Saturday, 30 January 2010

தமிழர் உயிர் குடிக்கும் திவயின

சிங்கள செய்தித்தாளான திவயின மிக மோசமான இனவாத எழுத்துகளுக்கு பெயர்போனது. இதனால் சிங்களவர் மத்தியில் இதற்கு பலத்த வரவேற்பு உண்டு. சிங்கள பௌத்த தேசியத்திற்கு மாற்று கருத்துடைய தமிழர்களை , ஏன் சிங்களவர்களைக்கூட தேசத்துரோகியாக சித்தரித்து அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற அர்த்தத்தில் திவயின எழுதும். அப்படி எழுதப்பட்டு பல சிங்கள செய்தியாளர்கள், புத்தி ஜீவிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பத்தி எழுத்தாளர் சிவராம் அப்படி கொல்லப்பட்ட ஒருவர்தான்.

தமிழர்களை சிங்களவர்களின் எதிரிகளாக சித்தரிப்பதில் மிகச்சிறந்த திறமையாளர்களாக திவயின செய்தியாளர்கள் உள்ளனர். கடந்தகாலங்களில் இராணுவத்தில் சிங்கள இளைஞர்களை சேர்ப்பதில் திவயின முக்கிய பங்காற்றியது . அதுபோல இலங்கை இராணுவத்தின் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் மறைத்து அவற்றை சிங்களவர்களின் வெற்றிகளாக சித்தரித்து மயிர் கூச்செறியும் கட்டுரைகளை வெளியிடுவதில் திவயின கைதேர்ந்தது. இதனால் சிங்கள அரசியல்வாதிகளும் திவயினவுக்கு சார்பாகவே நடந்து கொள்ளவது வழமை.

நீண்ட காலமாகவே தமிழர்கள் மீது வஞ்சினம் கொள்ளத்தக்க வகையில் திவயின எழுதி வருகிறது.

தமிழர்கள் மீது சிங்களவர்கள் பொறாமை கொள்ளத்தக்க விதத்தில், கோபம் கொள்ளத்தக்க விதத்தில் இதில் செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது.

'இலங்கையின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் உள்ளது'... 'சிங்களவர்களின் பணத்தை தமிழ் முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள்'. ..'சிங்களவர்களின் வேலை வாய்ப்புகளை தமிழர்கள் தட்டிப்பறிக்கிறார்கள்'... 'சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கிறார்கள்'... 'கொழும்பில் தமிழர்கள் பெருகி விட்டார்கள்'... 'சிங்கள மாணவர்களின் வாய்ப்புகள் தமிழ் மாணவர்களால் பறி போகிறது'..'கொழும்பு புலிகளின் கோட்டையாகி விட்டது'.. இது போன்ற தலைப்புகளில் மோசமான புனை கதைகளை கட்டுரைகளாக வெளியிடுவதில் திவயின செய்தியாளர்கள் மன்னர்கள். அதே போல ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில்களின் போது சிங்கள இனவாதத்தை மதவாதத்தை யார் கொண்டு செல்லகூடியவர்களோ அவர்களுக்கே திவயின தனது ஆதரவை வழங்கும்.

இந்த அடிப்படையிலேயே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை திவயின ஆதரித்து நின்றது. மகிந்த வெற்றி பெற வேண்டுமானால் மீண்டும் இனவாதமும் தமிழருக்கு எதிரான குரோதமும் தூண்டி விடப்படவேண்டிய அவசியத்தை தெரிந்து கொண்ட திவயின செவ்வனே தனது பணியை ஆற்றியது. ஏனெனில் புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஓரளவு அமைதியடைந்து காணப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை, மதவாதத்தை தூண்டி விட வேண்டியது அவசியமாக இருந்தது எனலாம்.

புலிகளிகளின் சர்வதேச கட்டமைப்பு இன்னமும் இருக்கின்றது எனக்கூறி அதனை உடைத்தெறிய மகிந்தவின் ஆட்சியே தேவையானது என தொடர்ந்து எழுதிய திவயின சரத்பொன்சேகா அதிபரானால் மீண்டும் புலிகளுக்கு உயிர் வழங்கி விடுவார் என சிங்கள மக்களை பயமுறுத்தியது .சரத் பொன்சேகாவை போர் வெற்றியின் போது மாவீரனாக புகழாரம் சூட்டிய இதே பத்திரிகை, தேர்தல் காலத்தில் இவரை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் கைக்கூலி என விளம்பரப்படுத்தியது. இந்த மேற்குலக நாடுகளின் சதிவலையில் சிங்களவர் இரையாக வேண்டுமா? என கேள்வியும் எழுப்பியது.

மனோகணேசன், ஹக்கீம் போன்றவர்களோடு பொன்சேகா கூட்டு சேர்ந்தபோது அதனை சிங்கள மக்களுக்கு எதிரான திட்டமாக கடுமையாக விமர்சித்து எழுதித்தள்ளியது. இந்த நிலையில்தான் சரத்பொன்சேகா தமிழ் கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்தார். இந்த அருமையான வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்ட திவயின வெளுத்து வாங்கத்தொடங்கியது.

தமிழர்களுக்கு ஈழத்தை வழங்கும் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும், அது தொடர்பில் சரத் பொன்சேகா தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பயத்தை விதைத்தது. தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளாக வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கு சுயாட்சி போன்ற விடயங்களை கூறி கடுமையாக விமர்சனம் செய்தது. இதற்கு பொன்சேகா உடன்பட்டு விட்டார் , இது தனி நாடு கொடுப்பதற்கு சமனாகும் எனத்தெரிவித்தது . உடனடித்தேவையான தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் போன்ற விடயங்களையும் கூட பயங்கரவாத கோரிக்கையாகவே இது சித்தரித்தது. ஏற்கனவே தமிழ் கூட்டமைப்பு புலிகளின் மறுவடிவம் என சிங்கள மக்கள் மத்தியில் வலுவான கருத்து ஊன்றப்பட்டு இருந்ததால், திவயினவின் பிரசாரம் மிக நன்றாகவே எடுபட்டது.

இவ்வாறு இன மத ஒற்றுமைக்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக எழுதி வரும் திவயினவின் செயற்பாடானது இலங்கை மக்களது நிம்மதியான வாழ்வுக்கும் எதிர்கால சமாதானத்திற்கும் மிகப்பெரும் தடையாகவே உள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல சிங்கள மக்களது மனங்களில் விதைக்கப்படுள்ள இனவாதத்தை ஆறவிடாது தொடர்ந்தும் எரியச்செய்வதில் திவயின முக்கிய காரணியாக உள்ளது. 83 ஆடிக்கலவரம் போன்ற கடந்த கால இனவன்முறைகளுக்கு காரணமாக இருந்த திவயின இனிவரும் காலங்களிலும் தனது பணியை செவ்வனே செய்யவே போகிறது. அது போல கடந்த காலங்களைப்போலவே எதிர்காலத்திலும் இதன் செயற்பாடானது இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற, மக்களிடையே ஒற்றுமை தோன்ற என்றுமே பாரிய தடையாக இருக்கப்போகிறது.

(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும் ).

--- கா.ஜெயகாந்தன் ----

http://jeevendran.blogspot.com/

Saturday, 23 January 2010

வெட்கம் கெட்ட அரசியல் ஆய்வாளர்கள்

என்னதான் எமது அரசியல் ஆய்வாளர்கள் மாய்ந்து மாய்ந்து எதிர்வு கூறல்களை முன்வைத்தாலும் நடப்பதென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. உதாரணமாக விடுதலைப்புலிகள் தமது படைகளை பின்னகர்த்தி வந்த போது வெளிநாடுகளில் வதிகின்ற எமது சில அதிமேதாவி அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய பத்தி எழுத்துகளை இப்போது வாசித்தாலும் சிரிப்பு வரும்.

'விடுதைப்புலிகள் இந்த இடத்தை விட்டு பின்வாங்கியது இந்த காரணத்திற்காக.....அரச இராணுவம் மீள முடியாத பொறியில் விழுந்து விட்டது...... இனிமேல் நடக்கப்போவது இதுதான்.....உச்சக்கட்டம் இனிமேல்தான் ஆரம்பம்... ' என வடிவேலுவை உசுபேத்தியது போல பாவப்பட்ட தமிழ் மக்களை உசுப்பேத்தினார்கள் (குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை).

தமது எதிர்வு கூறல்கள் தொடர்ந்து பொய்த்து வந்தாலும் சிறிதும் கூட வெட்கமின்றி மீண்டும் மீண்டும் புதிய புதிய எதிர்வு கூறல்களை முன்வைத்தார்கள். இதில் மிகப்பெரும் நகைச்சுவை அல்லது துயரம் அந்த ஆய்வாளர்கள் இன்றும் எமது இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்தும் எழுதி வருவதுதான்.

இதே போலத்தான் சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் எழுதித்தள்ளினார்கள்.(காக்கை இருக்க பனம் பழம் விழுந்த கதையாய் பல்வேறு காரணங்களால் விடுதைப்புலிகள் தோற்றுப்போனது இதில் பலருக்கு வாய்ப்பாய் போனது வேறுகதை). குறிப்பாக திவயின பத்திரிகையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து எழுதும் கீர்த்தி வர்ணகுல சூர்ய எனும் பன்னாடையின் எழுத்துக்கள் உலக மகா நகைச்சுவையானது. இந்த அரை லூசு எழுத்தாளரை சக சிங்கள ஊடகவியலாளர்களே ஐந்து சதத்துக்கேனும் மதிப்பதில்லை. ஆனாலும் இவர் தமிழ் மக்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் மிக மோசமான அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கண்மண் பாராமல் எழுதுவதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை (தாங்கள் செய்தால் மரியாதை இல்லை என்பதால் இந்த அரைவேட்காட்டை ஒரு அடியாள் போன்று பயன்படுத்தி கொண்டார்கள் எனலாம்).திவயின ஒரு இனவாத பத்திரிகை என்பதால் இவரது எழுத்துகளை அதுவும் கண்டு கொள்வதில்லை. இப்படியான எழுத்துகளில் தான் அதன் வியாபாரமே தங்கி இருக்கிறது.

கீர்த்தி வர்ணகுல சூர்ய திடீரென்று எழுதுவார்..

'கொழும்பில் 100 தற்கொலை குண்டுதாரிகள் ஊடுருவி விட்டார்கள் ' ...

'வெடிகுண்டு நிரப்பிய லொறியொன்று கொழும்பை நோக்கி வந்து கொண்டிருகிறது'...

'கொழும்பு துறைமுகத்தை தாக்க 500 பேர் கொண்ட புலிகள் படையொன்று உடப்பில் கரை இறங்கி உள்ளது' ...

இப்படி சகட்டு மேனிக்கு போட்டுதாக்குவார். இவரது அண்ட புளுகு ஆகாச புளுகுகளை அதிகார தரப்புகள் மிக நீண்ட காலமாகவே அறிந்திருப்பதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை. இப்படி சிங்கள மக்களிடம் புலிப்பூச்சாண்டி காட்டினால்தான் தங்களால் நிம்மதியாக கொள்ளை அடிக்க முடியும் என்பது அவர்களின் பிழைப்பு (அவனவனுக்கு அவனவன் பிரச்சனை).

ஆனால் எழுத்துக்கூட்டி திவயின வாசிக்கும் இராணுவ, காவல் அடிபொடிகள் இதை வாசித்து விட்டு சோதனை சாவடியில் தமிழ் மக்கள் மீது மலை ஏறுவார்கள்.

அல்லது லஞ்சம் வாங்கி புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் போலிஸ் நிலைய அதிகாரிகள் தனது வீட்டுக்கு மேலும் தேவைப்படும் பணத்தை எப்படி தேடுவது என யோசித்துக்கொண்டிருக்கும் போது இந்த செய்தி தேவ தூதாக வரும். பல சமயங்களில் இவ்வாறான செய்திகளை கீர்த்தி வர்ணகுல சூர்யவுக்கு கசிய விடுவதும் இவர்கள்தான். எல்லாம் ஒரு கிவ் அன்ட் டேக் போலிசிதான்.

பிறகென்ன அடுத்தநாள் பத்திரிகைகள் 'வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, வத்தளையில் சுற்றி வளைப்பு, 300 புலிச்சந்தேக நபர்கள் கைது என செய்திகள் தூள் பறக்கும். இதற்கெல்லாம் காரணம் கீர்த்தி வர்ணகுல சூர்ய போன்ற பன்னாடைகள் தான் என்பதை எங்களது அதிமேதாவி தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் அறிய மாட்டார்கள். உடனே தமது பங்கிற்கு வெளுத்து வாங்குவார்கள். சகல விதமான இன, மத, வரலாறு, தத்துவகோட்பாடுகளை எல்லாம் கலந்து பூசி முட்டையில் மயிர் பிடுங்கும் வீர சாகாசத்தை நிகழ்த்துவார்கள்.

சரி போர் நடக்கும் போதுதான் மக்களை திணறத் திணற அடித்தார்கள். இப்போதுதான் போர் முடிந்து விட்டதே, மக்களுக்கு ஒரு ஓய்வு கொடுக்கலாமே என்ற எண்ணம் இந்த அதிமேதாவி அரசியல் ஆய்வாளர்களுக்கு இருக்கிறதா? கிடையவே கிடையாது. அவர்களுக்கென்றே கேபி முதல் ஜனாதிபதி தேர்தல் வரை எவ்வளவோ விடயங்கள். பிறகென்ன...

''போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு... சக்க போடாய் போட்டுத்தாக்கு...''.

(தயவு செய்து இக்கட்டுரை தொடர்பில் உங்களது விமர்சனங்களையும், வாக்குகளையும் இடுமாறு உங்களை மிகவும் அன்பாக வேண்டுகிறேன்)

http://jeevendran.blogspot.com/

- ஜீவேந்திரன்

Jeevendran

-------------------------------------------------------------------------------

Monday, 18 January 2010

யார்தான் உண்மையான துரோகி???

தமிழர் அரசியலில் துரோகி என்ற வார்த்தை மிக பரவலான பிரயோகம் கொண்டதாக மாறிவிட்டது. வெகு சாதாரணமாக தமது அரசியல் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை மற்றவர் துரோகி பட்டமளிப்பது சகஜமாகி விட்டது. இதில் எந்த பாரபட்சமும் இல்லை. இவர் அவரை துரோகி என்பார், அவர் இவரை துரோகி என்பார்.

புலிகள் இருக்கும் வரை மட்டுப்பட்டிருந்த துரோகி பட்டங்கள் (இதை அவர்களே பெரும்பாலும் வழங்கி வந்ததால்) இப்போது மிக சாதாரணமாக எல்லோராலும் எல்லோருக்கும் மிக இலகுவாக இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா போன்றவர்கள் புலிகளது காலத்திலேயே துரோக பட்டங்களை பெற்றுக்கொண்டதால் அவற்றைப்பற்றி பேசுவதில் பலனில்லை. ஆனால் மிகவும் மதிக்கப்பட்ட, தலைவருக்கு மிக நெருக்கமான நீண்ட கால நண்பரும் விடுதைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தூணாகவும் விளங்கிய கே.பி போரின் பின்னர் திடிரென துரோகியாகி விட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக கூறியமையே இந்த துரோகி பட்டத்திற்கு காரணம் என நீங்கள் இன்னும் நம்பினால் உங்களை அந்த ஆண்டவனாலும்(கடவுள் இல்லை என்றாலும் இந்த மாதிரி இடங்களில் தேவைப்படுகிறார்) காப்பாற்ற முடியாது.

கே.பிக்கு துரோகி பட்டத்தையும் கொடுத்து அவரை சிறிலங்கா அரசிடம் மாட்டியும் விட்டது நெடியவன் குழுவே என்பது மிக பரவலானவர்களின் நம்பிக்கை. கேபியை காட்டி கொடுத்ததால் இப்போது நெடியவனும் துரோகியாகி விட்டார். மறுபுறம் கேபிக்கு ஆதரவு தெரிவித்த உருத்திரகுமார் போன்றோரும் நெடியவன் போன்ற குழுவினரால் துரோகிகளாகவே சொல்லப்படுகின்றனர்.

இன்னொருபுறம் புலிகள் சில தவறான முடிவுகளை எடுத்தமையே தோல்விக்கு காரணமாகி விட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொன்ன ஒரு வரிக்காக அவர் துரோகி என்ற பட்டங்கள் உலகெங்கும் பரந்துள்ள பல தமிழ் நெஞ்சங்களால் (அப்படித்தான் யாராவது ஒருவர் அவருக்கு பிடித்தமான இணையத்தளத்தில் எழுதிவிட்டு சொல்லிக்கொள்வது வழமை) உடனடியாக வழங்கப்பட்டது.

அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவை ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் மக்களை கொன்ற சரத்பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கலாம். மகிந்த மீண்டும் வந்தால் இலங்கை மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும். போர் குற்றம் செய்த அரசு தலைவர் ஆள்வதால் தமிழ் மக்கள் மீது சர்வதேச அனுதாபம் இருக்கும் என்றது ஒருதரப்பு. உடனே அவர்கள் மறு தரப்பால் துரோகிகளாக வசை பாடப்பட்டார்கள். தமிழனை கொன்றவனை விட கொல்ல சொன்னவனே எமது எதிரி. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? என்பது இவர்களின் வாதம்.

எனவே இந்த தரப்பு நாங்கள் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கினால் மகிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தலாம். தமிழ் மக்களின் பாரிய அழிவுக்கு காரணமான மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்றார்கள். உடனே மகிந்தவை ஆதரித்த தரப்பு இவர்களை துரோகி என்றார்கள். அதற்கு சொன்ன காரணங்கள், சரத் பொன்சேகா ஒரு இனவாதி. ரணிலுடனான பேச்சு முறிய காரணமே சரத் பொன்சேகாதான். யாழ்குடாநாட்டின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை மாற்றி அமைக்கவோ மக்களை குடியமர்த்தவோ சரத் பொன்சேகா சம்மதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை கூட உதாசீனம் செய்யும் அளவுக்கு அவர் சிங்கள இனவாதியாக இருந்தார் என்பன. எப்படியோ இந்த இருதரப்பும் துரோகிகள் ஆகிவிட்டன. சரி அதோடு முடிந்ததா துரோக பட்டியல்....இல்லை.

இன்னுமொருதரப்பு வீராவேசமாக சொன்னது...எதற்கு நாம் மாறி மாறி இந்த சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு சாமரம் வீச வேண்டும். ஏன் எங்களில் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக்கூட எமக்கு தகுதி இல்லையா? எம்மிடம் ஒற்றுமை இல்லையா? இந்த தமிழ் கூட்டமைப்பு ஒரு துரோக கும்பல். அவர்களுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாதா என்றார்கள். உடனே இது தமிழர்களின் வாக்கை பிரித்து மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் துரோகிகளின் திட்டம் என்ற கூச்சல் எழுந்தது. இதன் மூலம் சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்கப்படும் என்றார்கள். இப்போது சிவாஜிலிங்கத்திற்கு இந்த குற்றச்சாட்டையே சுமத்துகிறார்கள். அது போக இது இந்திய றோ அமைப்பினுடைய திட்டம். இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்த சிவாஜி லிங்கம் றோவுக்கு பலியாகி விட்டார். புலிகளது தோல்விக்கு பின்பு மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்த துரோகி ஸ்ரீகாந்தாவுடன் சென்றுதான் கட்டுப்பணத்தை செலுத்தினார். எனவே அவர் துரோகி. (ஏற்கனவே புலிகளது தோல்விக்கு பின்பு மகிந்தவை போய் சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவினை ஏற்படுத்த முனைந்ததால் கிஷோர் துரோகியாகி விட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்). எனவே தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் மறைமுகமாக மகிந்தவை ஆதரிக்கும் துரோகிகள் ஆனார்கள்.

இது தவிர இங்கு நான் குறிப்பிட மறந்த இன்னும் எத்தனையோ துரோகிகள் இருக்கிறார்கள்.

சரி இப்போது சொல்லுங்கள் யார்தான் உண்மையான துரோகி???

- ஜீவேந்திரன்

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.