Wednesday, 10 February 2010

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

சரத் பொன்சேகாவை இராணுவத்தினர் அடித்து இழுத்து கடத்திப்போன போனபோது... எனக்கு தோன்றியது இதுதான் - 'வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'.

அப்போது சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதியாக இருந்தார். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள் அதிகம். கடத்தல் காணாமல் போதல் வெகு சாதாரணமாக இருந்தது. ஏற்கனவே இராணுவ தளபதியாக இருந்தவர் ஏதோ தன்னால் முடிந்த அளவு தமிழரின் பிணங்களை செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் புதைத்துவிட்டு போயிருந்தார். அதைத்தொடர்ந்து வந்த சரத்பொன்சேகாவும் முன்னவர் விட்ட பணியை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா, தான் ஒரு சிங்கள பௌத்த வீரர் என்பதை எப்போதும் காட்டிக்கொள்வதில் தயக்கமில்லாதவர். போர் நிறுத்த உடன்படிக்கையை அவர் ஒரு பொருட்டாகவே மதித்திருக்கவில்லை. (புலிகள் உட்பட யார்தான் அதை மதித்தார்கள்?).

அந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் என்னைபோன்ற செய்தியாளர்கள் என்றால் சரத்பொன்சேகாவிற்கு அவ்வளவு பிடிப்பதில்லை. அதுவும் தொலைக்காட்சி படப்பிடிப்பு என்றால் அதோகதிதான். எல்லாப்பகுதிகளும் இறுக்கமானவையாகவே இருந்தன.

போர் நிறுத்த உடன்படிக்கையில் சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கவில்லை. என்னைப்போன்ற செய்தியாளர்களை விடுங்கள், ஜெயலத் ஜெயவர்த்தன போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கே நாக்கு தள்ளிப்போனது.

பிரதமராக இருந்த ரணிலை விட சரத்பொன்சேகாவிற்கு யாழ்ப்பாணத்தில் பலம் அதிகம். அப்போதுதான் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யும் விடயம் வந்தது. இங்கு இருந்த சிக்கல் என்னவென்றால் யாழ்ப்பாணத்தின் ஏறத்தாழ கால்வாசி பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்தது. தீவுப்பகுதிகள், பலாலி, வலிவடக்கு, என ஏராளமான கரையோரங்கள் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டு அகதிகளாக முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்தனர் (இப்போதும் அதே நிலைதான்).

அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களின் மையப்பகுதியில் இல்லாவிட்டாலும் எல்லைகளில், ஓரங்களில் மக்களை மீள் குடியேற்ற சமாதான உடன்படிக்கையின்படி இணக்கம் காணப்பட்டது. எனினும் சரத்பொன்சேகா பிடிவாதமாக அதனை மறுத்து விட்டார். அனைவரையும் இல்லாவிட்டாலும் சிறு தொகையினரையாவது குடியேற்ற அனுமதிக்குமாறு காலில் விழாத குறையாக கேட்கப்பட்டது. அதே போல சமாதான நல்லிணக்க சபை யாழ் ஆயர் இல்லத்தில் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட சரத்பொன்சேகா திரும்பவும் தனது பிடிவாதத்தையே முன்னிறுத்தினார். உயர் பாதுகாப்பு பிரதேசங்களில் மக்களை மீள குடியமர்த்த விடமாட்டேன் என்பதே அவரது முடிவாக இருந்தது.

ஒரு வகையில் அமைதி பேச்சு முறிவடைய இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. (விடுதலைப்புலிகள் மக்களை அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதில் ஏன் அவ்வளவு அக்கறையாக இருந்தனர் என்பது வேறு கதை. அவர்களும் தமது ராணுவ நலன்களை இதில் முன்னிறுத்தினார்கள் என்பது வெளிப்படை).

சரத்பொன்சேகாவின் பிடிவாதத்தின் பின்னணியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் நிழல் இருந்திருக்கலாம். சரத்பொன்சேகாவிற்கு பதிலாக வேறு ஒரு இராணுவ தளபதி இருந்திருந்தாலும் சில சமயம் இப்படியேதான் நடந்திருக்கலாம்.

மறுபுறம் சரத்பொன்சேகாவின் பதவிக்காலத்தில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் ,காணாமல் போனார்கள்.( பல குற்றங்களின் பின்னணியில் இராணுவத்தின் ஆசியுடன் ஈ.பி. டீ.பி யினர் இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது). எத்தனையோ தாய்மார்கள் கதறக்கதற பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

சரத் பொன்சேகா ஒரு சிங்கத்தைப்போல யாழில் உலா வந்தார். சிங்கள இராணுவத்தினரின் நலன்களே தனக்கு முக்கியம் என்பதை அவர் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். தானும் இராணுவத்தினரும் தமிழர்களின் பூமியில் அடாவடித்தனமாக ஆக்கிரமித்தே இருக்கிறோம் என்பதை அவர் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை. சிங்கள இராணுவத்தினர் அவரை ஒரு கடவுளைப்போல பார்த்தார்கள்..மதித்தார்கள்.

ஆனால்.... இப்போது அதே சரத் பொன்சேகாவை அதே இராணுவத்தினர் ஒரு நாயைப்போல் அடித்து உதைத்து ,பிடரியில் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். தமிழ் தாய்மார்களைப்போல் சரத்தின் மனைவி இன்று அழுகிறார்.

இப்போது சொல்லுங்கள்.....ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்....சரிதானே..???

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Jeevendran

13 comments:

எல்லாளன் said...

//போர் நிறுத்த உடன்படிக்கையை அவர் ஒரு பொருட்டாகவே மதித்திருக்கவில்லை. (புலிகள் உட்பட யார்தான் அதை மதித்தார்கள்?) ///

ஜீவேந்திரன் சந்ததி சாக்கில் உங்கள் மறுபக்கங்களையும் காட்டுகின்றீர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

போர்நிறுத்தம் என்பது புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் வெற்றியில் இருந்து கொண்டு உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதவர் போல் ஆராய்வு செய்வது தான்
சிறந்த ஆராய்வு தான்

jeevendran said...

எல்லாளன்
ஒவ்வொருவருக்கும் தத்தமது இன மத உணர்வு இருப்பது இயற்கை. அது எனக்கும் உண்டு, உங்களுக்கும் உண்டு. அப்படி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அதேவேளை ஊடகம் என்று வரும் போது நாங்கள் நடுநிலையாக நடக்கவேண்டியுள்ளது. பக்கச்சார்பு இல்லாமல் செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுக்கு கற்பிக்கப்படும் முதல் பால பாடம். நாங்கள் மற்ற ஊடகவியலாளர்களுக்கு சொல்லிக்கொடுப்பதும் அதுதான்.
ஆனால் யதார்த்தத்தில் ஊடகவியலாளர்கள் பக்கச்சார்புடந்தான் செயற்படுகிறார்கள் என்பது உண்மை.
நடுநிலை என்பது பற்றி பேசுகின்ற BBC , CNN முதல் எதுவுமே நடுநிலையானது இல்லை என்பது உண்மைதான். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதை மறைத்துக்கொண்டுதான் செயற்படுகிறார்கள்.
இலங்கையில் எழுதுகின்ற சிங்கள செய்தியாளர்கள் சிங்கள மக்களுக்கு சார்பாக எழுதுகிறார்கள். தமிழ் செய்தியாளர்கள் (நானும்தான்) தமிழருக்கு சார்பாக எழுதுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களையும், அவர்கள் எங்களையும் குற்றம் சாட்டிக்கொள்வதுண்டு.
இதில் நான் புலி எதிர்ப்பையே கொள்கையாக கொண்ட மாற்று இயக்கத்தவரையோ, அல்லது மாற்று இயக்கத்தவரை துரோகி என எழுதும் தரப்பையோ குறிப்பிடவில்லை...காரணம் அது ஊடகத்திற்கு அப்பால் வேறு நோக்கங்களைக் கொண்டது.
சரி இப்போது உங்களது குற்றச்சாட்டுக்கு வருகிறேன்.
// போர்நிறுத்தம் என்பது புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் வெற்றியில் இருந்து கொண்டு உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதவர் போல் ஆராய்வு செய்வது தான்
சிறந்த ஆராய்வு தான் // என குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
உண்மைதான் புலிகளின் இராணுவ வெற்றியினால்தான் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. கட்டுநாயக்கா தாக்குதல் போன்றவை காரணமாகவே சிங்களம் பேச்சுக்கு இணங்கியது. இதை நான் எங்கே மறுத்தேன்???
ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்புமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் நான் //போர் நிறுத்த உடன்படிக்கையை அவர் ஒரு பொருட்டாகவே மதித்திருக்கவில்லை. (புலிகள் உட்பட யார்தான் அதை மதித்தார்கள்?) /// என எழுதியிருக்கிறேன். இது தவறான கருத்து என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியாயின் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் நீங்கள் அதை எழுதலாம். சிலவேளை நான் தவறானால் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது கருத்தை நான் எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கிறது. எனது கருத்தை தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. அதே போல . உங்களுக்கு வேறு கருத்து இருந்தால் அதை தாராளமாக எழுதுங்கள். உங்கள் கருத்துக்கு எப்போதும் இங்கு வரவேற்பு உண்டு.

kanthan said...

//நடுநிலை என்பது பற்றி பேசுகின்ற BBC , CNN முதல் எதுவுமே நடுநிலையானது இல்லை என்பது உண்மைதான். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதை மறைத்துக்கொண்டுதான் செயற்படுகிறார்கள்//

//புலி எதிர்ப்பையே கொள்கையாக கொண்ட மாற்று இயக்கத்தவரையோ, அல்லது மாற்று இயக்கத்தவரை துரோகி என எழுதும் தரப்பையோ குறிப்பிடவில்லை//

//போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்புமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை//

ஜீவேந்திரன், மேலே நான் குறிப்பிட்ட வசனங்கள் நீங்கள் மிக நிதானத்தோடு, நடுநிலையாக எழுதிய வசனங்கள் என்பது எனக்கு தெரியும். ஒரு ஊடக வியலாளனாக உங்கள் ஆராய்வு பாராட்டுக்குரியது. keep it up.

எல்லாளன்! தனிப்பட்ட ரீதியாக சாடுவது வரவேற்கதக்கது அல்ல, உங்கள் கருத்தை தாராளமாக தெரிவியுங்கள் தனிப்பட்ட சாடுதலை விடுத்து.

jeevendran said...

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி காந்தன். கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதோ, அது எவ்வாறு இன்னொருவருடைய கைரேகை போல அமையாதோ, அது போலத்தான் ஒவ்வொரு மனிதனுடைய கருத்தும். மேலோட்டமாக பொதுவாக ஒரு உடன்பாட்டுக்கு வர முடியுமே தவிர ஒருபோதும் 100 % வீதம் எந்த கருத்தோடும் உடன்பட முடியாது. சில வேளை சொல்கின்றவரின் மீது உள்ள விசுவாசம், மதிப்பு காரணமாக சில கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்வோம் அது கூட எமது கருத்து அல்ல. என்னை திட்டி விட்டார் என்பதற்காக எல்லாளனுடைய கருத்தை நான் ஒதுக்கவில்லை, ஒதுக்கவும் கூடாது. சில வேளை எல்லாளன் என்னைப் புரிந்துகொள்ள கூடும் .

எல்லாளன் said...

தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும் என்னும் தலைப்பில் http://tamilthesiyam.blogspot.com/2010/02/blog-post_01.html
பொதுவாகவே எல்லா ஊடகங்களும் தத்தம் நலன், இனம் சார்ந்ததாகவே இயங்குகின்றன இது சர்வதேச ஊடகங்களிலிருந்து உலக வல்லரசுகளினது ஊடகங்கள் வரை பொருந்தும்

இது தான் உலக நியதியாக இருந்தும் உலகத்தால் கைவிடப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட , பயங்கரவாதிகளாக்கப்பட்ட எமது ஊடகங்கள் மட்டும் ஊடக தர்மம் என்னும் உதவாத தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகின்றன. அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை ?

அதுமட்டுமல்ல பலரும் இப்போது முதலில் புலிகளுக்கு ஆதரவாக எழுதி சிறிது சிறிதாக விசத்தை கக்கும் பாணியையே கடைப்பிடிக்கின்றார்கள்

அது தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று குறிப்பிட்டேன் ஆரம்பத்திலிருந்து புலி எதிர்ப்பாளர்களைப் பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை அது தேவையுமில்லை

ஒன்றை நாம் எல்லோரும் மறந்து விட்டு அல்லது அறியாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்

அது புலிகள் நிர்பந்தத்தில் விரும்பம் இல்லாமல் சமாதான ஒப்பந்தத்திற்கு போக வேண்டி ஏற்பட்டது அது இரட்டைக் கோபுரத்தாக்குதலை சாட்டாக வைத்து அமெரிக்கா தீட்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

முப்பது வருடமாக அசைக்க முடியாத புலிகளை மூன்று வருடத்தில் அழித்தது எப்படி ?

இந்த சமாதானம் தான் அதற்கு வழிகோலியது இதை த் தான் புலிகளின் கைகளை கட்டிப்போட்டு அழித்தது இந்த சமாதானம் தான்

புலிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அழிந்து போனதற்கு இந்த சமாதானம் தான் காரணம்

மேலும் விளக்கம் தேவையாயின் http://tamilthesiyam.blogspot.com/2010/02/blog-post_9705.html
வல்லரசுகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்ட ஈழத்தமிழின விடுதலைப்போராட்டம்

இதனால் தான் நடுநிலை என்று சொல்லும் தமிழ் ஊடகங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாகின்றது

ஆராய்வு said...

அன்பின் எல்லாளன்
நீங்கள் குறிப்பிட்டவற்றை நான் ஏற்கனவே வாசித்து இருந்தாலும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.
நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான்- நான் இதுவரை புலிகளை ஆதரித்து எதையும் எழுதவில்லை. நீங்கள் எதை வைத்து நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக
எழுதினேன் என அர்த்தம் கொண்டீர்களோ தெரியவில்லை. அதை ஒருதரம் குறிப்பிட்டால் பெரும் உதவியாக இருக்கும்.
அது போல எதிர்த்தும் எழுதவில்லை. புலிகள் மட்டுமல்ல எந்த இயக்கத்தையும் சார்ந்தோ எதிர்த்தோ எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.
எல்லாளன் உங்களை நான் புரிந்து கொள்வது போல நீங்கள் என்னையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எழுதுவது போல என்னால் எழுதவியலாது. அதேபோல நீங்களும் எனது கண்ணோட்டத்தில் எழுதவியலாது. இதைத்தான் நான் இதற்கு முந்தைய
பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன்.
ஒவ்வொருவருக்கும் உள்ள கருத்து எழுத்து சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும்.

அதற்காக எமது மக்களின் சுதந்திரத்திற்கு எதிராக, அரச தரப்பின் வரப்பிரசாதங்களை வாங்கிக்கொண்டு, அரச அடக்கு முறைகளுக்கு ஆதரவாக எழுதுகின்ற கழிசடைகள் இந்த கருத்து எழுத்து சுதந்திரத்தை சொல்லிக்கொள்வது மிகவும் அருவருக்கத்தக்கதொன்றாகும்.

எவ்வாறெனினும் எனக்கு இந்த பிரசாரங்களில் நம்பிக்கை இல்லை. நமக்கு நாமே பிரசாரம் செய்துகொள்வதில், நமக்கு நாமே புலிகளை புகழ்ந்து எழுதிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. இதை நீங்களே உங்களது தளத்தில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள்-

//கடந்த காலத்தினை திரும்பிப் பார்த்தால்
1. புலிகளின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் உசுப்பேத்தி மக்களை வெற்றி மாயைக்குள் வைத்திருந்து தோற்கடித்தது //
//ஆனால் ஒரு துர்ப்பாக்கியம் என்வென்றால் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிய 30 வருட ஆயுதப்போராட்டத்தின் பிரச்சாரத்தை 30 வருடமாக அந்த இனத்திற்கே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றோம் என்பது தான். ஆனால் போராட்டம் அழிக்கப்பட்டும் இன்னும் பிரச்சாரம் மட்டும் ஓயவில்லை //

எனவே இப்போது யார் பெரிய புலி ஆதரவாளர் என்ற போட்டியோ பிரசாரமோ தேவை இல்லை, துரோகி பட்டங்களும் தேவை இல்லை, சின்ன சின்ன கருத்து வித்தியாசங்களுக்காக பகைமைகளும் தேவை இல்லை.
மனம் திறந்த கலந்துரையாடலே அவசியமானது. நாம் காதுகளை திறந்து மற்றவரின் கருத்தையும் கேட்க தயாராக இருக்க வேண்டும். நாம் சொல்வதுதான் சரி என்ற பிடிவாதம் பெரும் அழிவில் கொண்டு போய் விடும். கருத்து வேறுபாடுகளுக்காக பகைமை பாராட்டி பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போனால் ஒரு சிறு இனமான நாம் உலகிலிருந்து முற்றாக அழிந்து போவோம். கட்டளை இடுவது இலகுவானது. ஆனால் கலந்துரையாடலில் ஒரு பொது முடிவிற்கு வருவது மிக மிக கடினமானது.
எனவே இனியாவது நாம் கருத்து சுதந்திரத்தை, கலந்துரையாடல்களை வரவேற்போம். ஜனநாயக பண்பை வளர்த்துக்கொள்வோம்.

ugentheepan said...

ஜீவேந்திரன், உண்மையை நீங்கள் அடையாளம் காட்டியிருக்கின்றிர்கள்,உங்கள் ஆய்வு நான்றாகவுள்ளது வாழ்த்துக்கள்.

எல்லாளன் said...

//அதுமட்டுமல்ல பலரும் இப்போது முதலில் புலிகளுக்கு ஆதரவாக எழுதி சிறிது சிறிதாக விசத்தை கக்கும் பாணியையே கடைப்பிடிக்கின்றார்கள்///

இது பொதுப்படையாக எழுதியது உங்களை மட்டும் குறிப்பிட்டு அல்ல

///நான் இதுவரை புலிகளை ஆதரித்து எதையும் எழுதவில்லை. நீங்கள் எதை வைத்து நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக
எழுதினேன் என அர்த்தம் கொண்டீர்களோ தெரியவில்லை. அதை ஒருதரம் குறிப்பிட்டால் பெரும் உதவியாக இருக்கும். ////

நீங்கள் புலி ஆதரவாளர் என்று நான் சொல்லவில்லை

///அது தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று தான் குறிப்பிட்டேன்///

///நாம் காதுகளை திறந்து மற்றவரின் கருத்தையும் கேட்க தயாராக இருக்க வேண்டும். நாம் சொல்வதுதான் சரி என்ற பிடிவாதம் பெரும் அழிவில் கொண்டு போய் விடும்.////
நான் சொல்வது தான் சரி என்று சொல்லவில்லை

எனக்கு சரி என்று பட்டதைச் சொல்லுகின்றேன் தவிர எனது கொள்கையில் பிடிவாதமாக இருக்கின்றேன்

சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் கொள்கை மாற்றவில்லை அவ்வளவே


/// கருத்து வேறுபாடுகளுக்காக பகைமை பாராட்டி பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போனால் ஒரு சிறு இனமான நாம் உலகிலிருந்து முற்றாக அழிந்து போவோம்////

நடுநிலை , ஊடக தர்மம் என்று பொய்வேசம் போட வேண்டாம் என்று தான் நான் திரும்பச் சொல்லுகின்றேன்

எல்லோரும் ஏதோ ஒரு கொள்கையும் அதன் சார்ந்தும் தான் எப்போதும் எழுதிவருகின்றார்கள்

இதில் நடுநிலை என்பது ஒன்றும் இல்லை

சுருக்கமாகச் சொன்னால் உண்மையின் பால் நடுநிலை என்பது இல்லை

மற்றப்படி உங்களைத் தாக்கி எழுதவில்லை அது எனக்கு தேவையுமில்லை

kanthan said...

சரத்பொன்சேகாவின் வீர வரலாற்றினில் யாழ்ப்பாணத்திற்கும் பெரும்பங்குண்டு. 1985ம் ஆண்டினில் வடமராட்சியில் வல்வெட்டித்துறை ஊறணி, கொற்றவற்றை மற்றும் பொலிகண்டி பகுதிகளில் சுற்றி வளைத்து இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நூலக கட்டிடங்களினுள் அடைக்கப்பட்டு, குண்டு வைத்து தகர்க்கப்பட்டனர். 60 இற்கும் அதிகமான அப்பாவிகள், பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவை பற்றியெல்லாம் பெரும்பாலானவர்கள் அறிந்திருந்தாலும், அதன் பின்னணியிலிருந்த சரத் பொன்சேகா பற்றி அறிந்தேயிருக்கவில்லை. அப்போது அவரொரு கனிஷ்ட படை அதிகாரி மட்டுமே.

1990ம் ஆண்டுகளில் யாழ் கோட்டை மீதான விடுதலைப்புலிகளது முற்றுகையை முறியடிக்க, படைத்தரப்பு தீவகப்பகுதிகளில் முன்னேறத் தொடங்கியிருந்தது. ஊர்காவற்துறை பகுதிகளில் எல்லாம் அக்பட்டவர்கள் எல்லாம் வெட்டிக் கொல்லப்பட்டனர். இடம் பெயர்ந்த மக்கள் யாழ் நகரப் பகுதிக்கு வர விடாது கோட்டை தளத்திலிருந்து படையினர் பண்ணை வீதி நோக்கி சுட்டுக்கொண்டேயிருந்தனர். மண்டை தீவினை வந்தடைந்த மக்கள், வெளியேற வழியின்றி கடலினுள் குதித்து நீந்தி தப்பி யாழ் நகர் வந்தனர். ஆனாலும் மண்டை தீவும், படையினரால் கைப்பற்றப்பட்டபோது எஞ்சியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு கிணறுகளுல் போடப்பட்டு மூடப்பட்டனர். அப்போது இவ்விராணுவ நடவடிக்கையிலும் சரத்பொன்சேகா முன்னணியில் இருந்தார். அப்போது அவர் சிரேஷ்ட படை அதிகாரி. இப்போதைய முதன்மை எதிரியான கோத்தபாயவும் இவ் இராணுவ நடவடிக்கையில் இணைந்து ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்கள் ஆருயிர் நண்பர்கள்.

kanthan said...

2001ம் ஆண்டின் முற்பகுதிகளில் மீண்டும், யாழ், மாவட்டத்திற்கு கடமையாற்ற சரத் பொன்சேகா வந்திருந்தார். இவ்பொது மேஜர் ஜெனரல் பதவியுயர்வுடன், மாவட்ட தளபதி பதிவியும் கிட்டியிருந்தது. இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் காணாமல் போவதற்கும் அவர் மீண்டும் காரணமானார்.

உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பினில் சரத் பொன்சேகா, கையாண்ட கடும் போக்கு, அரசு புலகளுக்கிடையேயான பேச்சு வார்த்தை தடைப்பட பிரதான காரணமாகியது அனைவருமே அறிந்ததே. இந்த சமாதான காலப்பகுதிகளிலேயே சரத் பொன்சேகாவுடன் தொடர்பு பட வே;ணடிய சூழல் ஊடகவியலாளன் என்ற வகையில் ஏற்பட்டிருந்தது. மக்கள் போராட்டங்கள் பலவும் முனைப்புப் பெற்றிருந்த நிலையில், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளுர் ஊடகவியலாளர்கள் பலரும்தொடர்ந்து படையினரால் தாக்கப்பட்டவண்ணமிருந்தனர்.

ஆர்பாட்டங்கள், ஹர்த்தால்களென, விடுதலைப்புலிகளது தூண்டலிலேயே பெரும் போராட்டங்கள் அப்போது நடந்தன. இராணுவ வாகன விபத்துக்களின் பின்னரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தே வந்தன. அப்போதெல்லாம் மக்களை விட ஊடகவியலாளர்களே படையினரால் பெரிதும் இலக்கு வைக்கப்பட்டனர்.
அத்தகைய சூழலில் ஊடகவியலாளர்களை தாக்க வேண்டாமென கோர, நான் சார்ந்த ஊடகவியலாளர் சங்க பிரதிநிதியாக சரத்பொன்சேகாவை சந்திக்க வேண்டியிருந்தது. பலதடவைகளாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் யாழ் அலுவலகத்தில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

kanthan said...

எனது பார்வையியனில் என்றுமே இனத்துவேசம் மிக்க, தமிழர்களை இரண்டாந்தர பிரதிநிதிகளாக கருதிய ஒருவராகவே சரத் இருந்தார். அதிலும் தமிழ் ஊடகவியலாளர்களென்ற வகையினில் ஒரு நேர்மையாக, எமது கண்களை நேராக பார்க்க கூட சரத் தயரற்ற ஒருவராகவே இருந்தார். பெரும்பாலான நேரம் உரையாடல்களின்போது மேலே விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இல்லாவிடின் திறந்திருக்கும் யன்னலுக்கு வெளியேயே அவரது பார்வையிருக்கும். பெரும்பாலும் வெள்ளைத்தோல் போர்நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகளது நிர்ப்பந்தத்தால் வரவழைக்கப்பட்டதாகவே அவரது பயணம் இருக்கும். இதே மனோநிலைதான் விடுதலைப்புலிகளது அரசியல் துறைப்போராளிகள் தொடர்பிலும் அவரிடம் இருந்தது. என்றுமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத மனப்பான்மையுடன் அவர் இருந்தே வந்தார்.

அதிலும் பருத்தித்துறை உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க கோரிய மாணவர் போராட்டம் தொடர்பில் சரத்தின் நிலை அவரது மனோ நிலையை அப்பட்டமாக தெரிந்தது. மாணவர்களை கலைக்க அங்கு தற்காலிக இணை;பிலிருந்த படை அதிகாரியொருவர், ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீhக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதன் பின்னர் அங்கு வந்த சரத்தோ, ஆகாயத்தை நோக்கி சுடவா உங்களுக்கு பயிற்சி தந்துள்ளேன் என அவ்வதிகாரி மீது பாய்ந்து வீழ்ந்தார். அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம், சுடுவது போன்று கைகளால் பாவனை செய்தவாறு இவ்வாறு கூறினார். நான் எங்கள் பையன்களுக்கு ஆட்களை சுடத்தான் பயிற்றுவித்திருக்கின்றேன்.

kanthan said...

அதிலும் அம்பாறையில் எவ்வாறு தனது குடும்பமும், தானும் பாதிக்கப்பட்டமென்ற, தென்னிலங்கை நாளிதழொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி பிரபல்யமானது. தன்னை சிறு வயதினில் அடிக்கடி காட்டுக்குள் அடித்துக்களைத்த தமிழரை, பழிவாங்க வந்த வீரமன்னனாக தன்னைத்தானே பிரபலப்படுத்த, அப்பேட்டியில் முற்பட்டிருந்தார். அவ்வகையினில் கனேடிய ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியும் பரபல்யமானதே.

ஆனாலும் அரசியல்வாதியானதும், அரசமரத்தின் கீழான ஞானம் ஏனோ அவருக்கும் கிட்டிவிட்டது. காணாமல்போனவர்களை பெரும்பாலும் இறந்திருக்கலாமென தன் வாயாலேயே ஊடகவியலாளர்களுக்கு அவர் கூறினார். உயர்பாதுகாப்பு வலயமென்பதுகூட இனித்தேவையில்லையென்றார்.

காலச்சக்கரம், வேகமாகவே சுழ்கின்றது. வெற்றிக்கனியை பறிக்க பாடுபட்டவர்கள் இன்று பங்குபோட சண்டைபிடிக்கின்றார்கள். அவருக்கு கீழ் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் மாணவடு சரத்தின் பிடரியினில் அடித்து இழுத்துச் செல்கின்றார். அதே கருணா அம்மானை பிரித்தெடுக்க பின்னேரியா முகாமிலிருந்து செயற்பட்ட தனக்கான கௌரவத்தை கிட்டவிடாது சரத் தடுத்துவிட்டதாக மாணவடுவுக்கோ வற்றாத கோபம் மற்றொரு இராணுவ அதிகாரியோ தங்கிருந்த ஹோட்டலை சுற்றிவளைத்து பழி தீர்க்க உதவினார்.

வெற்றிகொண்டதான இலங்கை இராணுவம் இப்போது இரண்டாகிப்போயுள்ளது பல தளபதிகள் கட்டாய வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியோரும் அழுத்தங்களால் நம்பிக்கையிழந்துள்ளனர். 1961 மற்றும் 1966 களில் திட்டமிடப்பட்டு பின்னர் செயற்படாது போன இராணுவப்புரட்சிகள் இனியும் வெடிக்கலாம் அல்லது அவ்வாறு கூறி மேலும் வடிகட்டல்கள் தொடரலாம்

kanthan said...

அனோமா சொன்னது போன்று இன்று என் கணவருக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாமென்ற வார்த்தை ஏணைய படை அதிகாரிகளுக்குமான தகவலே. அல்லது, அது ராஜபக்ஷ குடும்பத்திற்காகவும் இருக்கலாம். ஆனாலும் தமிழர்களான எங்களிடம் இனி அழுவதற்கு கண்ணீரும் எஞ்சியில்லை. விறைத்துப்போன மனங்களுடன் உங்களை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.