Thursday 25 February 2010

இந்தியாவில் ஒரு ஈழம்- Avatar Returns

பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப்பெற்றுக்கொண்டு நாட்டை கொள்ளையடிப்பதற்கு உலகிலுள்ள பல அரசாங்கங்கள் சட்ட அனுமதி வழங்குகின்றன. ஆபிரிக்காவில் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு குழப்பங்களுக்கும் , போர்களுக்கும் இதுவே காரணமாக அமைகிறது. நைஜீரியாவில் பெற்றோலிய எண்ணெய் வளத்திற்காகவும், கொங்கோவில் கொல்டான் (Coltan) கனிமத்திற்காகவும் பல வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.
கொள்ளையுடன் நின்று விட்டால் பரவாயில்லை அதற்கு தடையாக இருக்கின்ற மக்கள் முக்கியமாக பிரதேசவாசிகள் பழங்குடிகள் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே சியராலியோனில் வைரங்களுக்காக இதே மேற்கு நாடுகள் படுகொலைகளை ஏற்படுத்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளை மேற்கு செய்தி ஊடகங்கங்கள் உள்நாட்டு குழப்பங்களாக குறிப்பிட்டு உண்மையை மறைத்து வருகின்றன.
இலங்கையில் கூட விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த வளங்களை சுரண்டுதல் என்ற விடயம் அமைந்தது. இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளம், அதிலுள்ள மீன் வளம் மட்டுமல்லாது எண்ணெய் வளமும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கிழக்கு கரையோரங்களில் காணப்படுகின்ற இல்மனைட் போன்ற தாதுப்பொருட்களை (மற்றும் திருகோணமலை துறைமுகம் போன்றவையும் கூட) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகளை களத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.
வடகிழக்கின் நிலங்களையும் அங்குள்ள வளங்களையும் இப்போது தங்கு தடையின்றி அரசாங்கம் அபகரித்து வருகிறது. புலிகளின் அழிவிற்காக காத்துக்கொண்டிருந்த பல இந்திய நிறுவனங்கள் இப்போதே தமது கடையை விரித்து விட்டன. இந்தியா மூதூர் கிழக்கில் அமைத்துவரும் அனல் மின்நிலையத்திற்காக , அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஏறத்தாழ 45 ஆயிரம் குடும்பங்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
இது போலத்தான் இந்திய அரசாங்கங்களும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக கோடிக்கணக்கில் பணத்தையும் சொத்துகளையும் வாங்கிக்கொண்டு கொள்ளை அடிப்பதை ஊக்குவிக்கின்றன. தமிழக அரசாங்கமானது ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த பரிமாற்றத்தில் அரசியல்வாதிகளுக்கு பலகோடிக்கணக்கான பணம் கிடைத்தாலும், விற்பனைத்தொகையில் தமிழக அரசு உரிமை ஊதியம் (ரோயல்டி) 0.02% மட்டுமே என்பது பலரும் அறியாதது.
அதே போலத்தான் ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அங்குள்ள பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டொலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) . ஆனால் இந்திய அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ள உரிமை ஊதியம் (ரோயல்டி) 7% க்கும் குறைவானதாகும்.
மலையை தமது பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட பழங்குடி மக்கள் இந்த பகல் இரவு கொள்ளையை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் மலைகள் அவர்களின் வாழிடம் மட்டுமல்ல கடவுளும் கூட. எனினும் இந்த மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளைப்போலவே இங்கும் இராணுவ நடவடிக்கைகள் முழு மூச்சாக இடம்பெறுகின்றன. முள்ளிவாய்க்காலில் யுத்தம் இடம்பெறுகிறது என்பது உலகத்திற்கு தெரிந்திருந்தது - ஆனால் அது இந்தியாவின் அழுத்தம் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் உதவியுடன் தமிழர்களும் புலிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
இங்கு பழங்குடிகளுக்கு எதிரான போரை இந்தியாவே நேரடியாக நடத்துகிறது. ஆனால் உலகத்திற்கு தெரியாமல் பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது. காந்தியம் சாத்வீகம் என பேசிக்கொண்டு நீண்ட காலமாகவே பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் அடியாளாகவே இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் எப்போதும் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்கள். ஆனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி, தொடர்கள் கிரிக்கெட் என மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்ற பொது அறிவு இல்லாமல் மக்கள் தனித்தனி தீவுகளாக வாழ்கின்றனர்.
இந்த மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட் குழுக்கள் போராடி வருகிறார்கள். இந்திய அரசாங்கமோ இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தினமும் மக்களை வேட்டையாடி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்தொகையான மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு பெரிய மனிதப்படுகொலைகளையும் அநீதியையும் இந்திய அரசாங்கம் செய்துகொண்டு உலகத்திற்கு இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் கூறி வருகிறது. செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பழங்குடி மக்கள் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவர்கள் மாவோயிஸ்ட்களாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்களது சடலங்கள் காடுகளில் வீசி எறியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன.
இவ்வளவையும் செய்து விட்டு இது எல்லாமே இந்த பழங்குடி மக்களது நன்மைக்காகத்தான் அவர்களது முன்னேற்றத்திற்காகத்தான் என கூசாமல் மன்மோகன்சிங் பொய் சொல்கிறார்.
இந்தியா சுதந்திரமடைந்த இந்த 60 ஆண்டுகளில் இந்த பழங்குடி மக்கள் கல்வி, மருத்துவம்,சுகாதாரம் , போக்குவரத்து, அடிப்படை வசதிகள், நிவாரணங்கள் எதுவுமே கிடைக்கப்பெறாதவர்களாகவே வாழ்கின்றனர். அவர்களிடம் எஞ்சியிருப்பது அவர்களது உயிரும் வாழும் மலையுந்தான்.
அந்த மக்களை வேட்டையாடுவதற்காக பல்வேறு பெயர்களில் இராணுவப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. எப்படி இலங்கை அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே மிக கொடூரமான போரை நடத்தி கடைசி சில நாட்களில் மட்டும் 40 000 இற்கும் அதிகமான மக்களைக்கொன்றதோ, அதே போன்று இந்தியா இப்போது செயற்படுகிறது. ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவதார் திரைப்படத்தில் இடம்பெறுகின்ற அதே விடயம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. நாவி இந்தத்தவருக்கு பதிலாக இங்கே பழங்குடிகள். பண்டாராவுக்கு பதிலாக இங்கே பழங்குடிகள் வாழும் மலைகள். பாத்திரங்களின் பெயரும் இடமும் வேறு ஆனால் கதை ஒன்று. திரைப்படத்தில் கனிம வளத்திற்காக ஆக்கிரமிக்கும் தீயவர்களுக்கு எதிராக நாவி இனத்தவர்கள் போராடி வெற்றி பெற்றதைப்போல இந்திய பழங்குடிகளும் வெற்றி பெறுவார்களா? அல்லது முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதைப்போல இந்திய பழங்குடிகளும் தோற்றுப்போவார்களா?

-- ஜீவேந்திரன்
Jeevendran
இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Friday 19 February 2010

மகாசங்கத்தினரின் சொம்பை களவாடிய மகிந்த

இலங்கை அரசியலிலும் ஆன்மீகத்திலும் சிங்கள பௌத்த சமூகத்திலும் கொடிகட்டிப்பறந்த நாட்டாமைகளான மகாசங்கத்தினரின் சொம்பு களவாடப்பட்டுள்ளது. இதை களவாடியவர் வேறு யாருமல்ல அவர்களின் செல்லப்பிள்ளையான இலங்கையின் இன்றைய அரசனான மகிந்த ராஜபக்ஷவே. எந்த மகாசங்கம் அவருக்கு சிறந்த பௌத்த நாயகன் என்று விருது கொடுத்ததோ, எந்த மகாசங்கம் புலிகளை தோற்கடித்தவுடன் தேசப்பிரேமி என பட்டம் கொடுத்து கௌரவித்ததோ அதே மகாசங்கத்தின் சொம்பைத்தான் மகிந்த இன்று களவாடி இருக்கிறார். தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த நாட்டாமைகள் இப்போது சொம்பிழந்து நிற்கிறார்கள்.

தேர்தலில் தில்லுமுல்லுகளை செய்து ஜனாதிபதியாக முடிசூடிக்கொண்டாலும், சரத்பொன்சேகா தனக்கு பெரும் குடைச்சலாக இருப்பதை மகிந்தவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தோற்கடிக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த தன்னை, சிங்கள மக்களும் நாடும் தான் வாழும் வரை மன்னனாக.. தெய்வமாக போற்றி புகழ் பாடும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சக்கரவர்த்தியாக கொண்டாடும். எதிர்ப்பில்லாத தனிப்பெரும் தலைவனாக தானும் தன் குடும்பமும் உற்றார் உறவினரும் போட்டியாளர் இல்லாமல் நாட்டை ஆளலாம் (கொள்ளையடிக்கலாம்) என்ற மகிந்தவின் கனவுக்குளத்தில் சரத் பொன்சேகா பெரிய கல்லை தூக்கிப்போட்டார். ஜனாதிபதித் தேர்தலில் மோசடி செய்து வெல்ல வேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டார்.

போதாக்குறைக்கு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வேறு வருகிறது. இந்த நிலையில் தனது கனவுகளுக்கு தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்கும் சரத்பொன்சேகாவை களத்திலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் மகிந்தவுக்கு நேர்ந்தது. இந்த நேரம் பார்த்து போர்க்குற்றவாளிகளை தான் காட்டிக்கொடுக்கப்போவதாக சரத் பொன்சேகா செய்தியாளர் மாநாட்டில் உளறிக்கொட்டினார். ஏற்கனவே தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்ததால் துரோகியாக பார்க்கப்பட்ட சரத் பொன்சேகாவை உள்ளே தூக்கிப்போட இது வசதியாக அமைந்து விட்டது.

எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் இடையில் இந்த மகா சங்க நாட்டாமைகள் புகுந்தார்கள்.

மகா சங்கத்தினர் என்று சொல்லப்படுவது ஈரானின் ஆன்மீக தலைமைக்கு சமமானவர்கள். இலங்கையின் உண்மையான அரசர்கள் அவர்களாகவே இருந்தனர். அஸ்கிரிய, மல்வத்தை எனும் இரு பௌத்த உயர் பீடங்கள் இலங்கையின் சர்வ வல்லமை கொண்ட ஆன்மீக பீடங்கள். ஜனாதிபதி முதல் கொண்டு சகலரும் அடிக்கடி அவர்களை கண்டு காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொள்வது வழமை. ஏதாவது திட்டங்களை செய்யும் முன்னர் அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்வார்கள். அதே போல மகாசங்கத்தினரும் சிங்கள பௌத்த நலனை முன்னிறுத்தி ஆலோசனைகளை முன்வைப்பார்கள்.

ஈழப் பிரச்சனையிலும் கூட தமிழர்களுக்கு அதிக உரிமைகள் சென்று விடக்கூடாது என்பதில் மகாசங்கத்தினர் மிக கவனமாக இருந்தனர். ஈழக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் புலிகளுடன் சில உடன்பாடுகளுக்கு வர முற்படுகையில் , அதற்கு தடையாக இவர்கள் இருந்தனர். மகாசங்கத்தினரை மீறி ரணில் அல்ல யாருமே எதுவுமே செய்ய முடியாத சூழலே இதுவரை இருந்தது.

எனினும் வீழ்த்தப்பட முடியாத புலிகளை வீழ்த்தியது போலவே இப்போது மகாசங்கத்தினரையும் மகிந்த வீழ்த்தி இருக்கிறார். இது இலங்கை அரசியலில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

சரத்பொன்சேகாவை கைது செய்தமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாட்டாமைகளான மகாசங்கத்தினரை சந்தித்து முறையிட்டனர். அவர்களும் மகாசங்க சபாவைக்கூட்டி மகிந்தவை கண்டித்து (அல்லது சரத்பொன்சேகாவை விடுதலை செய்யும் படி) ஒரு கூட்டறிக்கையை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மகிந்தவிற்கு ஆதரவான பிக்குகள் விடயத்தை மகிந்தவின் காதில் ஓதிவிட்டனர்.

இந்த கூட்டறிக்கையை வெளியிட வேண்டாமென மகிந்த தனது அமைச்சர்கள் மூலம் மகாசங்கத்தினருக்கு தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்தினர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

அரசியல் நரியான மகிந்த அடுத்தகட்ட காய்நகர்த்தலை மேற்கொண்டார். தமக்கு சார்பான பௌத்த பிக்குகளில் ஒரு பிரிவினரைக்கொண்டு சில முக்கிய தலைகளை வளைத்துப்போட்டார். முக்கியமாக களனி பல்கலைக்கழக பெருந்தலையான வண. பலபிட்டியாவே குசலதம்ம ஹிமி , மேலும் சில முக்கிய தலைகளான வண. கம்புருகமுவே வஜித, வண. பெங்கமுவே நாலக போன்ற பிக்குகளை கொண்டு திட்டத்தை வகுத்தார். முதல் கட்டமாக அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தோன்றி சரத்பொன்சேகா கைது தொடர்பில் மதகுருக்கள் தலையிடுவது தவறு என தெரிவித்தனர். தவறு செய்த சரத்பொன்சேகா அதற்குரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு எதிராக பிக்குகள் செயற்படுவது அநீதியானது என மறைமுகமாக மகாசங்கத்தினரை சாடினார்கள்.

அடுத்த கட்ட தாக்குதலாக மகிந்த மகாசங்க பீடத்தின் கீழ் மட்ட பிக்குகளை குறிவைத்தார். அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி தேசத்தை பாதுகாக்கவருமாறு வேண்டினார். மீன்கள் தாமாகவே மகிந்தவின் வலைக்குள் துள்ளி குதித்தன. (அவை தற்போது மீன்தொட்டியில் வசதியாக உள்ளன). இதன் மூலம் மகாசங்க பிக்குகளிடையே மகிந்த ஆதரவு, மகிந்த எதிர்ப்பு என்ற இரு தரப்புகள் உருவாகின.

இந்த பிரித்தாளும் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. மகாசங்கத்தினர் கொஞ்சம் திணறித்தான் போனார்கள். இருந்தாலும் சங்கசபாவை கூட்டி மிகுதியை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த மகாசங்கத்தினருக்கு இடியாக இறங்கியது அந்த செய்தி.

சங்கசபா கூட்டப்பட்டால் கண்டியிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விடப்படும். வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படும். அந்தப்பழி மகாசங்கத்தினர் மீது சுமத்தப்படும் என்பதுதான் அந்த செய்தி.

அரண்டு போனார்கள் மகாசங்கத்தினர். இத்தனை காலமாக தீர்ப்பு சொல்லிவந்த நாட்டமைகளின் அடிமடியிலேயே கைவைத்தார் மகிந்த. வயிறு கலங்கிப்போனது மகாசங்கத்தினருக்கு. வெளிக்குப்போகலாம் என்று சொம்பைத்தேடினால் சொம்பைக்காணவில்லை.

சொம்பிழந்த நாட்டாமைகள் இனி எப்படி தீர்ப்பு சொல்லப்போகிறார்கள்??? என்று மட்டும் நீங்கள் கேட்காதீர்கள் ஏனென்றால் தீர்ப்பு சொல்ல மட்டுமல்ல ‘அதுக்குக்கூட’ இப்போது சொம்பில்லாமல் போய்விட்டது.

-- ஜீவேந்திரன்

Jeevendran

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Monday 15 February 2010

காமம் கொலை ஜெயேந்திரர் - வாழ்க சங்கர மடம்

சங்கரராமன் கொலை வழக்கில் நடப்பவற்றைப் பார்த்தால் இந்தியாவில் எவ்வளவு மோசமான ஊழல் மோசடி நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்திய சட்டமும் நிர்வாகமும் பிராமண சாதியாருக்கு சார்பாக எவ்வாறு வளைகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த சாட்சியாக அமைகிறது.

ஒவ்வொரு தடவை சாட்சிகள் விசாரிக்கப்படும் போதும் சாட்சிகள் தாம் அப்படி சொல்லவில்லை என்று பிறழ்சாட்சியாக மாறுவதும், தமிழ்நாட்டு பத்திரிகைகள், ‘சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் இரண்டு சாட்சிகள் பல்டி’... ‘மேலும் ஏழுசாட்சிகள் பல்டி’.. என செய்திகள் போடுவதும் வழமையாகி விட்டது. இப்படி இதுவரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ள போதும் தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் ஏதோ கிரிக்கெட் விளையாட்டில் நேர்முக வர்ணனை செய்வது போல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவதை வெகு சாதாரணமாக சொல்லுகின்றன. நீதியின் பக்கம் இருக்க வேண்டிய செய்தித்தாள்களுக்கு பிரபுதேவா நயன்தாரா பிரச்சனை பற்றி எழுதவே நேரம் போதாமல் இருக்கிறது.

ஆனால் இதே தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளும், வாரஇதழ்களும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு அவரது காமலீலைகள் விசாரணைகளில் வெளிவரத்தொடங்கியதும் ஆனந்தக்கூத்தாடின. ஒரு கொலைகாரன், காமக்கொடூரன், மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்பதற்காக அவை அப்படி ஆனந்தக்கூத்தாடின என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். தங்களுக்கு கிளுப்பான செய்தி கிடைத்துவிட்டது...ஜெயேந்திரரின் ஜல்சா என்று எழுதியே பத்திரிகை விற்பனையை கூட்டி விடலாம் என்பதுதான் அதற்கு காரணம்.

அவை போட்டி போட்டு செய்திகளை வெளியிட்டன. ஜெயேந்திரர் ஹார்லிக்ஸ் ஷர்மிலாவுடன் உல்லாசம், லீலாவுடன் லீலை, சீரங்கம் உஷாவுடன் அர்த்தராத்திரியில் சௌன்தர்ய லஹரி, சொர்ணமால்யாவுடன் காம லீலை இப்படி சினிமா கிசுகிசு போல படு இரசனையாக எழுதித்தள்ளின.

இத்தனைக்கும் சங்கரராமன் உயிரோடு இருந்த போது இந்தப் பத்திரிகைகளுக்கு சங்கர மடத்தில் நடக்கின்ற ஊழல்கள்களை பல கடிதங்கள் மூலம் தொடர்ந்து தெரிவித்திருக்கிறார். ஆனால் யாரும் அதுபற்றி கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பில் புலன்விசாரணையை மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்த வேண்டிய பத்திரிகைகள் நடிகைகள் யாரோடு படுத்தார்கள், யாரோடு இரவு விடுதிகளில் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டார்கள் என்பது பற்றி வாசகர்களுக்கு சுடச்சுட செய்திகளை தந்து கொண்டிருந்தன .

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று தெரிந்த சங்கராச்சாரி காவிக்கும்பல் வழக்கை தமது பிராமண சக்தியை பாவித்து புதுவைக்கு மாற்றிக் கொண்டனர். ( தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை என்னால் விசாரிக்க முடியாது. நான் ஜெயேந்திரரின் பக்தன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.) காவிக்கும்பலுக்கு காவடி எடுக்கும் உச்ச நீதிமன்றும் தன்னாலான உதவிகளை தமது ஆன்மீக குருக்களுக்கு செய்தது. தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று கட்டளையிட்டது.

பத்திரிகைகளும் காம லீலைகளை எழுதி எழுதி ஓய்ந்து விட்டதாலும் அதன் பிறகு பிரபுதேவா நயன்தாரா போன்ற நாட்டுக்குத்தேவையான சமூக விடயங்கள் வந்து விட்டதாலும் ஜெயேந்திரரை மறந்துவிட்டன. எப்போதாவது சாட்சிகள் பல்டி என ஒரு செய்தியைப்போட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கின்றன.

ஆனால் கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201) போன்ற கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு அதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு , குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு ஜெயேந்திரர் 61 நாட்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையிலும், விஜயேந்திரர் 31 நாட்கள் சென்னை மத்தியச் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது பற்றியோ, இந்த வழக்கிலுள்ள நியாய தர்மங்கள் பற்றியோ அவை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

சங்கரராமன் குடும்பத்தினர் காலங்காலமாக சங்கரமடத்தில் சேவை செய்து வந்தவர்கள். ஜெயேந்திரரும் விஜெயேந்திரரும் காவியை போர்த்துக்கொண்டு மடத்தில் அடிக்கின்ற கொள்ளைகள், காம கூத்துகள் தொடர்பில் சங்கரராமன் பெரும் அதிருப்தியை கொண்டவராக இருந்து வந்திருக்கிறார். இது தொடர்பில் சோமசேகரகனபாடிகள் எனும்பெயரில் காவல்துறை, பத்திரிகைகள், வருமான வரித்துறை,அறநிலையத்துறை போன்றவற்றுக்கு அடிக்கடி ஆதாரங்களுடன் புகார் கடிதங்களை எழுதி வந்திருக்கிறார். ஆனால் பிராமண சக்தியின் சர்வ வல்லமையை உணர்ந்தவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை.

பின்னர் இறுதி எச்சரிக்கை என ஜெயேந்திரரின் கொள்ளைகள் காம லீலைகள் தொடர்பில் ஒரு கடிதத்தை எழுதி தன் சொந்தப்பெயரிலேயே ஜெயேந்திரருக்கு அனுப்பிஇருக்கிறார். அந்தக் கடிதத்தை அனுப்பிய மூன்று நாட்களிலேயே அவர் கூலிப்படையால் கொல்லப்பட்டார். ரவி சுப்பிரமணியம், அப்பு போன்ற சிலரின் உதவியுடன் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சங்கரராமனை கொல்லும்படி ஜெயேந்திரர் உத்தரவிட்டது முதல் திட்டம் தீட்டப்பட்டு கொலை நிகழ்த்தப்பட்டது வரை அரசதரப்பு சாட்சியாக மாறிய ரவி சுப்பிரமணியம் அளித்த 20 பக்க வாக்குமூலத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயேந்திரர் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு வாங்கிக்கொடுத்தது, சொர்ணமால்யாவின் கணவரை மிரட்டி விவகாரத்து வாங்க வைத்தமை முதல் ஹார்லிக்ஸ் ஷர்மிளா, லீலா ,சீரங்கம் உஷா, பிரேமா, பத்மா போன்ற பல பெண்களுடனான ஜெயேந்திரர் கொண்டிருந்த தகாத காம உறவுகள் வரை ரவி சுப்பிரமணியம் அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விஜெயேந்திரர் அவரது தம்பி ரகு போன்றோரின் பண, நகை, நில கொள்ளைகள், சங்கர மடத்திலேயே இடம்பெற்ற விபசார நடவடிக்கைகள் என்பவற்றையும் ஜெயேந்திரரின் வலது கையாக விளங்கிய ரவி சுப்பிரமணியம் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதுதவிர தனது கணவரின் கொலை குறித்து தமிழக பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவித்திருந்த சங்கரராமனின் மனைவி பத்மாவும் குடும்பத்தினரும் ஜெயேந்திரரே இந்த கொலையின் பின்னணியில் இருப்பதை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்ததுடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பலதடவைகள் ஜெயேந்திரரின் சகாக்கள் நள்ளிரவுகளில் சங்கரராமனின் வீட்டில் நுழைந்து மிரட்டியும் வீட்டை உடனே காலி செய்யுமாறும் எச்சரித்தும் வந்திருந்தனர்.

இது எதுவும் கண்டு கொள்ளப்படாத நிலையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புதுவை நீதிமன்றில் இடம்பெற்ற குறுக்கு விசாரணையின் போது சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் ஏற்கனவே காஞ்சிபுரம் நீதிமன்றில் அளித்த வாக்குமூலத்தில் இருந்து மாறி சாட்சியமளித்தனர். அதற்கான காரணத்தை நிர்பந்தத்தை யாரும் அறிவர்.

''காவ‌ல்துறை‌யின‌ர் காட்டிய புகைப்படங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம்'' எ‌ன்று‌ம் ''எங்கள் வீட்டிலிருந்து காவ‌ல்துறை‌யின‌ர் எடுத்து வந்த கடிதம் சங்கரராமனின் கையெழுத்து இல்லை...இந்த கடிதத்தை இப்போதுதான் பார்க்கிறோம் எ‌ன்று‌ம் கொலை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது'' எ‌ன்று‌ தெரிவித்ததாக வெட்கமில்லாமல் தமிழக பத்திரிகைகளும் இதழ்களும் செய்தி வெளியிட்டன. இங்கு நடந்திருக்கக்கூடிய ஊழல், மிரட்டல், உயிர் அச்சுறுத்தல், சங்கர மடத்தின் கொடூரம் பற்றி பத்திரிகைகள் மட்டுமல்ல வேறு எந்த அமைப்புகளும் கூட கவனத்தில் கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

இதே போல் ஆனந்த கிருஷ்ண தர்மா, காசாளர் கணேஷ் நேரடி சாட்சிகளான கணேஷ் குப்புசாமி துரைக்கண்ணு எனத்தொடங்கி இப்போது வரை 26 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் கொலை கொள்ளை காம வெறியாட்டம் என சகல குற்றங்களையும் செய்த ஜெயேந்திரரும் காவிக்கும்பலும் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படப்போகிறார்கள். சுமார் பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கொண்ட சங்கர மடம் மீண்டும் ஒருமுறை தனது பலத்தை பிராமணிய வெற்றியை நிருபிக்கப்போகிறது. இளிச்சவாயர்களான தமிழர்கள் நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டே வழமைபோல தோற்கப்போகிறார்கள் . தமிழனின் தலை எழுத்தை யார்தான் மாற்றமுடியும்?

(அதுசரி ஜெயேந்திரர் செய்த குற்றங்களைத்தானே பிரேமானந்தாவும் செய்தார். அவருக்கு ஆயுள் தண்டனை . பிராமணன் என்பதால் ஜெயேந்திரருக்கு விடுதலையா என்று மட்டும் நீங்கள் பின்னூட்டத்தில் கேட்கவேண்டாம்).

சென்னையிலிருந்து - இரா. வெங்கட்மணி

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Jeevendran

Thursday 11 February 2010

நீலப்படமும் சாரு நிவேதிதாவும்

அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அதை வாசிக்கும் போது ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக எழுத முடியுமா என்றுதான் நினைத்தேன் (இந்தாளை நிறையப்பேர் எழுத்தாளன் என்று சொல்வதில்லை 'அரிப்பெடுத்த ஒரு லூசு' என்றுதான் சொல்கிறார்கள்). இவர் கமல்ஹாசனைப்பற்றியும் இளையராஜவைப்பற்றியும் கேவலமாக எழுதும் போதெல்லாம் இந்தாள் ஒரு மன நலம் சரியில்லாதவர் என்றே எனக்கு தோன்றியிருக்கிறது. அப்போதெல்லாம் இந்தாளுக்கு மறுப்பெழுத நினைத்ததுண்டு...ஆனால் போனால் போகட்டும் லூசு என்று வாளாவிருந்தேன்.

இவரைப்போன்ற சிலர் பிரபலங்களை திட்டி எழுதி பிரபலமாக நினைக்கிறார்கள். பிரபலங்களை பற்றி ஏதாவது வேண்டுமென்றே சர்ச்சையாக எழுதிவிட்டால் வாசகர் வரவு அதிகரிக்கும் என்பது சாரு நிவேதிதா போன்ற பன்னாடைகளின் தந்திரம்.(அல்லது இருக்கவே இருக்கிறாரே இந்து தீவீரவாதி ஜெயமோகன்..அவரைப்பிடித்துக்(கொல்வார்) ) இது ஒரு சாபக்கேடு. கமல்ஹாசன் ’தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரை மாற்றி உன்னைப் போல் ஒருவன் என்று வைக்க காரணம் தனது விமர்சனம்தானாம் என்கிறார் சாரு. தனது தளத்தை வாசித்து விட்டு (பயந்து போய்) படத்தின் பெயரை மாற்றிவைத்தாராம் கமல்.(இது என்ன கொடுமை? சுய புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? )

சாரு நிவேதிதாவிடம் தரமான படங்கள் என்றாலே அது ஹொலிவூட் படங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை ஹொலிவூட் புராணந்தான். ஆனால் அமெரிக்காவில் தயாராகும் முக்கால்வாசிப்படங்கள் குப்பை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவதார் போல ஒருசில படங்கள் வந்து உலகை கலக்குவதால் சாருவுக்கு அந்த பிரமை ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் அமெரிக்காவுக்கு வெளியேதான் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன. ஈரான்,கொரியா, இலங்கை(சிங்களம்), ஜப்பான் , சீனா, பிரான்ஸ் போன்ற இன்னும் எத்தனையோ கவனிக்கப்படாத நாடுகளில் வெளிவந்த திரைப்படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பரிசுகளை அள்ளிச்செல்கின்றன. அமெரிக்க படங்களுக்கு பரிசு கொடுக்க அமெரிக்காவின் ஒஸ்காரை விட்டால் வேறு கதி இல்லை. அமெரிக்காவின் உலக வர்த்தக பலத்துடனான தயாரிப்பு சக்தியை வைத்துக்கொண்டு தமிழ் படங்களை விமர்சனம் செய்கின்ற சாரு நிவேதிதா தான் ஒரு கூமுட்டை என்பதை காட்டிவிடுகிறார் .

//நான் சோழர் குலப் பெருமை பேசும் வீரத் தமிழன் இல்லை; ஆனால் சோழர்கள் மேற்கே தென்னாஃப்ரிக்காவை ஒட்டியுள்ள தீவுகளிலிருந்து கிழக்கே கம்போடியா வரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர்கள். அவர்களைத்தான் இப்படிக் காட்டுமிராண்டிகளைப் போல், நர மாமிசம் தின்பவர்களாகக் காட்டியிருக்கிறார் ஒரு தமிழ் இயக்குனர். பாரம்பரியப் பெருமை கொண்ட ஒரு இனத்தின் மீதே சேற்றை வாரி இறைத்து விட்டு, டைட்டிலில் சோழர், பாண்டியர் குல வரலாற்றுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போட்டு விட்டால் ஆயிற்றா..//' என்கிறார் சாரு நிவேதிதா.

ஒரு திரைப்படம் கட்டாயம் வரலாற்று உண்மைகளையும், சரித்திர ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வாறு சரித்திர ஆய்வுகளின் அடிப்படையில் தயாராகின்ற எத்தனையோ படங்கள் இருகின்றன. ஆனால் புனைகதைகளின் அடிப்படையில், கற்பனைகளின் அடிப்படையில் கடந்த காலத்தில் நடந்தாக ஒரு திரைப்படம் வெளிவரக்கூடாதா?

ஒரு இயக்குனரின் படைப்பாளியின் கற்பனையை சாரு நிவேதிதா கட்டுப்படுத்த நினைப்பது சர்வாதிகாரமில்லையா?

இதைவிடக்கொடுமை எதுவென்றால், எழுத்துலகில் மிக கேவலமான காமவெறிபிடித்த எழுத்தாளராக காறித்துப்பப்படும் சாரு நிவேதிதா ஆயிரத்தில் ஒருவன் பற்றி இப்படி சொல்கிறார்-

//ஏற்கனவே வன்முறையும், பாலியல் விபரீதங்களும் மிகுந்த நமது தமிழ் சமூகத்தில் இது போன்ற படங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறிப்பாக இந்தப் படத்துக்கு வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்கின்றனர். ” என் கிட்ட ’ காண்டம் ’ இருக்கு; படுத்துக்க வர்றியா? ” என்று ஆண்ட்ரியாவிடமும், ரீமா சென்னிடமும் கேட்கிறார் கார்த்தி. ஒரு காட்சியில் அதே கார்த்தியை மல்லாக்கப் போட்டு அவருடைய இரண்டு பக்கத்திலும் அந்த இரண்டு பெண் பாத்திரங்களும் குப்புறப் படுத்த நிலையில் ஏறிக் கொள்கின்றனர். காட்டில் குளிர்கிறதாம். இவ்வளவுக்கும் ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார். அப்படியே அவர் தன்னுடைய பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது திரை அரங்குகளில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. ’ காண்டம் இருக்கிறது; செய்யவா? ’ என்று கேட்ட கார்த்தி அந்த இனிய வாய்ப்பை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஐயம் கார்த்திக்கு எழுந்ததோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழுந்தே இருக்கும். இப்படி படத்தின் முதல் பாதி முழுவதும் நீலப்படமாக (Threesome) இருக்க , இரண்டாவது பாதியை பைத்தியக்காரனின் உளறல் என்று சொல்லலாம். //

இதை எழுதின விதத்தை பாருங்கள் //கார்த்தியை மல்லாக்கப் போட்டு....// ... //ரீமா சென் பேண்டீஸை விட கொஞ்சம் பெரிதான நிக்கர்தான் அணிந்திருக்கிறார்//....//பச்சைத் தொடைக்கறியை கார்த்தியின் மல்லாந்த உடம்பில் போட்டு அழுத்தும்போது// ... படத்தை பார்த்த யாருக்கும் இவ்வளவு கேவலமான எண்ணங்கள் தோன்றியிருக்குமா? அல்லது எழுதியிருப்பார்களா? போதாதற்கு இன்னும் சொல்கிறார்-

//இந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. ஆயிரத்தில் ஒருவனில் இது போன்ற ஏராளமான கிளுகிளு காட்சிகள் தணிக்கைத் துறையினரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் முதல் நாள் பார்த்த போது இருந்த இந்த உலகத்தரமான காட்சி மறுநாள் அதே திரையரங்கில் பார்த்தபோது நீக்கப்பட்டிருந்தது. செல்வராகவனே கால் மணி நேரப் படத்தை நீக்கி விட்டதாக பேட்டி அளித்துள்ளார். ஆனால் ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை//

படம் சரியில்லை என்றால் இரண்டாவது தடவை ஏன் போனார்?? அதிலும் -'ரீமா சென் நிர்வாணமாக நின்று மூத்திரம் அடிக்கும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கியது செல்வராகவனா, அல்லது அந்தத் தியேட்டர் ஆபரேட்டரா என்று தெரியவில்லை' -என்ற கோபம் வேறு(ஆசையாக எதிர்பார்த்து போனவருக்கு கோபம் வராதா என்ன?).

அடுத்ததாக சொல்கிறார்-

//நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த fetish ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும் பல காட்சிகள் ஆயிரத்தில் ஒருவனில் உண்டு. செல்வராகவன் ஆங்கிலப் படங்களுக்கு இணையான தரம் என்று இதைத்தான் சொல்கிறார் என்று கருதுகிறேன்//

இந்த கண்றாவி எல்லாம் வருவது இவருக்கு எப்படி தெரியும். இந்த மாதிரியான fetish வகை படங்களையும் நீலப்படங்களையும் பார்த்துவிட்டுத்தான் சாரு நிவேதிதா தனது எழுத்துகளில் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

அது போகட்டும் என்று விட்டால் திடீர் என்று இலங்கைப்பிரச்சனைக்கு தாவுகிறார்.

//ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது? //

இப்படி செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி குறைகூறும் சாரு நிவேதிதா ஈழப்போராட்டம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? //இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான்//

ஈழப்போராட்டம் ஆரம்பமானது எப்போது...? இந்திய இராணும் வந்தது எப்போது...? இந்திய இராணும் கற்பழித்தது வடகிழக்கு தமிழ் பெண்களையே தவிர சிங்கள பெண்களை அல்ல. இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல் எழுதுகின்ற சாரு நிவேதிதா செல்வராகவனின் வரலாற்று பார்வை பற்றி பேசுவதை பார்க்கும் போது வாயடைத்துப்போகிறோம்.

அதுமட்டுமல்ல அவர் ஆடை வடிவமைப்பாளரையும் கூட விட்டு விடவில்லை...

//இந்தப் படத்தில் பாராட்டக்கூடிய அம்சங்கள் என்று ஆடை வடிவமைப்பாளர் (எரும் அலி) மற்றும் பார்த்திபனின் நடிப்பைச் சொல்லலாம். ஆனால் ஆண்ட்ரியாவைத் தவிர படத்தின் மற்ற இரண்டு பிரதான பாத்திரங்களான கார்த்தியும் ரீமா சென்னும் ஜட்டி பனியனிலேயே நடித்திருப்பதால் எரும் அலியை பாராட்ட முடியவில்லை// திரும்ப திரும்ப சுப்பனின் கொல்லைக்குள்ளேயே (ஜட்டிக்குள்ளேயே) சுத்துகிறார் மனுஷன்.

ஒரு மொடாக்குடிகார, மற்றவர்களின் எழுத்தை திருடி தனது பெயரில் போட்டுக்கொள்கின்ற, சமூக நோக்கமற்ற, கீழ்த்தரமான காமத்தை வலிந்து புகுத்தி வாசகர்களை கவர நினைக்கின்ற, பொது இடங்களில் கூட ரௌடி போல நடந்தது விளம்பரம் தேடுகின்ற, தனக்கு போட்டியென்று நினைக்கும் எழுத்தாளர்கள் மீது தனிப்பட்ட வசைபாடல்களை செய்து அதிலும் விளம்பரம் தேடுகின்ற, ஒரு மூன்றாந்தர மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளரிடமிருந்து வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்?

(அதற்காக ஆயிரத்தில் ஒருவன் சிறந்த படம் என்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்)

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

ஜீவேந்திரன்

Jeevendran

Wednesday 10 February 2010

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

சரத் பொன்சேகாவை இராணுவத்தினர் அடித்து இழுத்து கடத்திப்போன போனபோது... எனக்கு தோன்றியது இதுதான் - 'வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'.

அப்போது சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதியாக இருந்தார். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள் அதிகம். கடத்தல் காணாமல் போதல் வெகு சாதாரணமாக இருந்தது. ஏற்கனவே இராணுவ தளபதியாக இருந்தவர் ஏதோ தன்னால் முடிந்த அளவு தமிழரின் பிணங்களை செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் புதைத்துவிட்டு போயிருந்தார். அதைத்தொடர்ந்து வந்த சரத்பொன்சேகாவும் முன்னவர் விட்ட பணியை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா, தான் ஒரு சிங்கள பௌத்த வீரர் என்பதை எப்போதும் காட்டிக்கொள்வதில் தயக்கமில்லாதவர். போர் நிறுத்த உடன்படிக்கையை அவர் ஒரு பொருட்டாகவே மதித்திருக்கவில்லை. (புலிகள் உட்பட யார்தான் அதை மதித்தார்கள்?).

அந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் என்னைபோன்ற செய்தியாளர்கள் என்றால் சரத்பொன்சேகாவிற்கு அவ்வளவு பிடிப்பதில்லை. அதுவும் தொலைக்காட்சி படப்பிடிப்பு என்றால் அதோகதிதான். எல்லாப்பகுதிகளும் இறுக்கமானவையாகவே இருந்தன.

போர் நிறுத்த உடன்படிக்கையில் சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கவில்லை. என்னைப்போன்ற செய்தியாளர்களை விடுங்கள், ஜெயலத் ஜெயவர்த்தன போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கே நாக்கு தள்ளிப்போனது.

பிரதமராக இருந்த ரணிலை விட சரத்பொன்சேகாவிற்கு யாழ்ப்பாணத்தில் பலம் அதிகம். அப்போதுதான் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யும் விடயம் வந்தது. இங்கு இருந்த சிக்கல் என்னவென்றால் யாழ்ப்பாணத்தின் ஏறத்தாழ கால்வாசி பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்தது. தீவுப்பகுதிகள், பலாலி, வலிவடக்கு, என ஏராளமான கரையோரங்கள் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் இராணுவத்தால் விரட்டப்பட்டு அகதிகளாக முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்தனர் (இப்போதும் அதே நிலைதான்).

அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களின் மையப்பகுதியில் இல்லாவிட்டாலும் எல்லைகளில், ஓரங்களில் மக்களை மீள் குடியேற்ற சமாதான உடன்படிக்கையின்படி இணக்கம் காணப்பட்டது. எனினும் சரத்பொன்சேகா பிடிவாதமாக அதனை மறுத்து விட்டார். அனைவரையும் இல்லாவிட்டாலும் சிறு தொகையினரையாவது குடியேற்ற அனுமதிக்குமாறு காலில் விழாத குறையாக கேட்கப்பட்டது. அதே போல சமாதான நல்லிணக்க சபை யாழ் ஆயர் இல்லத்தில் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்ட சரத்பொன்சேகா திரும்பவும் தனது பிடிவாதத்தையே முன்னிறுத்தினார். உயர் பாதுகாப்பு பிரதேசங்களில் மக்களை மீள குடியமர்த்த விடமாட்டேன் என்பதே அவரது முடிவாக இருந்தது.

ஒரு வகையில் அமைதி பேச்சு முறிவடைய இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. (விடுதலைப்புலிகள் மக்களை அதியுயர் பாதுகாப்பு பிரதேசங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதில் ஏன் அவ்வளவு அக்கறையாக இருந்தனர் என்பது வேறு கதை. அவர்களும் தமது ராணுவ நலன்களை இதில் முன்னிறுத்தினார்கள் என்பது வெளிப்படை).

சரத்பொன்சேகாவின் பிடிவாதத்தின் பின்னணியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் நிழல் இருந்திருக்கலாம். சரத்பொன்சேகாவிற்கு பதிலாக வேறு ஒரு இராணுவ தளபதி இருந்திருந்தாலும் சில சமயம் இப்படியேதான் நடந்திருக்கலாம்.

மறுபுறம் சரத்பொன்சேகாவின் பதவிக்காலத்தில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் ,காணாமல் போனார்கள்.( பல குற்றங்களின் பின்னணியில் இராணுவத்தின் ஆசியுடன் ஈ.பி. டீ.பி யினர் இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது). எத்தனையோ தாய்மார்கள் கதறக்கதற பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

சரத் பொன்சேகா ஒரு சிங்கத்தைப்போல யாழில் உலா வந்தார். சிங்கள இராணுவத்தினரின் நலன்களே தனக்கு முக்கியம் என்பதை அவர் வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். தானும் இராணுவத்தினரும் தமிழர்களின் பூமியில் அடாவடித்தனமாக ஆக்கிரமித்தே இருக்கிறோம் என்பதை அவர் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை. சிங்கள இராணுவத்தினர் அவரை ஒரு கடவுளைப்போல பார்த்தார்கள்..மதித்தார்கள்.

ஆனால்.... இப்போது அதே சரத் பொன்சேகாவை அதே இராணுவத்தினர் ஒரு நாயைப்போல் அடித்து உதைத்து ,பிடரியில் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். தமிழ் தாய்மார்களைப்போல் சரத்தின் மனைவி இன்று அழுகிறார்.

இப்போது சொல்லுங்கள்.....ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்....சரிதானே..???

இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Jeevendran

Tuesday 9 February 2010

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு

இலங்கை பாராளுமன்றம் செவ்வாயன்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் நாள் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் (19 - 26 ) இதற்கான வேட்பாளர் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட முடியாதபடி அவரது பிரஜாவுரிமை பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கூட்டணியில் போட்டியிடுபவர்களை தெரிவு செய்யுமுகமாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக தலைமையில் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியும் சகோதரர்களுமே இதில் செல்வாக்கு செலுத்துவார்கள் என்பது வெளிப்படையானது .

இதேவேளை ஏற்கனவே எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்கள் கட்சிதாவி அரசாங்கத்திடம் சென்றுவிட்டனர். அவர்கள் தற்போதுள்ள அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர். தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் இவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது அரசாங்கத்தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் எனத்தெரிகிறது.

மேலும் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். (ஏற்கனவே மகிந்தவின் குடும்பத்தைச்சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்தில் உள்ளனர் ). இந்த அரச குடும்பத்தின் அடுத்த வாரிசும் இத்தேர்தலில் இறங்குவதால் தேர்தல் களம் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேபோல ஐக்கிய தேசிய கட்சியிலும் ரணில் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு வேட்பாளர் தேர்வு சூடு பிடித்துள்ளது.

மகிந்த தரப்பினர் தேர்தலில் பெயருக்கு போட்டியிட்டாலும் தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தின் கையில் இருப்பதால் (அவரது மனைவியும் மகளுந்தான்) மகிந்த தரப்பின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார்கள் சிலர்.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவரது மனைவி செய்தியாளர்களை சந்தித்து தனது கணவர் கைது செய்யப்படவில்லை கடத்தப்பட்டுள்ளார், அவரை சந்திக்க விடவில்லை, அவருக்கு தினமும் கொடுக்க வேண்டிய மருந்துகளை வழங்கவிடவில்லை எனக்கூறி அழுதுள்ளார். ஆனால் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு புறம் ஊடகப்போரும் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை பொன்சேகாவை மீட்டுத்தரும்படி ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோதே இந்தக்கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன் பின்னர் செவ்வாயன்று நாடு திரும்பிய ரணில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தமது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Monday 1 February 2010

வேட்டை ஆரம்பமாச்சுடோய்..! - மகிந்த ராஜபக்ஷ

தேர்தல் முடிவை வெளியிடுவதில் பல தில்லுமுல்லுகளை செய்து (இவை பற்றிய தகவல்களை எனது தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளி வாய்க்கால் தொடர்ச்சியா? என்ற கட்டுரையில் பார்க்கவும்) ஒருவாறு பதவியை தக்கவைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ தற்போது தனது வேட்டையை முழு வேகத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்.

மகிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அவரது அன்புத்தம்பி கோதாபே ராஜபக்ஷவின் தலைமையில் தங்களுக்கு எதிரானவர்கள் என கருதப்படுவோரை பழிவாங்க (அல்லது போட்டுத்தள்ள) புதிய குழுவொன்று அமைக்கப்படுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த குழுவில் இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து தப்பியவர்கள், சமூக விரோதி கும்பல்களை சேர்ந்தவர்கள், மேர்வின் சில்வா தலைமையிலான பாதாள உலகத்தினர் என பலரும் அடங்கியுள்ளனர் என்றும், இவர்கள் யாரை வேட்டையாட வேண்டும், எப்படி வேட்டையாட வேண்டும் என கோதாபே ராஜபக்ஷ நேரடியாக வழி நடத்தி வருவதாகவும் கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

தேர்தலின் பின்னர் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு கொலைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. அதிலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா முதல் கொண்டு பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இப்படியான வன்முறைகள் நடக்கிறது..மோசடி நடக்கிறது என்ற செய்திகளை வெளியிடக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறுஞ்செய்திகள் அனுப்புபவர்கள், இணையத்தில் செய்தி வெளியிடுபவர்கள், மின்னஞ்சல் அனுப்புபவர்கள் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கையின் கோயபல்ஸ் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கின்ற சுதந்திர தகவல் பரிமாற்றத்திற்கும் ஆப்பு தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

சரத் பொன்சேகாவிற்கு தொகுதிகளில் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தவர்கள், சுவரொட்டிகள் ஒட்டியவர்கள், வாக்கு சேகரித்தவர்கள் என பலர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. சரத் பொன்சேகாவும் அவருடைய பாதுகாப்பு பிரிவினரும் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குடும்பத்துடன் மறைந்து வாழ வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இவர் கொல்லப்படலாம் என்றும் மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளராக இருந்து பின்னர் தேர்தல் சமயத்தில் இவர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்தமையே இப்போது அவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில்12 முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். 3 மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள், உட்பட கேணல், லெப். கேணல், கப்டன் தர அதிகாரிகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு ஆப்பு காத்திருக்கிறது.

சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கு ஏற்றதாக சதித்திட்ட வழக்கொன்று புனையப்பட்டு வருவதாக தெரிகிறது. இராணுவ ஆட்சி ஒன்றுக்கு சரத் பொன்சேகா திட்டமிட்டதாகவும், மகிந்தவை கொல்ல சதி முயற்சி செய்ததாகவும் கூறி அவரை சிறையிலடைக்க அல்லது தப்பிச் செல்ல முற்பட்டார் எனக்கூறி போட்டுத்தள்ள ஏற்பாடுகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா மட்டுமல்லாது அவருடைய மருமகன் போன்ற குடும்ப உறுப்பினர்களும் நாட்டில் இருந்து தப்பி செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டளைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (இரு மகள்மார் திங்களன்று அமெரிக்கா சென்றதாக தெரிகிறது). சரத் பொன்சேகாவின் அலுவலகம் சோதனை செய்யப்பட்டு 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் பாதுகாப்பளித்து வந்த 90 படையினரை அகற்றி தற்போது 4 போலீசார் மட்டும் அமர்த்தப்பட்டுள்ளனர். (தமிழ் மக்களுக்கு எதிராக பல படுகொலைகளை நிகழ்த்திய, புலிகள் எனக்கூறி பல தமிழ் இளைஞர்களை போட்டுத்தள்ளிய, யாழ் மக்களது இயல்பு வாழ்க்கைக்கு புலிகளின் பெயரால் பல தடைகளை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவிற்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என்பது வேறு கதை).

இதே வேளை இந்த தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த கருத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும், எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாதென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர ஆகிய பீடங்களை சேர்ந்த பிரதம மதகுருக்களை சந்தித்து ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையாளரிடமும் முறையிடப்படுள்ளது. அவரும் விசாரிப்பதாக கூறியிருக்கிறார். (தான் போக வழியில்லையாம் மூஞ்சுறுக்கு, விளக்குமாறை கொண்டு போகணுமாம்)

மகிந்தவின் வேட்டையை வெளியில் சொல்லக்கூடிய செய்தியாளர்களுக்கு எதிராகவும் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

குறிப்பாக தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற தில்லுமுல்லுகளை செய்தியாளர்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. செய்தி ஊடகங்களின் தொலைபேசிகள், இணையம் என்பவை கண்காணிக்கப்படுகின்றன. பல செய்தியாளர்களை உளவுப்பிரிவினர் பின்தொடர்கின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.

ஜே. வி.பி கட்சியின் ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகெகொடையில் அமைந்துள்ள இரிதா லங்கா பத்திரிகை அலுவலகம் புலனாய்வுத் துறையினரால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. (தற்போது இதற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது). ஏற்கனவே இரிதா லங்கா அலுவலகத்தை உடைத்து தேடுதல் நடாத்தப்பட்டிருந்தது . லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்தில் பலதடைவைகள் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த இணையத்தளத்தை மக்கள் பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்தது. பின்னர் இந்த இணைய செய்தி அலுவலகம் திறக்கமுடியாதவாறு பலாத்காரமாக மூடப்படுள்ளது.

உதயன் தமிழ் பத்திரிக்கை மீதும் அமைச்சர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளது. இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம வானொலி நிலைய அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக இடம்பெற்ற மோசடிகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பல வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.

அதே போல தனக்கு எதிராக வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீதும் தனது வேட்டையை ஆரம்பிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. ஏற்கனவே வன்னி அகதி முகாம்களில் சுகாதார வசதி உட்பட பல சேவைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மகிந்தவின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிந்தவுடன் மகிந்த தனது அடிபொடிகளிடம் (அல்லக்கைகளிடம்) இப்படித்தான் சொல்லியிருப்பார்......

வேட்டை ஆரம்பமாச்சுடோய்..!

(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும் ).

--- ஜீவேந்திரன் ----

http://jeevendran.blogspot.com/

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.