இந்தியாவின் போலி ஜனநாயகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது போபால் வழக்கின் தீர்ப்பு. இரு நாட்களில் மட்டும் 20 000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, ஆயிரமாயிரம் மக்கள் சித்தரவதைக்கு உட்பட்டு மெது மெதுவாக செத்துக்கொண்டிருக்கும் ஒரு படு பாதக செயலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை பார்க்கையில் அதிச்சியடையாதோர் இருக்க முடியாது.
அதுவும் 1984 ஆம் ஆண்டு நடந்த கொடூரத்திற்கு வேண்டுமென்றே 26 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்திய நீதி(?) வழங்கப்பட்டிருக்கிறது.
இது ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் காறி உமிழப்பட்ட ஒரு தீர்ப்பு மட்டுமல்ல, இதற்கு காரணமாக தாங்கள் நம்புகின்ற தமது சொந்த அரசியல் தலைவர்களே இருக்கிறார்கள் என்ற மிக மிக வெட்கக்கேடான விடயத்தை வெளிப்படுத்துவதும் ஆகும்.
பச்சை வேட்டை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தனது சொந்த மக்களையே வேட்டையாடுகின்ற இந்திய ஆட்சியாளர்கள், 26 வருடங்களுக்கு முன்பு போபாலில் தனது சொந்த மக்களான 20 000 பேரின் உயிரை குடித்த அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைவர் மற்றும் அதிகாரிகளையும் பாதுகாத்திருக்கின்றனர் . அதனூடாக அவர்கள் தம்மையும் பாதுகாத்துக்கொண்டனர். காரணம் இந்த கொடுமைக்கு அமெரிக்க நிறுவனம் மட்டுமல்லாது இந்திய ஆட்சியாளர்களும் மிக முக்கிய காரணமாகும்.
அத்தோடு இந்த துயரத்திற்கு அமெரிக்க நிறுவனத்தை விட இப்போது ஆட்சியில் உள்ள அதே காங்கிரஸ் கட்சிதான் அப்போதும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தையும் காந்தியத்தையும் வரித்துக்கொண்டதாக இன்றும்கூட மக்களை ஏமாற்றி வருகின்ற காங்கிரசின் பணநாயகத்திற்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.
விபத்து நடந்த ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்த குற்றத்திற்கு உடந்தையாக அவரும் அவரது சகாக்களும் இருந்தமை தெளிவான ஒன்றாக உள்ளது. பாரிய அளவில் லஞ்சப்பணம் கைமாறப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான டேவிட் அன்டசன், ராஜீவ் காந்தியால் பாதுகாக்கப்பட்டமையும், வழக்கில் தலையீடு செய்தமையும் இன்று சம்பந்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
01. இவ்வாறான அதி அபாயகரமான தொழிற்சாலை மக்கள் குடியிருப்புகளிருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதி கவனத்தில் கொள்ளப்படவில்லை.
02. விபத்துகளுக்கான சாத்தியம் தொடர்பில் முறையாக கண்காணிக்கப்படவில்லை.
03. விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், விபத்து நடந்தால் செய்யப்படவேண்டியவை குறித்து உரிய நடவடிக்கைகள் இருக்கவில்லை.
04.விபத்து நடந்தவுடன் நிறுவனத்திற்கு பொறுப்பான அமெரிக்கரான டேவிட் அன்டசன் பிணையில் வெளிவர வரக்கூடியவாறு, அதுவும் ஒரு ஒரு சம்மன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
05. டேவிட் அன்டசன் ராஜீவ் காந்தியின் உத்தரவுடன் போபாலில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
07. இவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக டேவிட் அன்டசன் இருந்த போதும் இதுவரை அவரை நாடுகடத்தும் படி இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவை நிர்ப்பந்திக்கவில்லை (அப்படி செல்லும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் டேவிட் அண்டசனின் உல்லாச விடுதியில் அவருடன் மது அருந்தி உல்லாசமாக இருந்தமை ஊடகங்களால் பிரித்தானிய ஊடகத்தால் வெளிப்படுத்தப்பட்டது)
08. யூனியன் கார்பைட் (அமெரிக்கா 50.9% / இந்தியா 49.1%) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்பாரில் என்ற பூச்சி மருந்தை மிக செலவு குறைந்த ஆனால் அபாயகரமான மீதைல் ஐசோசயனேட் என்ற நச்சுப்பொருளைப் பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
09. வெடி பொருட்கள், நச்சுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை கையாள்வது, கட்டுப்படுத்துவது தொடர்பில் உள்ள இருபதுக்கும் மேலான சட்டங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
10. தொழிற்சாலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு முறையான கல்வி, நடைமுறைப்பயிற்சி, ஆபத்து குறித்த விளக்கம், விபத்து தவிர்ப்பு போன்றன குறித்து உரிய முறையில் தெளிவுபடுத்தப்படவில்லை.
11. விபத்தின் பிறகு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த வழக்கு பிரிவு ராஜீவ் காந்தியின் அழுத்தத்தால் மத்திய அதிகாரிகளின் வேண்டுதலுடன் மனிதர்களை படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 304 இலிருந்து சாதாரண சாலை விபத்து போன்றவைகளுக்கு பயன்படுத்தும் 304 ஏ சரத்துக்கு மாற்றப்பட்டது.
12. வழக்கு வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.
ராஜீவ் காந்திக்கு பிறகும் முதலாளிகளையும் பெரும் தனவந்தர்களையும் பாதுகாக்கும் கவசமாக இயங்கி வருகின்ற காங்கிரஸ் கட்சி இந்த வழக்கு தொடர்பிலும் அவ்வாறே செயற்பட்டது / செயற்பட்டு வருகிறது.
பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு போபால் விஷவாயு வழக்கில் தலையிட்டு ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என சிபிஐக்கு உத்தரவிட்டது. போபால் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பு மன்மோகன் சிங்கை சந்தித்த போது யூனியன் கார்பைட் பற்றி என்னுடன் பேச வேண்டாம் என்று அவர்களை வெளியேற்றியதை தெஹல்கா அம்பலப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியும் மன்மோகன் சிங்கும் இந்த வழக்கை மீளப்பெறுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அது இடதுசாரிகளின் எதிர்ப்பினால் சிக்கலான நிலையில் தண்டனையை மிக குறைந்ததாக மாற்றியமைத்துள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அரசு 1984-ல் யூனியன் கார்பைட் நிறுவனத்திடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டிருந்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் சற்றும் குறைந்த கட்சியாக இல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் காலப்பகுதியில் 1999-ல் 450 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக ஏற்றுக்கொண்டது.
போபால் கொடூரத்தால் சொல்ல முடியாத இழப்பு எற்பட்டுள்ள போதும் யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியுள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எவரெடி மின்கலங்களை தயாரிக்கின்ற இந்த நிறுவனம் ராஜ மரியாதைகளுடன் அரசியல் செல்வாக்குடன் இயங்கி வருகிறது. மேலும், இந்த டௌ கெமிக்கல்ஸ்காகத்தான் சிபிஎம் அரசு நந்திகிராமில் மக்களை கொன்றொழித்தனர்.
இத்தனை கொடுமைகளுக்கும் இடையே விபத்து இடம்பெற்ற பிரதேசம் இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. அங்கிருக்கும் நச்சுப்போருட்கள் தினந்தோறும் மண்ணோடு கலந்து வருகிறது. நீர் மாசுபட்டு வருகிறது. இதனை சுத்தம் செய்வதற்கு கூட டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இன்று வரை மறுத்து வருகிறது. இவாறான ஒரு கேவலமான நிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் சூழல் பாதுகாப்பாளர்கள். டௌ கெமிக்கல்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமது சொந்த மக்களை இந்திய ஆட்சியாளர்கள் விற்று விட்டனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஏற்கனவே ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் தொடர்ந்து நரவேட்டை நடத்தி வருகிறது.
ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தமது சொந்த வாழிடங்கள் பறிபோவதை எதிர்க்கும் மக்களை பச்சை வேட்டை எனும் பெயரில் வேட்டையாடி வருகிறது. இதுவரை இற்கும் மேட்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மக்கள் அழிவை நியாயப்படுத்தி வருகின்ற இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “வேதாந்தா” நிறுவனத்தில் சட்ட ஆலோசகர் என்பதும், அந்நிறுவனத்தில் மறைமுகமாக பணி புரிபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இடது சாரி அமைப்புகள் இவ்வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றில் மென் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் 1996-ல் படுகொலை குற்றமாக கருதவேண்டிய [culpable homicide ] குற்றத்தை கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் [death by negligence ]என மாற்றி ஆணையிட்டதே உச்சநீதிமன்றம்தான். எனவே பணத்தால் கட்டுப்படுத்தப்படுகின்ற இந்திய நீதிமன்றில் இதற்கு நீதி கிடைப்பது சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை.
இந்திய ஜனநாயகம் பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இது ஏழைகளுக்கான ஜனநாயகம் அல்ல. இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக, சட்ட, நீதி, நிர்வாக சார்ந்த நிறுவங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கானது, இந்த இந்திய ஜனநாயகம் என்பது ஒரு போலி ஜனநாயகம் என்பது மீண்டும் ஒருமுறை இந்திய மக்களின் முகத்தில் காறி உமிழ்ந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment