Tuesday 2 March 2010

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

மகிந்தவின் ஆட்சியும் சர்வதேசத்தின் ஆப்பும்

இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் தரப்பு தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க முன்றில் இரண்டு பெரும்பான்மை கோரி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. தேர்தல் முறையை மாற்றி அமைத்தல், இனப்பிரச்சனைக்கு சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்கல் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக தற்போதுள்ள யாப்பினை மாற்றியமைக்க வேண்டுமென மகிந்த தரப்பு கூறுகிறது.

இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ள ஆளும் தரப்பானது , இலங்கை நாடானது அபிவிருத்தியை நோக்கி மிக வேகமாக பயணிக்கின்றது என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் நாட்டை மீட்க வந்த தேவ தூதர்களாக தம்மை காட்டி வருகிறார்கள். வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்தமை, மகிந்த தரப்பின் இந்த பிரசாரத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு எதிராக கண்டனங்களை எழுப்புதல், அறிக்கைகளை வெளியிடல், விமல் வீரவன்ச போன்ற அடிபொடிகளைக்கொண்டு தூதரகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் போன்ற செயல்பாடுகளின் ஊடாக மகிந்த தரப்பானது சிங்கள மக்கள் மத்தியில் தம்மை சர்வதேசத்திற்கு அடிபணியாதவர்களாக தம்மை காட்டிக்கொள்கிறது . இந்த பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் எடுபட்டும் வருகிறது.

அதேவேளை சரியோ பிழையோ கடந்த அரசாங்கங்களை விட மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது சர்வதேசத்திற்கு பயப்படாமல் செயலாற்றி வருகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது எழுந்த அழுத்தங்களை எதிர்கொண்ட போதும், ஐநா மனித உரிமை விவகாரத்தின் போதும் சர்வதேசத்திற்கு அடிபணியாமல் மகிந்த செயலாற்றி இருந்தார். சோனியாவின் சேலையில் மறைந்து கொண்டு இந்த வீரத்தை அவர் காட்டி இருந்தாலும், இதனால் சிங்கள மக்கள் மத்தியில் அவரின் மதிப்பு பெருமளவு உயர்ந்தது என்பதே தமிழருக்கு கசக்கின்ற உண்மை.

இவ்வாறு உள்ளூரில் தன்னை சண்டியனாக மகிந்த உறுதிப்படுத்திக்கொண்டாலும் சர்வதேச ரீதியாக இடம்பெறுகின்ற விடயங்கள் மகிந்த தரப்பிற்கு அவ்வளவு நல்ல சகுனங்களாக தெரியவில்லை.

அதில் ஒன்றாக GSP+ ஆறு மாத காலத்துக்கு ரத்து என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளமை அமைகிறது. இலங்கையில் ஏற்கனவே ஆடை, இறப்பர், தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதிகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை புள்ளி விபர திணைக்களத்தின் தகவலின் படி சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, 60 000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை வழங்க இந்த அரசாங்கம் செய்வதறியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. GSP + சலுகை இழப்பு காரணமாக 200000 இற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழக்க வேண்டிவருமென கலாநிதி ரூபசிங்க போன்ற மகிந்தவின் எடுபிடி அரசியல் ஆய்வாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

இது போதாதென மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த சொல்லி இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்த மீள் குடியேற்றம் நடந்து அனைத்து தமிழ் மக்களும் விடுவிக்கப்பட்டால் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு எவ்வாறு தொழில் வழங்குவது என்பது இலங்கை அரசுக்கு தலைவலியாக இருக்கும்.

தமிழ் இளைஞர்களுக்கு அன்போடு வேலை கொடுக்க மகிந்தவிற்கு மனமில்லாவிட்டாலும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மீண்டும் புரட்சிகர இயக்கங்கள் உருவாகலாம். தமிழர்கள் மட்டுமில்லாது சிங்கள மக்கள் மத்தியிலும் ஆயுத கலாசாரம் மீண்டும் தலை தூக்கி கொலை கொள்ளை போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கலாம். இதனால் ஜனாதிபதிக்கு எதிரான சக்திகள் பெரும்சக்தியாக உருவெடுக்கலாம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறான நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வர மகிந்த அரசாங்கம் ஆயுதப்படைகளின் உதவியையே நாட வேண்டி ஏற்படும். ஏற்கனவே இந்த சூழலை மனதில் கொண்டே வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே நிலப்பரப்பு, மக்கள் தொகை என்பவற்றோடு ஒப்பிடும் போது உலகத்திலேயே அதிக ஆயுதப்படையினர் இருப்பது இலங்கையில்தான் என சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதேவேளை சர்வதேசத்துடன் குறிப்பாக மேற்கு நாடுகளுடன் இலங்கை முறுகிக்கொண்டுள்ள நிலையில் ஜப்பான்,இந்தியா, சீனா போன்ற நாடுகளே இலங்கையை தாங்கிப்பிடிக்கின்றன. அதிலும் கடந்த வருடம் உலக வங்கி, உலக நாடுகள் எல்லாவற்றையும் விட சீனாவே இலங்கைக்கு அதிக கடன் உதவிகளை வழங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், பாதை அபிவிருத்தி, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி போன்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், திட்டக்கடன்களாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், நிதிகளாக 279.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனூடு சீனா இலங்கை மீது மேற்கொள்ளப்போகும் செல்வாக்குகள், அழுத்தங்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லாம் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இதனிடையே இந்த 2010 மார்ச் மாதம் வழங்கப்படவேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் தொகையான 2 .6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 260 பில்லியன் ரூபாய்கள்) கால அளவு குறிப்பிடப்படாமல் தாமதப்படுத்தப் பட்டிருக்கின்றது.

ஜி.எல் பீரிஸ் போன்றோர், GSP+ சலுகை அப்படி ஒன்றும் பெரிய விடயம் அல்ல, சர்வதேச சந்தை விரிந்து கிடக்கின்றது,சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப்பெற்றுக்கொள்வதற்காக யாரது காலிலும் விழ மாட்டோம் என்று கூறுவது வடிவேலின் கைப்பிள்ளை தனமான நகைச்சுவையாக உள்ளது. எனினும் இது சிங்கள மக்களை உருவேற்றத்தான் என நம்பலாம்.

இவ்வாறான ஒரு சூழல் காரணமாக அத்தியாவசிய பண்டங்களின் விலை குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிக்கும். மின்சாரம், நீர் போன்ற அனைத்து அடிப்படை சேவைகளுக்கான வரி மிக அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களாகவே இருக்கப்போகிறார்கள். அதிலும் அடிமட்ட சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது உறுதியானது.

உண்மையில் கடந்த வருடத்தில் ஏற்றுமதி படு பயங்கர வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மகிந்தவின் கடந்த 4 வருட ஆட்சிக்காலத்தில் 2 ட்ரில்லியன் ரூபாய்களாக இருந்த கடன் தொகையானது தற்போது 4 .1 ட்ரில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என லங்கா பிசினஸ் ஒன்லைன் பெப்ரவரி வெளியிட்ட மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அரசு 459 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. இந்த இழப்பானது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு வருட இழப்பை 100,000 ரூபாய்களாக உயர்த்தியுள்ளது. தற்போது சிறிலங்காவில் உள்ள ஒரு குடும்பத்தின் கடன்சுமை 835,000 ரூபாய்கள் ஆகும்.

எனினும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித உயர்வும் ஏற்படவில்லை. இதுவே இன்றைய உண்மை நிலையாகும். இந்த ஆபத்தான சூழலை சாதாரண சிங்கள மக்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இந்த உண்மையை மகிந்த தரப்பு திட்டமிட்டு மூடி மறைக்கிறது. யுத்த வெற்றி என்ற சகதிக்குள் சிங்கள மக்கள் சிக்கியிருப்பது மகிந்தவிற்கு வசதியாக போய்விட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக போர்க் குற்றம் தொடர்பில் இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டப்ளினில் போர்குற்றம் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மகிந்தவிற்கு எதிராக பெரும் விசாரணை ஒன்று இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வாய்ப்பில்லை என்றாலும் கூட (இந்தியாவை ஆளும் இத்தாலிய அம்மையாரின் கருணையால்) இந்த விடயம் மகிந்தவிற்கு பெரும் மண்டைக்குடைச்சலாகவே இருக்கப்போகிறது. போதாக்குறைக்கு அமெரிக்க, பிரித்தானிய, ஆஸ்திரேலியா முக்கிய பிரமுகர்கள் தமிழர்களின் கோரிக்கை தொடர்பாக ஆதரவு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் போன்றோர் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மகிந்தவின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலம் மலர்படுக்கையாக இருக்கப்போவதில்லை. அது சர்வதேசம் தீட்டிவைத்த ஆப்பால் ஆன மஞ்சமாகவே இருக்கப்போவதாக தோன்றுகிறது. சோனியாவின் சேலை எவ்வளவு காலத்திற்கு இந்த ஆப்பிலிருந்து மகிந்தவை காப்பாற்றப்போகிறது?

கா.ஜெயகாந்தன்

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- கார்த்திகேசு ஜெயகாந்தன்

2 comments:

Ugentheepan said...

உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்துக் கோணங்களிலும் இலங்கைப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறும் ஆடை உற்பத்தித் துறையின் சிறந்த செயலாற்றத்திற்கு ஜி.எஸ்.பி.பிளஸ் முறைமையின் கீழான சலுகைகள் இலங்கைக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைப்பதனை உறுதி செய்வது பொருளாதார நோக்கில் மிகவும் அவசிமானதாகும்.

//Mr.Jeevendran Anna,
ஸ்ரீலங்காவின் நகர்வுகளை தெளிவாக வரையறுத்துக்காட்டி இருக்கின்reeர்கள். சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள்.//

ஜீவேந்திரன் said...

உகந்தீபன், இந்த கட்டுரையை எழுதியவர் ஜெயகாந்தன். தயவு செய்து அவருக்கு உங்களது பாராட்டுக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.