Thursday 18 March 2010

போராளிகளும் நாய்களும் - கருணாநிதியின் பச்சை வேட்டை

கருணாநிதி / மாறன் குடும்ப பத்திரிகையான தினகரன் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி இது-

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை கண்டவுடன் வெட்டிக் கொல்ல வேண்டும் என கிராம மக்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள். காரணம் இரவில் அவர்கள் நடமாடும்போது குரைக்கிறதாம். மேற்கு வங்கத்தில் அதிரடிப்படை முகாம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை ஒழிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து Ôகிரீன் ஹன்ட்Õ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இரவில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டத்தின்போது, தெரு நாய்கள் குரைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதாம். அதனால் எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீ.வாதிகள். இதையடுத்துத்தான் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக கிராமம்தோறும் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. நாய்கள் என்ன பாவம் செய்தன? அவற்றை ஏன் கொல்ல வேண்டும்? உங்கள் சண்டையில் நாய்களை ஏன் இழுக்கிறீர்கள்? தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள் என பீட்டா அமைப்பும் கெஞ்சிப் பார்த்துவிட்டது. ஆனாலும் மாவோ தீவிரவாதிகள் தங்கள் உத்தரவை வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள். கிராம மக்களுக்கு ஒரு பக்கம் தீவிரவாதிகளால் பிரச்னை. மறு பக்கம் அதிரடிப் படையினரின் விசாரணை தொல்லை. இவை போதாதென்று, நாய்கள் படுகொலை என்ற புதிய பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.

இந்த தினகரன் செய்தி சொல்ல வருவதென்ன?

ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க பிரதேசங்களில் பழங்குடி மக்களின் பூர்வீக வாழிடங்களை இந்திய அரசாங்கம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு விற்று விட்டமையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது . பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இது எதுவுமே இந்த தினகரன் பத்திரிகைக்கு தெரியவில்லை. அங்குள்ள மக்களது உண்மை நிலையை அறிய தினகரன் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டதா ?

தினந்தோறும் கொல்லப்படுகின்ற மக்கள் குறித்தோ ..இராணுவ படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்தோ...அழிக்கப்பட்ட கிராமங்கள் குறித்தோ.. தகவல்களை தேடியறிந்து தினகரன் செய்தி வெளியிட்டதா?

'ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள்' என்று எழுதும் தினகரன் அங்கு கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு துளியும் கவலைப்படவில்லை.

அடிக்கின்ற கொள்ளையை பங்கிட்டு கொள்ளவும், நித்தியானந்தா விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தவும், நடிகைகளை வைத்து போட்டி நடத்தவுமே இந்த கொள்ளைக்கார கருணாநிதி குடும்ப ஊடகங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்தி வெளியிடுவது?

குறிப்பிடப்படுகின்ற பிரதேசங்களுக்கு சுயாதீனமாக செய்தியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்களது உண்மை நிலையை எடுத்துச்சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 'எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீவீரவாதிகள்' என்ற விடயம் மட்டும் தினகரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

என்னே ஒரு பத்திரிகா தர்மம்.....என்னே ஒரு நடுநிலை...

வாழ்க ஊடகத்துறை!

சென்னையிலிருந்து இரா. வெங்கட் மணி

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- ஜீவேந்திரன்

Jeevendran

Saturday 13 March 2010

சந்தி சிரிக்கும் தமிழர் அரசியல் - தமிழ் ஈழம் 20/20

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடம்பெற்று வருகின்ற கூத்துகள் மக்களிடையே ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் தேசியம் தமிழர் விடுதலை என்று வாய்கிழிய பேசியவர்கள் இன்று நாடாளுமன்ற பதவிகளுக்காக வெட்கம் மானம் இழந்து அடிதடியில் இறங்கியுள்ளனர்.

காலம் காலமாக இவ்வாறான பிழைப்புவாத அரசியலையே தமிழர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கேவலமான அரசியல் காரணமாகவே தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சிங்கள அரசியல்வாதிகள் தமிழரது சுயநல கேவலங்கெட்ட அரசியலை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தினார்கள். தமிழ் நண்டுகள் ஒரு போதும் இலக்கை அடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அது கடந்த காலம் போகட்டும் என்று ஒதுக்கி விட்டாலும் இப்போது என்ன நடக்கிறது?

பல்வேறு வழிகளிலும் பெரும் இழப்புகளை சந்தித்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் பெரு மூச்சு விட்டார்கள். இனியாவது தமது தலைவர்கள் ஒற்றுமையாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பாடுபடுவார்கள் என நம்பினார்கள்.

நந்தவனத்திலோர் ஆண்டியைப்போல விடுதலைப்பானையை முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் போட்டுடைத்த பின்னர் தமிழர்களுக்கு இருந்த ஒரு நம்பிக்கை வெளிச்சமாக தமிழ் கூட்டமைப்பே காணப்பட்டது. புலிகள் அரசியல் தெரியாதவர்கள் துப்பாக்கியை மட்டுமே நம்பியவர்கள், தமிழ் கூட்டமைப்பு அப்படியல்ல. அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் எனவே அரசியல் ரீதியாக விடுதலை வென்று எடுக்கப்படும் என பல ஆய்வாளர்கள் வழமை போல தமது பத்திகளை நிரப்பினார்கள். வழமை போல மக்களும் நம்பினார்கள்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் பொய்த்து போய்விட்டது.

முள்ளிவாய்க்காலில் அங்குசம் காணாமல் போய்விட்டதால் தமிழ் கூட்டமைப்பு யானை தறிகெட்டு ஓடத்தொடங்கி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி 8 அணிகளாக பிரிந்து IPL 20/20 போட்டியில் ஆடுவதைப்போல இப்போது தமிழ் கூட்டமைப்பு நான்கு துண்டுகளாக பிரிந்து தேர்தல் போட்டியில் ஆடுகிறது.

அணி 1. சம்பந்தர் மாவை சுரேஷ் ஆகியோரின் கூட்டமைப்பு.

அணி 2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தமிழ் காங்கிரஸ்

அணி3. சிவாஜிலிங்கம்,சிறீகாந்தா ஆகியோரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

அணி 4. மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ள சிவநாதன் கிசோர் , கனகரத்தினம், தங்கேஸ்வரி ஆகியோரின் அணி

இப்போது அணிகளின் விவரங்களைப்பார்ப்போம்.

சிவநாதன் கிசோர் புலிகளின் தோல்வியுடன் மகிந்தவை போய்ப்பார்த்து சரணடைந்தார். ஆசையோடு மகிந்தவை கட்டித்தழுவி தனது பிழைப்பை உறுதிப்படுத்தினார்.

தமிழ் மக்களது வாக்குகளால் பதவியை பெற்று தமிழரை கொன்றவனின் கால்களை நக்கியதால் அவர் மைதானத்திற்கு வராமலேயே ஆட்டமிழந்தார். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தராமையால் கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றோரும் மகிந்தவிடம் சரணடைய நேர்ந்தது.

அடுத்தது புலம்பெயர்ந்த தமிழர்களால் வீணாக போனவர்தான் சிவாஜிலிங்கம். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் வழமைபோல வெளிநாடுகளில் வசதியாக வாழும் அரசியல் சனிகள் மன்னிக்கவும் ஞானிகள் கொதித்து எழுந்தார்கள். மகிந்தவும் சிங்களவன்தான் சரத்தும் சிங்களவன்தான். ஒருவன் கொல்லச்சொன்னவன், மற்றவன் கொன்றவன். எதற்காக அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்? ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எம்மிடம் ஒரு தமிழன் இல்லையா? என்று வீராவேசமாக கர்ஜித்தார்கள்.

இதைக்கேட்ட சிவாஜிலிங்கம் முந்திரிக்கொட்டை போல முன்வந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒதுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அநியாயமாக ஆட்டமிழப்பு செய்யப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படி உசுப்பேத்தியவர்கள் கூட தேர்தலின் போது அவரைக்கண்டு கொள்ளவில்லை.

தமிழ் கூட்டமைப்பில் சம்பந்தர் மாவை சுரேஷ் தரப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் தரப்பும் ஒரு அணி போல தோன்றினாலும் உள்ளே பிரச்சனைகள் ஆரம்பித்திருந்தன. இந்த நிலையில்தான் தமிழ் கூட்டமைப்பில் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. இதை காரணமாக கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகி தாம் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இப்போது முக்கியமான பலப்பரிட்சை இந்த இரு அணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு முழுவதிலும் அவர்களுக்கு செல்வாக்கு உண்டு. தமிழ் காங்கிரசிற்கு குடாநாட்டில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் ஞானிகளும் கூட்டமைப்புக்கு சார்பாகவும் தமிழ் காங்கிரசுக்கு ஆதரவாகவும் என பிரிந்து நிற்கிறார்கள்.

இங்கே ஒரு உண்மை வெளிப்படையானது. தமிழர்கள் பலமாக இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். தமிழர்கள் ஒரு அணியாக பலமாக இருந்தால் அது எப்போதுமே ஆளும் சிங்கள தரப்பிற்கு நெருக்கடியாகவே அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதிலும் நரி மூளை படைத்த மகிந்த பிரித்தாளும் தந்திரத்தில் தேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை பிளந்தவர். ஒற்றுமைக்கும் கட்டுக்கோப்புக்கும் பெயர்போன ஜேவிபி கட்சியை உடைத்தவர், முஸ்லிம் காங்கிரசை சிதைத்தவர்.

எனவே தமிழர்கள் ஒரு அணியாக பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர விடுவாரா என்ன. எனவேதான் அவர் பிள்ளையான் முதல் சுயேட்சைகள் வரை களத்தில் இறக்கியிருக்கிறார். இப்படியான ஒரு நேரத்தில்தான் கூட்டமைப்பும் காங்கிரசும் பலிக்கடாவாக தாமே போய் மகிந்தவிடம் கழுத்தை நீட்டியிருக்கிறார்கள்.

சரியோ பிழையோ விடுதலைப்புலிகள் தமிழரது தலைமைத்துவமாக கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை எதோ ஒரு நம்பிக்கையில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.இப்போது தமிழர்களுக்கென ஒரு உறுதியான தலைமைத்துவம் இல்லாமல் போயுள்ளமை வெளிப்படையானது. இது தமிழருக்கு மிகவும் ஆபத்தான சூழலாகும்.

இப்படியான ஒரு தருணத்தில் பிரிந்து மோதிக்கொள்ளும் தமிழ் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் தாமே தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் என்கிறார்கள்.தமிழ் காங்கிரசானது சம்பந்தர் தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது.

'சம்பந்தர், மாவை, சுரேஷ் தரப்பு இந்தியாவின் தாளத்திற்கு ஆடுகின்றனர். அடிக்கடி இந்தியாவிற்கு சென்று ஆலோசனை பெறுகின்றனர். இந்தியாவே அவர்களை இயக்குகிறது' என்பது ஒரு குற்றச்சாட்டு . இதே குற்றச்சாட்டையே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

'தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது.சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது' என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு தமிழ் கூட்டமைப்பு,

'தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்தன' என பதில் சொல்கிறது.

அடுத்ததாக தமிழ் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு

'2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர்'

'அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர். மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் அடித்துக் கூறிவிட்டனர்.தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பானது,

'எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம்'

'இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். ஆனால் இன்று ''மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம்'' என்று கூறுகிறார். ஓர் வரைபு உருவாக்கப்பட்டால்தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத்தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது.

கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா?தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை' என்கிறது.

தமிழ் காங்கிரசின் அடுத்த குற்றச்சாட்டு

'விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. இது விடுதலைப்புலிகளின் சார்பு அணியினரை அகற்றும் மறைமுகமான நடவடிக்கை' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பு

'பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். மே 2009 ற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் விடுப்பு எடுத்தால் பதவி பறி போகும் என்ற நிலையில் பதவிகளை காப்பாற்ற வேண்டும் என பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்புகிறது.

இதே வேளை தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாதுரை விநாயகமூர்த்தி கூறும்போது, 'செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி கூட்டமைப்பைப் சிதைப்பது உகந்தது அல்ல. அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது?

இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே! அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது. கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, வரலாற்றுத் தவறு இழைக்கத் தாம் விரும்பவில்லை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்ட எல்லா விடயங்களையும் வழங்குவதற்குத் தமிழ்க் கூட்டமைப்புத் தயாராக இருக்கும்போது அதிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்தும் காரணம் ஏதும் அகப்படவில்லை எனவே வெளியேறும் முடிவை ஏற்றுக்கொள்ளவேயில்லை' என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள்... ..பதில்கள்... ..எதிர் குற்றச்சாட்டுகள்... ..அவதூறுகள்.. ..என IPL 20/20 போட்டிகளை போல தமிழ் ஈழ போட்டிகள் மிக விறு விறுப்பாக இடம்பெற்று வருகிறது.

இந்த சுற்றுப்போட்டியை மகிந்த டக்லஸ் கருணா பிள்ளையான் சித்தார்த்தன் குழுவினர் மிகவும் அனுபவித்து உற்சாகமூட்டி பார்த்து வருகிறார்கள். ஒரு வகையில் இந்த போட்டியை அவர்களே ஏற்பாடு செய்திருப்பதால் போட்டியின் இலாபங்களை அவர்களே அனுபவிக்க போகிறார்கள்.

ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இராணுவ காவலில் உள்ளமை பற்றியோ .. 20 000 இற்கும் அதிகமான இளையவர்கள் புலிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியோ.......நாளாந்தம் சிறுக சிறுக சத்தமின்றி கொன்று புதைக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ...இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மீள குடியேற சென்ற மக்களுக்கு எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, தொழில் தொடங்க எந்த உதவியும் இல்லை. இவை குறித்து எமது தமிழர்களின் பிரதிநிதிகளாக கூறிக்கொள்கின்ற இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு எப்படியாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் போதும்.

இவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதனூடாக தமிழ் மக்களது எல்லா பிரச்சனைகளும் தீரப்போகிறது.

தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது...

உரிமையா? வெங்காயம்....

விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க.....

வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜீவேந்திரன்

Jeevendran

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

Saturday 6 March 2010

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்

( ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். “அய்யோ நான்தான் ஸ்வாமி, நித்யானந்தா… காப்பாத்துங்க” என்று கத்துவதைப் பார்த்தபிறகு தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயேந்திரர்.)

ஜெயேந்திரன்: வாடா, வா, நான் வேற எந்தப் பக்கத்துலேந்து அருவா வருமோன்னு பயந்துண்டு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி ஓடி வர்ற! அது சரி டி.வி, பத்திரிக்கைலாம் நார்ற மாதிரி என்னடா இப்படி பண்ணிட்டே! அபிஷ்டு.

நித்யானந்தா: பெரியவா மன்னிக்கணும், அன்னிக்கு தீர்த்தம் கொஞ்சம் ஓவரா போயிடுச்சு, ஏதோ புத்தி கெட்டுட்டேன் பெருசு பண்ணாதிங்க, காப்பாத்தி வுடுங்க!

ஜெயேந்திரன்: தத்தி, இப்படியா பண்ணுவா! கதவத்திற காத்துவரட்டும்னு ஏதோ புத்திசாலித்தனமா கிறுக்கிண்டு கெடக்குறியேன்னு பாத்தேன், கடைசில கதவத் திறந்தா ரஞ்சிதால்ல வந்துட்டா ஹீ..ஹீ.. என் சமத்தல்லாம் பாத்தும் இப்படியா பப்ளிக் பாக்குற மாதிரி பண்றது! கிரகச்சாரம்! சரி சரி வுடு! ஆனானப்பட்ட விஸ்வாமித்திரனே அப்சரஸ்களை பாத்து அப்செட் ஆகுறப்ப,நீ ரஞ்சிதாவைப் பாத்தோன்னேயே இன்ஜின் ஜாம் ஆயிட்டே!

நித்யானந்தா: என்ன சாமி லோக்கலா பேசுறீங்க?

ஜெயேந்திரன்: பின்னே ஜகத்குருன்னா சான்ஸ்கிரீட்ல குழஞ்சு கான்கிரீட்ல புரளுவேன்னு பாத்தியா! பர்னசாலை குடிசைல ரிஷிபத்தினிகளோடும் விளையாண்டவா நாம், பைவ் ஸ்டார் ஓட்டல்ல பிஷி செட்யூல் நடிகையோடும் புரண்டவா நாம்! இதெல்லாம் ஒரு மேட்டரா போடா அசடு!

நித்யானந்தா: நல்லவேளை நான் கூட நடந்ததுக்கு வருத்தமோன்னு நெனச்சேன், இனிமே ஜாக்கிரதையா இருக்குறேன் ஸ்வாமி.

ஜெயேந்திரன்: என்ன ஜாக்கிரதையோ! என்ன யோக்யதையோ! என்னயே எடுத்தக்கோ! எவிடன்ஸ் இல்லாம காமா சோமான்னு பண்ணேனேனோ, என்னல்லாம் பாத்து என்னத்தக் கத்துண்டியோ மண்டு… மண்டு! என்ன தப்பு வேணாலும் பண்ணின்டு மூஞ்சை நமோ நாராயணான்னு வச்சிக்கத் தெரியாம என்ன சாமியார்டா நீ! என்னக் கூடத்தான் பேப்பர்ல எழுதுனா, டி.வி.ல காட்டுனா. அனுராதா ரமணன் சொன்னா, அவா சொன்னா, இவா சொன்னான்னு வந்துச்சே ஒழிய எவிடன்ஸ் கிளிப்பிங்ஸ் எதனாச்சும் வந்துச்சா? காரியத்துல நீட்னஸ் வேணும், சம்போகம் பண்றவாள்ளாம் சங்கராச்சாரி ஆக முடியாது! அதுக்கெல்லாம் ஷ்பெஷல் பொஷிஷன் வேணுண்டா அம்பி!

நித்யானந்தா: உண்மைதான் ஸ்வாமி, உங்கள கன்சல்ட் பண்ணாம கோடம்பாக்கத்து பக்கம் தல வச்சது தப்புதான்! இந்த விசயத்துல நீங்கதான் காப்பாத்தணும், உங்களதான் தெய்வமா நம்பி வந்துருக்கேன்.. பயமா இருக்கு!

ஜெயேந்திரன்: இதுக்கெல்லாம் பயப்படறதிலிருந்தே தெரியறது நீ ஒரு அப்ரன்டீசுன்னு, தோ பக்கத்துல இருக்குற சின்னவன் பண்ணாததையோ நீ பண்ணிட்ட! பல பொம்மனாட்டி வாழ்க்கையை பாழடிச்சிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி தேமேன்னு உட்கார்ந்திருக்கான் பாரு! இல்ல என்னப் போல வர்ற பொம்மணாட்டியை எல்லாம் கையை புடிச்சு இழுத்தியா! இதுக்கெல்லாம் பயந்தா காஷாயம் கட்ட முடியாதுடா அம்பி! என்ன நம்பி வந்துட்டீல கவலையை விடு.. ஏன் கெடந்து பயப்படற? வேண்ணா தோ வீடியோ பாத்துக்கோ, ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. தாகசாந்திக்கு பாரின் தூத்தம் இருக்கு, எடுத்துக்கோ வேற ஏதாவது ‘புஷ்பம்’ வேணும்னா கேளு நம்ப தேவநாதன் இப்ப வெளிலதான் இருக்கான், ப்ரீயா சப்ளை பண்றேன் வச்சுக்கோ… எக்காரணம் கொண்டும் தப்பு பண்ணறதுக்கு மட்டும் நம்பள மாதிரி சாமியார்லாம் பயப்படக் கூடாது! புரியர்தா? .. ரிலாக்ஸ்டா அம்பி.. ரிலாக்ஸ்.

நித்யானந்தா: நீங்க என்னமோ சாதாரணமா சொல்லிட்டீங்க, நக்கீரன்ல படமா போடுறான், சன் நியூஸ்ல பிட்டு படமாவே காட்டுறான்.. திரும்ப தொழில் பண்ண முடியுமோன்னு பயமா இருக்கு ஸ்வாமி!

ஜெயேந்திரன்: என்னமோ நக்கீரன்ல போட்டானாம், சன்னுல காட்டுனானாம்! போடப்போட புவனேஸ்வரி, காட்டக் காட்ட ரஞ்சிதான்னு போவியா! கிடந்து பேத்துற.. என்னக் காட்டாத படமா.. இந்த மானம், வெட்கம், சூடு, சுரணையல்லாம் லோகத்துல இந்த மனுஷாளுக்குத்தான். நம்பள மாதிரி ஆளுக்கெல்லாம் “சுக்கில புத்தி சுகமோ பவ”டா! மொதல்ல அசமஞ்மாட்டம் உளறி கொட்றத நிறுத்து! என்னப்பாரு ஸ்டேசன்ல வச்சு கேட்டப்ப கூட வாயத் திறந்தேனோ! ஹீ…ஹீ..ன்னு சிரிச்சிண்டே மழுப்பினேன். சட்டம், இ.பி.கோல்லாம் சாதாரண லாட்ஜ் போட்டு பண்றவாளுக்குத்தான், நம்பள மாதிரி மடத்த போட்டு பண்றவாளுக்கு சட்டம் மல ஜலத்துக்கு சமன்டா! வெளிக்கி போக வாழை இலையே நறுக்கிக் கொடுத்தாண்டா போலீசு.. போவியா..!

நித்தியானந்தா: இல்ல ஸ்வாமி தொடர்ந்து நக்கீரன்ல…

ஜெயேந்திரன்: போட அசடு! சும்மா நக்கீரன், நக்கீரன்ட்டு, அவனும் நம்பள வச்சி நாலு காசு பாக்க வேணாமா! யார் அவுத்துப்போட்டாலும் அவனுக்கு காசு! என்ன வச்சிக் கூடத்தான் ஒரு ரெண்டு மாசம் சம்பாதிச்சான். கொறஞ்சா போயிட்டேன். இவ்ளோ எழுதுறானே, என்னைக்காவது அவன் நம்பள தூக்குல போடு, மடத்தை புடுங்குன்னு சொல்லிருக்கானா, படத்தை பிரண்ட்ல போடுன்னுதானே சொல்றான்.. என்ன இருந்தாலும் அவன் நம்ப ஆளுடா.. (கண்ணடித்து சைகை காட்டுகிறார்!)

நித்தியானந்தா: எவ்ளோ பத்திரிக்கைக்கு நாம விளம்பரம் கொடுத்திருப்போம், நம்ம எழுதுறத வச்சு சம்பாதிச்சிருப்பான் பிரச்சனைன்னு வந்தோன்ன யோக்கியனா நடிக்கிறாங்களே! என்ன உலகம் ஸ்வாமி இது!

ஜெயேந்திரன்: அட போடா, சதா இதையே பேத்திண்டு! குமுதம் நீ எழுதுற போஸ் போட்டு குந்தவச்சு சம்பாதிச்சன், நக்கீரனும் சன்னும் உன்ன படுக்க வச்சு சம்பாதிக்கறன்னு போவியா! என் கவலைல்லாம் கஷ்டப்பட்டு காரியம் பண்ணி கேஸ் ஆடறவா நாம, கடையப் போட்டு சி.டி. விக்கிறவா அவாளா! இந்த டிஸ்ட்டிரிப்பியூட் ரைட்ஸையாவது நமக்கு தர்றதில்லையோ, ஏமாத்திடறாளே! இந்து தர்மத்தோட ரைட்ஸை யாருக்கும் விட்டுத்தர முடியாதுன்னு நம்ப ராமகோபாலனை வச்சி என்ன பண்றேன் பாரு நீ!

நித்தியானந்தா: நம்ம சாரு கூட…

ஜெயேந்திரன்: யாருடா அவ? பாக்க நன்னா இருப்பாளா? வட நாட்டவளா?

நித்தியானந்தா: இல்ல சாமி சாரு நிவேதிதா, எழுத்தாளர், நம்ம மடத்தோட தீவிர விசுவாசி, அவர் புண்ணியத்துல தான் நம்ம குமுதம் மேட்டர்லேருந்து மிட்நைட் குவாட்டர் வரைக்கும் தடையில்லாம் போயிகிட்டிருந்தது… இப்ப அவர் பப்ளிக்கா என்ன திட்டி எழுதறார், ஆஸ்ரமத்துக்கு இதனால இமேஜ் போயிடுமோன்னு பயமா இருக்கு

ஜெயேந்திரன்: அடப்போடா இப்படி உலகம் தெரியாதவனா இருக்கியே? இவால்லாம் நம்மால பொழைக்கறவாடா… நாளைக்கே கரன்சி கடாட்சத்துக்காக மறுபடியும் பாராட்டி எழுதப்போறா.. இப்ப என்ன திட்டி எழுதாதவாளா? அதனால என்ன காஞ்சி மடம் என்ன கொலாப்ஸா ஆயிடுத்து.. இந்த மாதிரி பப்ளிசிடில்லாம் நமக்கு அசெட்றா அம்பி. இப்படியெல்லாம் நேஷ்னல் லெவல்ல நாலு பெரிய மனுஷா பார்வைக்கு போனாதானேடா நம்ம பொழைப்பும் ஓடும், ஏறுனது சன்னோட டீ.ஆர்.பி மட்டுமில்ல, ஞாபகம் வச்சுக்கோ.

நித்யானந்தா: இதெல்லாம் ஒரு பக்கம்னா, இந்து மக்கள் கட்சின்னு இன்னொரு குரூப் வேற கௌம்பிட்டான் ஸ்வாமி! என்னால இந்து மதத்துக்கே தீராத அவமானம்னு படத்தை போட்டு எரிக்கிறான், மடத்தப்போட்டு உடைக்கிறான்! பேசி ஆஃப் பண்ண ஏதாவது ரூட் இருந்தா சொல்லுங்களேன்.

ஜெயேந்திரன்: (ஹி..ஹி..ஹி.. பலமாக சிரித்துவிட்டு பக்கத்தில் முந்திரிப்பருப்பை அமுக்கும் சின்னவனைப் பார்த்து)ஏய்.. கேட்டியோ…என்னாலயும், உன்னாலயும் அவமானப்படுத்த முடியாத ஹிந்து மதத்தை இவன் பண்ணிட்டானாம்.. ரொம்ப ஆசைதான் இவனுக்கு…

நித்தியானந்தா: ஸ்வாமி என் நிலைமை புரியாம சிரிக்கிறீங்க!

ஜெயேந்திரன்: போடா தத்தி! கட்சின்னா நாலு கல்லு உடத்தான் செய்வான்! அப்பப்போ காசை விட்டெறிஞ்சின்னா, அவா ஏண்டா கல்ல விட்டெறியறா! நோக்கு சரியா டீல் பண்ணத் தெரியல, காட்டுறத காட்டுனா படியுறான். இப்ப ஊரே நாறுச்சு என்ன ஏதும் பண்ணாளோ!

நித்யானந்தா: எங்கிட்ட காட்டறதுக்கு பூணூல் இல்லியா ஸ்வாமி!

ஜெயேந்திரன்: இப்ப தெரியறதா, தல இருக்கறச்சே வால் ஆடப்படாது! (சின்னவன் உள்ளே சென்றதை உறுதி செய்து பார்த்தபடி) பேசாம சின்னவன் இல்லாத நேரமா ரஞ்சிதாவை இங்க தள்ளிட்டு வர்றதை வுட்டுட்டு, தானே ராஜா, தானே மந்திரின்னா இப்படித்தான். என்ன, பத்து பொம்பளயக் கெடுத்துருப்பியா… அதுக்குள்ள பரமஹம்சர்ன்னு பட்டம் வச்சிட்டா எப்படி? பட்டம் வச்சவன்லாம் பெரியவாளா ஆக முடியாது! படுக்கை விரிச்சவன்லாம் ஜெயேந்திரன் ஆக முடியாது! மண்டு, மண்டு!

நித்யானந்தா: தப்புதான் ஸ்வாமி! நீங்க வேற வதக்காதீங்க, பேரு கெட்டதைக் கூட வேற ரூட்ல சரி கட்டலாம்.. இந்து மதத்தையே கெடுத்துட்டேன்னு கோர்ட்டு, கேசுன்னு போயி பேலன்ஸ் போயிடுமோன்னு பயமா இருக்கு! தவிர போலிச்சாமியார்னு பேரு வந்துருச்சே! தொழில்ல கேரண்டியும், செக்யூரிட்டியும் இல்லாம வெளிநாட்டுக்காரங்க எப்படி முதல் போடுவாங்க இனிமே.. அத நெனச்சாதான் உத்திராட்சை உறுத்துது.

ஜெயேந்திரன்: ஏண்டா கெடந்து புலம்புற.. நிலம சீராகுற வரைக்கும் ரூட்ட காஞ்சிபுரத்துக்கு மாத்தி வுடு, அந்த ஒரு லோடு சந்தனக் கட்டய நம்ம மடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணு! கஞ்சா பொட்டலத்த விபூதிப் பொட்டல ஸ்டைல்ல நம்மகிட்ட எக்ஸ்சேஞ்ச் பண்ணு! இங்கே எவன் வர்றான் பாக்குறன்..

அத வுட்டுட்டு இந்து மதம் போலிச்சாமியார்னு இல்லாதது, பொல்லாதத நெனச்சு ஏன் புலம்புற.. மொதல்ல வாய மூடுறா அபிஷ்டு! எதுடா போலி? கேட்டுக்கோ பொம்மணாட்டியோட சரசமாடுறது, பரமாத்மா, ஜீவாத்மா ஒன்னு சேர தேகாத்மாக்கள சாந்தி பண்றது, லட்சம் மர்டர், பத்தாயிரம் ரேப், ஆயிரம் கனவு சீன், ஜாதிக்கேத்த நீதி இதாண்டா ஒரிஜினல் ஹிந்து மதம்! நான் சொல்றேண்டா.. ஹிந்து மதத்துக்கு என்ன விட அத்தாரிட்டி யார்ரா? அவா சொல்றா.. இவா சொல்றானுட்டு கிடந்து பேத்துற.. ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி படிச்சிருக்க்கியோ… அந்த அம்பாளையே அவர் த்ரீ டைமன்ஷன்ல பாத்தார்! அவர் வர்ணிச்சுக் காட்டுனார், நாம வாழ்ந்து காட்டுறோம். இந்திரன் அகலிகையோட ஆம்படையான் வேஷத்துலேயே போய் அவளைக் கெடுத்தான் அதனால என்ன அவன் இமேஜ் கொறஞ்சா போனான்.

நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவன்தாண்டா போலிச்சாமியார்! புரியறதா…

தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு!

நித்தியானந்தா: நல்லவேளை ஸ்வாமி நான் கூட பாதை மாறி போயிட்டோமோன்னு நெனச்சுகிட்டிருந்தேன். உங்களப் பாத்து சம்பாஷணை செஞ்சோன்னதான் மனசே தெளிவாச்சு.. என்ன இருந்தாலும்..

ஜெயேந்திரன்: இன்னும் ஏண்டா இழுக்குற… ஏன் பயந்து சாகுற.. நீ என்ன என்னை மாதிரி என்ன, அப்ளே டூ மர்டரா? இல்ல அட்டம்ப்ட் டூ ரேப்பா? எதுவுமில்ல.. அவளும் ஒரு கேசு.. நீயும் ஒரு கேசு… அவளா வந்தா…. நீயா போன.. சட்டப்படி யார் என்னடா பண்ண முடியும்? அதிகபட்சம் ரோட்ல கத்றவாளுக்காக ஒரு 420 போடுவா… கோர்ட்டுல கத்றவாளுக்காக பிராத்தல் கேஸ் ஐபிசி 371,372 போடுவா.. மத்தபடி நம்பள யாராவது அடிக்க வந்தா அவாள தூக்கி உள்ள போடுவா.. நீ வேண்ணா கோர்ட்டுக்கு போயிப்பாரு, நம்மள பாத்து ஜட்ஜே அவா கன்னத்துல போடுவா.. போடா டேய்! போடா!நாம் பாக்காத கேஸா… சங்கரா! சங்கரா!

நித்யானந்தா: ஸ்வாமி செக்சன்லாம் அத்துப்படியா பேசறத பாத்தா.. விட்டா நீங்களே வெளுத்து வாங்கிடுவீங்க போல இருக்கே…

ஜெயேந்திரன்: பீனல் கோடெல்லாம்… இந்த பூணுல் கோடுக்கு அடக்கம்டா அம்பி.. இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம் நான் எதுக்குடா? பிராத்தல் கேசுக்குன்னே பேமஸ் நம்ப சுப்பிரமணிய சாமி.. அவனிருக்கான் பயப்படாதே! சிதம்பரம் கோயில்ல சரக்கடிச்சிட்டு சாமிக்கே பேக்போஸ் கொடுத்துண்டு குஜால் பண்ற தீட்சிதாளுக்கெல்லாம் அவன்தான் கேசாடறான்.. கேஸ் ரொம்ப சிக்கலாச்சுன்னா, நம்ம துக்ளக் சோ இருக்கானோல்யோ, அண்டர்கிரவுண்ட் டெண்டரெல்லாம் அவன் பார்ப்பான்.. நீ பயப்படவே தேவையில்ல.. கருணாநிதி காலையே சுத்திண்டு நம்ம எஸ்.வி.சேகர். இருக்கன். அவன விட்டு காத கடிச்சா போதும்.. ஒரு அறிக்கைக்கு மேல தாண்டிடாம பாத்துக்கலாம்.. பேசாம நா சிக்னல் கொடுக்கற வரைக்கும் அடக்கிண்டிரு.. அதுக்குள்ள வேற எவனாவது மாட்டுவன் உன் கேஸை மறந்துடுவா..

பொய்யில்லடா.. என்ன எடுத்துக்கோ கத கந்தலாகியும் இன்னும் பந்தல் போட்டு ஆசிர்வாதம் பண்ண கூப்புடுறா, பாதாறவிந்த்த்த சேவிக்கிறா… இதுல ஜோக் என்னான்னா, பசங்களுக்கு ஒழுக்கம், காண்டக்ட் சர்ட்டிபிகேட் கொடுக்க என்ன கூப்புடுறா.. ஒண்ணு தெளிவா புரிஞ்சுக்கோ.. நாம எவ்வளவு பேரு குடியக் கெடுத்தாலும் பயப்படறதுக்கு இங்க என்ன நக்சலைட் ஆட்சியா நடக்கறது.. எல்லாம் நாம சுவிட்சைத் தட்டுனா கண்ணடிக்கிற ட்யூப்லைட் ஆட்சிதான் .. பேசாம கட்டின பசுமாதிரி சைலன்டா இரு! பிளே எ வெயிடிங்க கேம், கம் பேக்.. கீப் கோயிங்!

நித்யானந்தா: என்னமோ நெனச்சிட்டு வந்தேன் பெரியவா, பெரியவாதான், பெரியவா அனுக்கிரஹம் என்னைக்கும் வேணும்…

ஜெயேந்திரன்: ஹி… ஹி… உன் வயசுடா என் சர்வீசு, மொதல்லயே வந்திருந்தா டிரெயினிங் பக்காவா இருந்திருக்கும்… சரி போகட்டும், அந்த ரூம்ல வேற ட்ரஸ், விக்கெல்லாம் இருக்கு.. காஞ்சி தேவநாதன் மாதிரி மேக் அப்லாம் மாத்திண்டு பாத்துடா பின்பக்கமா எஸ்கேப் ஆயிடு…. இனிமேலாவது சமத்தா இரு!!

(நித்யானந்தா கிளம்ப, பகவானே! இந்த ஹிந்து தர்மத்தைக் காப்பாத்த நேக்கு நீதான் சக்தி கொடுக்கணும்… முணுமுணுத்துக் கொண்டே சிரமப்பட்டு குச்சியை ஊனி தன் உடலைத் தூக்கி எழுந்தபடியே.. டேய், சின்னவனே.. நக்கீரன் ஆன்லைன்லேருந்து அந்த நித்யான்ந்தன் ஃபுல் வீடியோவ டவுன்லோட் செஞ்சியே அத போடுறா … என உள்ளுக்குள் போனார் ஜெயேந்திரர்)

—ஸ்பாட்ரிப்போர்ட்– வினவுக்காக – துரை.சண்முகம்.—

Tuesday 2 March 2010

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் தரப்பு தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க முன்றில் இரண்டு பெரும்பான்மை கோரி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. தேர்தல் முறையை மாற்றி அமைத்தல், இனப்பிரச்சனைக்கு சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்கல் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க வேண்டுமென மகிந்த தரப்பு கூறுகிறது.

இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ள ஆளும் தரப்பானது , இலங்கை நாடானது அபிவிருத்தியை நோக்கி மிக வேகமாக பயணிக்கின்றது என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் நாட்டை மீட்க வந்த தேவ தூதர்களாக தம்மை காட்டி வருகிறார்கள். வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்தமை, மகிந்த தரப்பின் இந்த பிரசாரத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு எதிராக கண்டனங்களை எழுப்புதல், அறிக்கைகளை வெளியிடல், விமல் வீரவன்ச போன்ற அடிபொடிகளைக்கொண்டு தூதரகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் போன்ற செயல்பாடுகளின் ஊடாக மகிந்த தரப்பானது சிங்கள மக்கள் மத்தியில் தம்மை சர்வதேசத்திற்கு அடிபணியாதவர்களாக தம்மை காட்டிக்கொள்கிறது . இந்த பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் எடுபட்டும் வருகிறது.

அதேவேளை சரியோ பிழையோ கடந்த அரசாங்கங்களை விட மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது சர்வதேசத்திற்கு பயப்படாமல் செயலாற்றி வருகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது எழுந்த அழுத்தங்களை எதிர்கொண்ட போதும், ஐநா மனித உரிமை விவகாரத்தின் போதும் சர்வதேசத்திற்கு அடிபணியாமல் மகிந்த செயலாற்றி இருந்தார். சோனியாவின் சேலையில் மறைந்து கொண்டு இந்த வீரத்தை அவர் காட்டி இருந்தாலும், இதனால் சிங்கள மக்கள் மத்தியில் அவரின் மதிப்பு பெருமளவு உயர்ந்தது என்பதே தமிழருக்கு கசக்கின்ற உண்மை.

இவ்வாறு உள்ளூரில் தன்னை சண்டியனாக மகிந்த உறுதிப்படுத்திக்கொண்டாலும் சர்வதேச ரீதியாக இடம்பெறுகின்ற விடயங்கள் மகிந்த தரப்பிற்கு அவ்வளவு நல்ல சகுனங்களாக தெரியவில்லை.

அதில் ஒன்றாக GSP+ ஆறு மாத காலத்துக்கு ரத்து என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளமை அமைகிறது. இலங்கையில் ஏற்கனவே ஆடை, இறப்பர், தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதிகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை புள்ளி விபர திணைக்களத்தின் தகவலின் படி சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, 60 000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை வழங்க இந்த அரசாங்கம் செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. GSP + சலுகை இழப்பு காரணமாக 200000 இற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழக்க வேண்டிவருமென கலாநிதி ரூபசிங்க போன்ற மகிந்தவின் எடுபிடி அரசியல் ஆய்வாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

இது போதாதென மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த சொல்லி இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்த மீள் குடியேற்றம் நடந்து அனைத்து தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டால் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு எவ்வாறு தொழில் வழங்குவது என்பது இலங்கை அரசுக்கு தலைவலியாக இருக்கும்.

தமிழ் இளைஞர்களுக்கு அன்போடு வேலை கொடுக்க மகிந்தவிற்கு மனமில்லாவிட்டாலும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மீண்டும் புரட்சிகர இயக்கங்கள் உருவாகலாம். தமிழர்கள் மட்டுமில்லாது சிங்கள மக்கள் மத்தியிலும் ஆயுத கலாசாரம் மீண்டும் தலை தூக்கி கொலை கொள்ளை போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கலாம். இதனால் ஜனாதிபதிக்கு எதிரான சக்திகள் பெரும்சக்தியாக உருவெடுக்கலாம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறான நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர மகிந்த அரசாங்கம் ஆயுதப்படைகளின் உதவியையே நாட வேண்டி ஏற்படும். ஏற்கனவே இந்த சூழலை மனதில் கொண்டே வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே நிலப்பரப்பு, மக்கள் தொகை என்பவற்றோடு ஒப்பிடும் போது உலகத்திலேயே அதிக ஆயுதப்படையினர் இருப்பது இலங்கையில்தான் என சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதேவேளை சர்வதேசத்துடன் குறிப்பாக மேற்கு நாடுகளுடன் இலங்கை முறுகிக்கொண்டுள்ள நிலையில் ஜப்பான்,இந்தியா, சீனா போன்ற நாடுகளே இலங்கையை தாங்கிப்பிடிக்கின்றன. அதிலும் கடந்த வருடம் உலக வங்கி, உலக நாடுகள் எல்லாவற்றையும் விட சீனாவே இலங்கைக்கு அதிக கடன் உதவிகளை வழங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், பாதை அபிவிருத்தி, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி போன்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், திட்டக்கடன்களாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், நிதிகளாக 279.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனூடு சீனா இலங்கை மீது மேற்கொள்ளப்போகும் செல்வாக்குகள், அழுத்தங்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லாம் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இதனிடையே இந்த 2010 மார்ச் மாதம் வழங்கப்படவேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் தொகையான 2 .6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 260 பில்லியன் ரூபாய்கள்) கால அளவு குறிப்பிடப்படாமல் தாமதப்படுத்தப் பட்டிருக்கின்றது.

ஜி.எல் பீரிஸ் போன்றோர், GSP+ சலுகை அப்படி ஒன்றும் பெரிய விடயம் அல்ல, சர்வதேச சந்தை விரிந்து கிடக்கின்றது,சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப்பெற்றுக்கொள்வதற்காக யாரது காலிலும் விழ மாட்டோம் என்று கூறுவது வடிவேலின் கைப்பிள்ளை தனமான நகைச்சுவையாக உள்ளது. எனினும் இது சிங்கள மக்களை உருவேற்றத்தான் என நம்பலாம்.

இவ்வாறான ஒரு சூழல் காரணமாக அத்தியாவசிய பண்டங்களின் விலை குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிக்கும். மின்சாரம், நீர் போன்ற அனைத்து அடிப்படை சேவைகளுக்கான வரி மிக அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களாகவே இருக்கப்போகிறார்கள். அதிலும் அடிமட்ட சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது உறுதியானது.

உண்மையில் கடந்த வருடத்தில் ஏற்றுமதி படு பயங்கர வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மகிந்தவின் கடந்த 4 வருட ஆட்சிக்காலத்தில் 2 ட்ரில்லியன் ரூபாய்களாக இருந்த கடன் தொகையானது தற்போது 4 .1 ட்ரில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என லங்கா பிசினஸ் ஒன்லைன் பெப்ரவரி வெளியிட்ட மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அரசு 459 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. இந்த இழப்பானது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு வருட இழப்பை 100,000 ரூபாய்களாக உயர்த்தியுள்ளது. தற்போது சிறிலங்காவில் உள்ள ஒரு குடும்பத்தின் கடன்சுமை 835,000 ரூபாய்கள் ஆகும்.

எனினும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித உயர்வும் ஏற்படவில்லை. இதுவே இன்றைய உண்மை நிலையாகும். இந்த ஆபத்தான சூழலை சாதாரண சிங்கள மக்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இந்த உண்மையை மகிந்த தரப்பு திட்டமிட்டு மூடி மறைக்கிறது. யுத்த வெற்றி என்ற சகதிக்குள் சிங்கள மக்கள் சிக்கியிருப்பது மகிந்தவிற்கு வசதியாக போய்விட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக போர்க் குற்றம் தொடர்பில் இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டப்ளினில் போர்குற்றம் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மகிந்தவிற்கு எதிராக பெரும் விசாரணை ஒன்று இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வாய்ப்பில்லை என்றாலும் கூட (இந்தியாவை ஆளும் இத்தாலிய அம்மையாரின் கருணையால்) இந்த விடயம் மகிந்தவிற்கு பெரும் மண்டைக்குடைச்சலாகவே இருக்கப்போகிறது. போதாக்குறைக்கு அமெரிக்க, பிரித்தானிய, ஆஸ்திரேலியா முக்கிய பிரமுகர்கள் தமிழர்களின் கோரிக்கை தொடர்பாக ஆதரவு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் போன்றோர் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மகிந்தவின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலம் மலர்படுக்கையாக இருக்கப்போவதில்லை. அது சர்வதேசம் தீட்டிவைத்த ஆப்பால் ஆன மஞ்சமாகவே இருக்கப்போவதாக தோன்றுகிறது. சோனியாவின் சேலை எவ்வளவு காலத்திற்கு இந்த ஆப்பிலிருந்து மகிந்தவை காப்பாற்றப்போகிறது?

கா.ஜெயகாந்தன்

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- கார்த்திகேசு ஜெயகாந்தன்

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.