலி) மற்றும் பார்த்திபனின் நடிப்பைச் சொல்லலாம். ஆனால் ஆண்ட்ரியாவைத் தவிர படத்தின் மற்ற இரண்டு பிரதான பாத்திரங்களான கார்த்தியும் ரீமா சென்னும் ஜட்டி பனியனிலேயே நடித்திருப்பதால் எரும் அலியை பாராட்ட முடியவில்லை// திரும்ப திரும்ப சுப்பனின் கொல்லைக்குள்ளேயே (ஜட்டிக்குள்ளேயே) சுத்துகிறார் மனுஷன்.

ஒரு மொடாக்குடிகார, மற்றவர்களின் எழுத்தை திருடி தனது பெயரில் போட்டுக்கொள்கின்ற, சமூக நோக்கமற்ற, கீழ்த்தரமான காமத்தை வலிந்து புகுத்தி வாசகர்களை கவர நினைக்கின்ற, பொது இடங்களில் கூட ரௌடி போல நடந்தது விளம்பரம் தேடுகின்ற, தனக்கு போட்டியென்று நினைக்கும் எழுத்தாளர்கள் மீது தனிப்பட்ட வசைபாடல்களை செய்து அதிலும் விளம்பரம் தேடுகின்ற, ஒரு மூன்றாந்தர மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளரிடமிருந்து வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்?

(அதற்காக ஆயிரத்தில் ஒருவன் சிறந்த படம் என்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்)

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

ஜீவேந்திரன்

Jeevendran

Wednesday, 10 February 2010

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

சரத் பொன்சேகாவை இராணுவத்தினர் அடித்து இழுத்து கடத்திப்போன போனபோது... எனக்கு தோன்றியது இதுதான் - 'வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'.

அப்போது சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதியாக இருந்தார். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள் அதிகம். கடத்தல் காணாமல் போதல் வெகு சாதாரணமாக இருந்தது. ஏற்கனவே இராணுவ தளபதியாக இருந்தவர் ஏதோ தன்னால் முடிந்த அளவு தமிழரின் பிணங்களை செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் புதைத்துவிட்டு போயிருந்தார். அதைத்தொடர்ந்து வந்த சரத்பொன்சேகாவும் முன்னவர் விட்ட பணியை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா, தான் ஒரு சிங்கள பௌத்த வீரர் என்பதை எப்போதும் காட்டிக்கொள்வதில் தயக்கமில்லாதவர். போர் நிறுத்த உடன்படிக்கையை அவர் ஒரு பொருட்டாகவே மதித்திருக்கவில்லை. (புலிகள் உட்பட யார்தான் அதை மதித்தார்கள்?).

அந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் என்னைபோன்ற செய்தியாளர்கள் என்றால் சரத்பொன்சேகாவிற்கு அவ்வளவு பிடிப்பதில்லை. அதுவும் தொலைக்காட்சி படப்பிடிப்பு என்றால் அதோகதிதான். எல்லாப்பகுதிகளும் இறுக்கமானவையாகவே இருந்தன.

போர் நிறுத்த உடன்படிக்கையில் சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கவில்லை. என்னைப்போன்ற செய்தியாளர்களை விடுங்கள், ஜெயலத் ஜெயவர்த்தன போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கே நாக்கு தள்ளிப்போனது.

பிரதமராக இருந்த ரணிலை விட சரத்பொன்சேகாவிற்கு யாழ்ப்பாணத்தில் பலம் அதிகம். அப்போதுதான் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யும் விடயம் வந்தது. இங்கு இருந்த சிக்கல் என்னவென்றால் யாழ்ப்பாணத்தின் ஏறத்தாழ கால்வாசி பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்தது. தீவுப்பகுதிகள், பலாலி, வலிவடக்கு, என ஏராளமான கரையோரங்கள் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டு அகதிகளாக முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்தனர் (இப்போதும் அதே நிலைதான்).

அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களின் மையப்பகுதியில் இல்லாவிட்டாலும் எல்லைகளில், ஓரங்களில் மக்களை மீள் குடியேற்ற சமாதான உடன்படிக்கையின்படி இணக்கம் காணப்பட்டது. எனினும் சரத்பொன்சேகா பிடிவாதமாக அதனை மறுத்து விட்டார். அனைவரையும் இல்லாவிட்டாலும் சிறு தொகையினரையாவது குடியேற்ற அனுமதிக்குமாறு காலில் விழாத குறையாக கேட்கப்பட்டது. அதே போல சமாதான நல்லிணக்க சபை யாழ் ஆயர் இல்லத்தில் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட சரத்பொன்சேகா திரும்பவும் தனது பிடிவாதத்தையே முன்னிறுத்தினார். உயர் பாதுகாப்பு பிரதேசங்களில் மக்களை மீள குடியமர்த்த விடமாட்டேன் என்பதே அவரது முடிவாக இருந்தது.

ஒரு வகையில் அமைதி பேச்சு முறிவடைய இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. (விடுதலைப்புலிகள் மக்களை அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதில் ஏன் அவ்வளவு அக்கறையாக இருந்தனர் என்பது வேறு கதை. அவர்களும் தமது ராணுவ நலன்களை இதில் முன்னிறுத்தினார்கள் என்பது வெளிப்படை).

சரத்பொன்சேகாவின் பிடிவாதத்தின் பின்னணியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் நிழல் இருந்திருக்கலாம். சரத்பொன்சேகாவிற்கு பதிலாக வேறு ஒரு இராணுவ தளபதி இருந்திருந்தாலும் சில சமயம் இப்படியேதான் நடந்திருக்கலாம்.

மறுபுறம் சரத்பொன்சேகாவின் பதவிக்காலத்தில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் ,காணாமல் போனார்கள்.( பல குற்றங்களின் பின்னணியில் இராணுவத்தின் ஆசியுடன் ஈ.பி. டீ.பி யினர் இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது). எத்தனையோ தாய்மார்கள் கதறக்கதற பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

சரத் பொன்சேகா ஒரு சிங்கத்தைப்போல யாழில் உலா வந்தார். சிங்கள இராணுவத்தினரின் நலன்களே தனக்கு முக்கியம் என்பதை அவர் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். தானும் இராணுவத்தினரும் தமிழர்களின் பூமியில் அடாவடித்தனமாக ஆக்கிரமித்தே இருக்கிறோம் என்பதை அவர் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை. சிங்கள இராணுவத்தினர் அவரை ஒரு கடவுளைப்போல பார்த்தார்கள்..மதித்தார்கள்.

ஆனால்.... இப்போது அதே சரத் பொன்சேகாவை அதே இராணுவத்தினர் ஒரு நாயைப்போல் அடித்து உதைத்து ,பிடரியில் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். தமிழ் தாய்மார்களைப்போல் சரத்தின் மனைவி இன்று அழுகிறார்.

இப்போது சொல்லுங்கள்.....ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்....சரிதானே..???

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Jeevendran

Tuesday, 9 February 2010

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு

இலங்கை பாராளுமன்றம் செவ்வாயன்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் நாள் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் (19 - 26 ) இதற்கான வேட்பாளர் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட முடியாதபடி அவரது பிரஜாவுரிமை பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கூட்டணியில் போட்டியிடுபவர்களை தெரிவு செய்யுமுகமாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக தலைமையில் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியும் சகோதரர்களுமே இதில் செல்வாக்கு செலுத்துவார்கள் என்பது வெளிப்படையானது .

இதேவேளை ஏற்கனவே எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்கள் கட்சிதாவி அரசாங்கத்திடம் சென்றுவிட்டனர். அவர்கள் தற்போதுள்ள அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர். தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் இவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது அரசாங்கத்தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் எனத்தெரிகிறது.

மேலும் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். (ஏற்கனவே மகிந்தவின் குடும்பத்தைச்சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்தில் உள்ளனர் ). இந்த அரச குடும்பத்தின் அடுத்த வாரிசும் இத்தேர்தலில் இறங்குவதால் தேர்தல் களம் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேபோல ஐக்கிய தேசிய கட்சியிலும் ரணில் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு வேட்பாளர் தேர்வு சூடு பிடித்துள்ளது.

மகிந்த தரப்பினர் தேர்தலில் பெயருக்கு போட்டியிட்டாலும் தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தின் கையில் இருப்பதால் (அவரது மனைவியும் மகளுந்தான்) மகிந்த தரப்பின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார்கள் சிலர்.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவரது மனைவி செய்தியாளர்களை சந்தித்து தனது கணவர் கைது செய்யப்படவில்லை கடத்தப்பட்டுள்ளார், அவரை சந்திக்க விடவில்லை, அவருக்கு தினமும் கொடுக்க வேண்டிய மருந்துகளை வழங்கவிடவில்லை எனக்கூறி அழுதுள்ளார். ஆனால் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு புறம் ஊடகப்போரும் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை பொன்சேகாவை மீட்டுத்தரும்படி ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோதே இந்தக்கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன் பின்னர் செவ்வாயன்று நாடு திரும்பிய ரணில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தமது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Monday, 1 February 2010

வேட்டை ஆரம்பமாச்சுடோய்..! - மகிந்த ராஜபக்ஷ

தேர்தல் முடிவை வெளியிடுவதில் பல தில்லுமுல்லுகளை செய்து (இவை பற்றிய தகவல்களை எனது தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளி வாய்க்கால் தொடர்ச்சியா? என்ற கட்டுரையில் பார்க்கவும்) ஒருவாறு பதவியை தக்கவைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ தற்போது தனது வேட்டையை முழு வேகத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்.

மகிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அவரது அன்புத்தம்பி கோதாபே ராஜபக்ஷவின் தலைமையில் தங்களுக்கு எதிரானவர்கள் என கருதப்படுவோரை பழிவாங்க (அல்லது போட்டுத்தள்ள) புதிய குழுவொன்று அமைக்கப்படுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த குழுவில் இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து தப்பியவர்கள், சமூக விரோதி கும்பல்களை சேர்ந்தவர்கள், மேர்வின் சில்வா தலைமையிலான பாதாள உலகத்தினர் என பலரும் அடங்கியுள்ளனர் என்றும், இவர்கள் யாரை வேட்டையாட வேண்டும், எப்படி வேட்டையாட வேண்டும் என கோதாபே ராஜபக்ஷ நேரடியாக வழி நடத்தி வருவதாகவும் கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

தேர்தலின் பின்னர் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு கொலைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. அதிலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா முதல் கொண்டு பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இப்படியான வன்முறைகள் நடக்கிறது..மோசடி நடக்கிறது என்ற செய்திகளை வெளியிடக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறுஞ்செய்திகள் அனுப்புபவர்கள், இணையத்தில் செய்தி வெளியிடுபவர்கள், மின்னஞ்சல் அனுப்புபவர்கள் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கையின் கோயபல்ஸ் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கின்ற சுதந்திர தகவல் பரிமாற்றத்திற்கும் ஆப்பு தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

சரத் பொன்சேகாவிற்கு தொகுதிகளில் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தவர்கள், சுவரொட்டிகள் ஒட்டியவர்கள், வாக்கு சேகரித்தவர்கள் என பலர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. சரத் பொன்சேகாவும் அவருடைய பாதுகாப்பு பிரிவினரும் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குடும்பத்துடன் மறைந்து வாழ வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இவர் கொல்லப்படலாம் என்றும் மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளராக இருந்து பின்னர் தேர்தல் சமயத்தில் இவர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்தமையே இப்போது அவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில்12 முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். 3 மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள், உட்பட கேணல், லெப். கேணல், கப்டன் தர அதிகாரிகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு ஆப்பு காத்திருக்கிறது.

சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கு ஏற்றதாக சதித்திட்ட வழக்கொன்று புனையப்பட்டு வருவதாக தெரிகிறது. இராணுவ ஆட்சி ஒன்றுக்கு சரத் பொன்சேகா திட்டமிட்டதாகவும், மகிந்தவை கொல்ல சதி முயற்சி செய்ததாகவும் கூறி அவரை சிறையிலடைக்க அல்லது தப்பிச் செல்ல முற்பட்டார் எனக்கூறி போட்டுத்தள்ள ஏற்பாடுகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா மட்டுமல்லாது அவருடைய மருமகன் போன்ற குடும்ப உறுப்பினர்களும் நாட்டில் இருந்து தப்பி செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டளைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (இரு மகள்மார் திங்களன்று அமெரிக்கா சென்றதாக தெரிகிறது). சரத் பொன்சேகாவின் அலுவலகம் சோதனை செய்யப்பட்டு 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் பாதுகாப்பளித்து வந்த 90 படையினரை அகற்றி தற்போது 4 போலீசார் மட்டும் அமர்த்தப்பட்டுள்ளனர். (தமிழ் மக்களுக்கு எதிராக பல படுகொலைகளை நிகழ்த்திய, புலிகள் எனக்கூறி பல தமிழ் இளைஞர்களை போட்டுத்தள்ளிய, யாழ் மக்களது இயல்பு வாழ்க்கைக்கு புலிகளின் பெயரால் பல தடைகளை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவிற்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என்பது வேறு கதை).

இதே வேளை இந்த தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த கருத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும், எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாதென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர ஆகிய பீடங்களை சேர்ந்த பிரதம மதகுருக்களை சந்தித்து ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையாளரிடமும் முறையிடப்படுள்ளது. அவரும் விசாரிப்பதாக கூறியிருக்கிறார். (தான் போக வழியில்லையாம் மூஞ்சுறுக்கு, விளக்குமாறை கொண்டு போகணுமாம்)

மகிந்தவின் வேட்டையை வெளியில் சொல்லக்கூடிய செய்தியாளர்களுக்கு எதிராகவும் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

குறிப்பாக தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற தில்லுமுல்லுகளை செய்தியாளர்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. செய்தி ஊடகங்களின் தொலைபேசிகள், இணையம் என்பவை கண்காணிக்கப்படுகின்றன. பல செய்தியாளர்களை உளவுப்பிரிவினர் பின்தொடர்கின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.

ஜே. வி.பி கட்சியின் ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகெகொடையில் அமைந்துள்ள இரிதா லங்கா பத்திரிகை அலுவலகம் புலனாய்வுத் துறையினரால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. (தற்போது இதற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது). ஏற்கனவே இரிதா லங்கா அலுவலகத்தை உடைத்து தேடுதல் நடாத்தப்பட்டிருந்தது . லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்தில் பலதடைவைகள் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த இணையத்தளத்தை மக்கள் பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்தது. பின்னர் இந்த இணைய செய்தி அலுவலகம் திறக்கமுடியாதவாறு பலாத்காரமாக மூடப்படுள்ளது.

உதயன் தமிழ் பத்திரிக்கை மீதும் அமைச்சர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளது. இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம வானொலி நிலைய அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக இடம்பெற்ற மோசடிகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பல வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.

அதே போல தனக்கு எதிராக வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீதும் தனது வேட்டையை ஆரம்பிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. ஏற்கனவே வன்னி அகதி முகாம்களில் சுகாதார வசதி உட்பட பல சேவைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மகிந்தவின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிந்தவுடன் மகிந்த தனது அடிபொடிகளிடம் (அல்லக்கைகளிடம்) இப்படித்தான் சொல்லியிருப்பார்......

வேட்டை ஆரம்பமாச்சுடோய்..!

(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும் ).

--- ஜீவேந்திரன் ----

http://jeevendran.blogspot.com/

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.