தேர்தல் முடிவை வெளியிடுவதில் பல தில்லுமுல்லுகளை செய்து (இவை பற்றிய தகவல்களை எனது தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளி வாய்க்கால் தொடர்ச்சியா? என்ற கட்டுரையில் பார்க்கவும்) ஒருவாறு பதவியை தக்கவைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ
தற்போது தனது வேட்டையை முழு வேகத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்.
மகிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அவரது அன்புத்தம்பி கோதாபே ராஜபக்ஷவின் தலைமையில் தங்களுக்கு எதிரானவர்கள் என கருதப்படுவோரை பழிவாங்க (அல்லது போட்டுத்தள்ள) புதிய குழுவொன்று அமைக்கப்படுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த குழுவில் இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து தப்பியவர்கள், சமூக விரோதி கும்பல்களை சேர்ந்தவர்கள், மேர்வின் சில்வா தலைமையிலான பாதாள உலகத்தினர் என பலரும் அடங்கியுள்ளனர் என்றும், இவர்கள் யாரை வேட்டையாட வேண்டும், எப்படி வேட்டையாட வேண்டும் என கோதாபே ராஜபக்ஷ நேரடியாக வழி நடத்தி வருவதாகவும் கொழும்பு செய்திகள் கூறுகின்றன.
தேர்தலின் பின்னர் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு கொலைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. அதிலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா முதல் கொண்டு பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இப்படியான வன்முறைகள் நடக்கிறது..மோசடி நடக்கிறது என்ற செய்திகளை வெளியிடக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறுஞ்செய்திகள் அனுப்புபவர்கள், இணையத்தில் செய்தி வெளியிடுபவர்கள், மின்னஞ்சல் அனுப்புபவர்கள் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கையின் கோயபல்ஸ் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கின்ற சுதந்திர தகவல் பரிமாற்றத்திற்கும் ஆப்பு தயாராகிவிட்டதையே காட்டுகிறது.
சரத் பொன்சேகாவிற்கு தொகுதிகளில் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தவர்கள், சுவரொட்டிகள் ஒட்டியவர்கள், வாக்கு சேகரித்தவர்கள் என பலர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. சரத் பொன்சேகாவும் அவருடைய பாதுகாப்பு பிரிவினரும் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குடும்பத்துடன் மறைந்து வாழ வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இவர் கொல்லப்படலாம் என்றும் மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளராக இருந்து பின்னர் தேர்தல் சமயத்தில் இவர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்தமையே இப்போது அவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஆப்பு இறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில்12 முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். 3 மேஜர் ஜெனரல்கள், இரண்டு பிரிகேடியர்கள், உட்பட கேணல், லெப். கேணல், கப்டன் தர அதிகாரிகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு ஆப்பு காத்திருக்கிறது.
சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கு ஏற்றதாக சதித்திட்ட வழக்கொன்று புனையப்பட்டு வருவதாக தெரிகிறது. இராணுவ ஆட்சி ஒன்றுக்கு சரத் பொன்சேகா திட்டமிட்டதாகவும், மகிந்தவை கொல்ல சதி முயற்சி செய்ததாகவும் கூறி அவரை சிறையிலடைக்க அல்லது தப்பிச் செல்ல முற்பட்டார் எனக்கூறி போட்டுத்தள்ள ஏற்பாடுகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா மட்டுமல்லாது அவருடைய மருமகன் போன்ற குடும்ப உறுப்பினர்களும் நாட்டில் இருந்து தப்பி செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டளைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (இரு மகள்மார் திங்களன்று அமெரிக்கா சென்றதாக தெரிகிறது). சரத் பொன்சேகாவின் அலுவலகம் சோதனை செய்யப்பட்டு 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சரத்பொன்சேகாவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் பாதுகாப்பளித்து வந்த 90 படையினரை அகற்றி தற்போது 4 போலீசார் மட்டும் அமர்த்தப்பட்டுள்ளனர். (தமிழ் மக்களுக்கு எதிராக பல படுகொலைகளை நிகழ்த்திய, புலிகள் எனக்கூறி பல தமிழ் இளைஞர்களை போட்டுத்தள்ளிய, யாழ் மக்களது இயல்பு வாழ்க்கைக்கு புலிகளின் பெயரால் பல தடைகளை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவிற்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என்பது வேறு கதை).
இதே வேளை இந்த தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த கருத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும், எரிக் சொல்ஹெய்ம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாதென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலில் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்கு அட்டைகள் பெரும் குவியல்களாக இரத்தினபுரி பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையாக உள்ள குப்பைத் தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்த, அமரபுர ஆகிய பீடங்களை சேர்ந்த பிரதம மதகுருக்களை சந்தித்து ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையாளரிடமும் முறையிடப்படுள்ளது. அவரும் விசாரிப்பதாக கூறியிருக்கிறார். (தான் போக வழியில்லையாம் மூஞ்சுறுக்கு, விளக்குமாறை கொண்டு போகணுமாம்)
மகிந்தவின் வேட்டையை வெளியில் சொல்லக்கூடிய செய்தியாளர்களுக்கு எதிராகவும் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற தில்லுமுல்லுகளை செய்தியாளர்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. செய்தி ஊடகங்களின் தொலைபேசிகள், இணையம் என்பவை கண்காணிக்கப்படுகின்றன. பல செய்தியாளர்களை உளவுப்பிரிவினர் பின்தொடர்கின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.
ஜே. வி.பி கட்சியின் ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகெகொடையில் அமைந்துள்ள இரிதா லங்கா பத்திரிகை அலுவலகம் புலனாய்வுத் துறையினரால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. (தற்போது இதற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது). ஏற்கனவே இரிதா லங்கா அலுவலகத்தை உடைத்து தேடுதல் நடாத்தப்பட்டிருந்தது . லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்தில் பலதடைவைகள் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த இணையத்தளத்தை மக்கள் பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்தது. பின்னர் இந்த இணைய செய்தி அலுவலகம் திறக்கமுடியாதவாறு பலாத்காரமாக மூடப்படுள்ளது.
உதயன் தமிழ் பத்திரிக்கை மீதும் அமைச்சர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுள்ளது. இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம வானொலி நிலைய அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக இடம்பெற்ற மோசடிகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பல வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
அதே போல தனக்கு எதிராக வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீதும் தனது வேட்டையை ஆரம்பிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. ஏற்கனவே வன்னி அகதி முகாம்களில் சுகாதார வசதி உட்பட பல சேவைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மகிந்தவின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிந்தவுடன் மகிந்த தனது அடிபொடிகளிடம் (அல்லக்கைகளிடம்) இப்படித்தான் சொல்லியிருப்பார்......
வேட்டை ஆரம்பமாச்சுடோய்..!
(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும் ).
--- ஜீவேந்திரன் ----
http://jeevendran.blogspot.com/
0 comments:
Post a Comment