Friday, 19 February 2010

மகாசங்கத்தினரின் சொம்பை களவாடிய மகிந்த

இலங்கை அரசியலிலும் ஆன்மீகத்திலும் சிங்கள பௌத்த சமூகத்திலும் கொடிகட்டிப்பறந்த நாட்டாமைகளான மகாசங்கத்தினரின் சொம்பு களவாடப்பட்டுள்ளது. இதை களவாடியவர் வேறு யாருமல்ல அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கையின் இன்றைய அரசனான மகிந்த ராஜபக்ஷவே. எந்த மகாசங்கம் அவருக்கு சிறந்த பௌத்த நாயகன் என்று விருது கொடுத்ததோ, எந்த மகாசங்கம் புலிகளை தோற்கடித்தவுடன் தேசப்பிரேமி என பட்டம் கொடுத்து கௌரவித்ததோ அதே மகாசங்கத்தின் சொம்பைத்தான் மகிந்த இன்று களவாடி இருக்கிறார். தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த நாட்டாமைகள் இப்போது சொம்பிழந்து நிற்கிறார்கள்.

தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்து ஜனாதிபதியாக முடிசூடிக்கொண்டாலும், சரத்பொன்சேகா தனக்கு பெரும் குடைச்சலாக இருப்பதை மகிந்தவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தோற்கடிக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த தன்னை, சிங்கள மக்களும் நாடும் தான் வாழும் வரை மன்னனாக.. தெய்வமாக போற்றி புகழ் பாடும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சக்கரவர்த்தியாக கொண்டாடும். எதிர்ப்பில்லாத தனிப்பெரும் தலைவனாக தானும் தன் குடும்பமும் உற்றார் உறவினரும் போட்டியாளர் இல்லாமல் நாட்டை ஆளலாம் (கொள்ளையடிக்கலாம்) என்ற மகிந்தவின் கனவுக்குளத்தில் சரத் பொன்சேகா பெரிய கல்லை தூக்கிப்போட்டார். ஜனாதிபதித் தேர்தலில் மோசடி செய்து வெல்ல வேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டார்.

போதாக்குறைக்கு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வேறு வருகிறது. இந்த நிலையில் தனது கனவுகளுக்கு தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்கும் சரத்பொன்சேகாவை களத்திலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் மகிந்தவுக்கு நேர்ந்தது. இந்த நேரம் பார்த்து போர்க்குற்றவாளிகளை தான் காட்டிக்கொடுக்கப்போவதாக சரத் பொன்சேகா செய்தியாளர் மாநாட்டில் உளறிக்கொட்டினார். ஏற்கனவே தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்ததால் துரோகியாக பார்க்கப்பட்ட சரத் பொன்சேகாவை உள்ளே தூக்கிப்போட இது வசதியாக அமைந்து விட்டது.

எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் இடையில் இந்த மகா சங்க நாட்டாமைகள் புகுந்தார்கள்.

மகா சங்கத்தினர் என்று சொல்லப்படுவது ஈரானின் ஆன்மீக தலைமைக்கு சமமானவர்கள். இலங்கையின் உண்மையான அரசர்கள் அவர்களாகவே இருந்தனர். அஸ்கிரிய, மல்வத்தை எனும் இரு பௌத்த உயர் பீடங்கள் இலங்கையின் சர்வ வல்லமை கொண்ட ஆன்மீக பீடங்கள். ஜனாதிபதி முதல் கொண்டு சகலரும் அடிக்கடி அவர்களை கண்டு காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொள்வது வழமை. ஏதாவது திட்டங்களை செய்யும் முன்னர் அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்வார்கள். அதே போல மகாசங்கத்தினரும் சிங்கள பௌத்த நலனை முன்னிறுத்தி ஆலோசனைகளை முன்வைப்பார்கள்.

ஈழப் பிரச்சனையிலும் கூட தமிழர்களுக்கு அதிக உரிமைகள் சென்று விடக்கூடாது என்பதில் மகாசங்கத்தினர் மிக கவனமாக இருந்தனர். ஈழக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் புலிகளுடன் சில உடன்பாடுகளுக்கு வர முற்படுகையில் , அதற்கு தடையாக இவர்கள் இருந்தனர். மகாசங்கத்தினரை மீறி ரணில் அல்ல யாருமே எதுவுமே செய்ய முடியாத சூழலே இதுவரை இருந்தது.

எனினும் வீழ்த்தப்பட முடியாத புலிகளை வீழ்த்தியது போலவே இப்போது மகாசங்கத்தினரையும் மகிந்த வீழ்த்தி இருக்கிறார். இது இலங்கை அரசியலில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

சரத்பொன்சேகாவை கைது செய்தமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாட்டாமைகளான மகாசங்கத்தினரை சந்தித்து முறையிட்டனர். அவர்களும் மகாசங்க சபாவைக்கூட்டி மகிந்தவை கண்டித்து (அல்லது சரத்பொன்சேகாவை விடுதலை செய்யும் படி) ஒரு கூட்டறிக்கையை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மகிந்தவிற்கு ஆதரவான பிக்குகள் விடயத்தை மகிந்தவின் காதில் ஓதிவிட்டனர்.

இந்த கூட்டறிக்கையை வெளியிட வேண்டாமென மகிந்த தனது அமைச்சர்கள் மூலம் மகாசங்கத்தினருக்கு தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்தினர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

அரசியல் நரியான மகிந்த அடுத்தகட்ட காய்நகர்த்தலை மேற்கொண்டார். தமக்கு சார்பான பௌத்த பிக்குகளில் ஒரு பிரிவினரைக்கொண்டு சில முக்கிய தலைகளை வளைத்துப்போட்டார். முக்கியமாக களனி பல்கலைக்கழக பெருந்தலையான வண. பலபிட்டியாவே குசலதம்ம ஹிமி , மேலும் சில முக்கிய தலைகளான வண. கம்புருகமுவே வஜித, வண. பெங்கமுவே நாலக போன்ற பிக்குகளை கொண்டு திட்டத்தை வகுத்தார். முதல் கட்டமாக அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தோன்றி சரத்பொன்சேகா கைது தொடர்பில் மதகுருக்கள் தலையிடுவது தவறு என தெரிவித்தனர். தவறு செய்த சரத்பொன்சேகா அதற்குரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு எதிராக பிக்குகள் செயற்படுவது அநீதியானது என மறைமுகமாக மகாசங்கத்தினரை சாடினார்கள்.

அடுத்த கட்ட தாக்குதலாக மகிந்த மகாசங்க பீடத்தின் கீழ் மட்ட பிக்குகளை குறிவைத்தார். அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி தேசத்தை பாதுகாக்கவருமாறு வேண்டினார். மீன்கள் தாமாகவே மகிந்தவின் வலைக்குள் துள்ளி குதித்தன. (அவை தற்போது மீன்தொட்டியில் வசதியாக உள்ளன). இதன் மூலம் மகாசங்க பிக்குகளிடையே மகிந்த ஆதரவு, மகிந்த எதிர்ப்பு என்ற இரு தரப்புகள் உருவாகின.

இந்த பிரித்தாளும் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. மகாசங்கத்தினர் கொஞ்சம் திணறித்தான் போனார்கள். இருந்தாலும் சங்கசபாவை கூட்டி மிகுதியை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த மகாசங்கத்தினருக்கு இடியாக இறங்கியது அந்த செய்தி.

சங்கசபா கூட்டப்பட்டால் கண்டியிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விடப்படும். வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படும். அந்தப்பழி மகாசங்கத்தினர் மீது சுமத்தப்படும் என்பதுதான் அந்த செய்தி.

அரண்டு போனார்கள் மகாசங்கத்தினர். இத்தனை காலமாக தீர்ப்பு சொல்லிவந்த நாட்டமைகளின் அடிமடியிலேயே கைவைத்தார் மகிந்த. வயிறு கலங்கிப்போனது மகாசங்கத்தினருக்கு. வெளிக்குப்போகலாம் என்று சொம்பைத்தேடினால் சொம்பைக்காணவில்லை.

சொம்பிழந்த நாட்டாமைகள் இனி எப்படி தீர்ப்பு சொல்லப்போகிறார்கள்??? என்று மட்டும் நீங்கள் கேட்காதீர்கள் ஏனென்றால் தீர்ப்பு சொல்ல மட்டுமல்ல ‘அதுக்குக்கூட’ இப்போது சொம்பில்லாமல் போய்விட்டது.

-- ஜீவேந்திரன்

Jeevendran

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

5 comments:

Anonymous said...

நக்கல் நயம் மகிந்த மொட்டைத்தலையிலை கொசு இருக்குது என்று அடிச்சேன் அது தப்பா என்று கேட்பான்,
பாசில் ஒரு ரெஜிமெண்ட் ஐயே மொட்டை அடிச்சு காவி மாட்டி கொண்டு வந்து விடுவான்.

jawaharlal said...

Mahitha - learned politics from our Tamil nadu politicins... God only can save not only Tamils in Srilanka and also Singalise.

Anonymous said...

விணை விதைத்தவர்கள் விணை அறுக்கிறார்கள். தமிழனின் அவல வாழ்வுக்கு இந்த சங்க பரிவாரும் முக்கிய காரணகர்த்தாக்கள். அனுபவிக்கட்டும்.

ஈழத் தமிழன்

Anonymous said...

மகிந்த தில்லுமுல்லு செய்துதான் தேர்தலில் ஜெயித்தார் என தொனிபட எழுதியுள்ளீர்கள். இது ஏற்கபட முடியாத விடயம். 18 இலட்சத்திற்கும் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வளவு பெரிய தொகையை மோசடி மூலம் பெற முடியுமா? அத்துடன் சரத் பொன்சேக்கா அரசியலுக்கு புதியவர். எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என அறியாது சபை அடக்கம் இல்லாதவர். இவர் தோற்றது ஒன்றும் வியப்பில்லை. எல்லாம் எதிர்பார்த்ததுதான். தமிழ் ஊடகங்களே இவர் வெற்றி பெறுவார் என செய்தி பரப்பின. ஆனால் யதார்த்தம் குறிப்பாக சிங்கள மக்களின் வாக்குகள் அரசின் பக்கமே இருந்தை மறுக்க இயலாது. வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் இது எதிரோலிக்கும்.அரசு சுலமாபமாக தனது இலக்கை எட்டும்.

Anonymous said...

ETHU EPPADY NADANTHALUM NADU KUTTYSUVARAGUM ENPATHU URUTHY. MAHENDRAN.CANADA

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.