Monday, 7 June 2010

மக்களுக்கு எதிராக புலிகளும் இராணுவமும்

வன்னியில் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் மீது புலிகளும் இராணுவமும் அடக்கு முறைகளையும், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியா வடக்கு, மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில் மக்கள் சிறு சிறு பகுதிகளில் துண்டு துண்டாக குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரில் அதிகளவான மக்களும் முல்லைத்தீவில் குறைவான மக்களும் குடியமர்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் இன்றுவரை முகாம்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள். கண்ணி வெடிகள் அகற்றப்படாமை காரணமாகவே இம் மக்கள் குடியமர்த்தபடாமல் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் எவ்வித அவசரமும் காட்டப்படவில்லை. இந்திய ராணுவமும் இலங்கை இராணுவமும் சேர்ந்து இவற்றை அகற்றி வருவதாக செய்தி ஊடகங்களில் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான பலனை காண முடியாமல் உள்ளது. வேண்டுமென்றே மக்கள் மீள குடியமர்வதை அரசாங்கம் தாமதிக்கிறது என்றே இங்கு வன்னியிலுள்ள மக்கள் நம்புகிறார்கள்.

அதற்கு ஏற்றால் போல வன்னியின் பல பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டி எழுப்பபடுகின்றன. பல பிரதேசங்களில் பாகங்களாக பொருத்தி அமைக்கின்ற வீடுகளுக்கான கட்டுமானப்பொருட்கள் பெருமளவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இவை யாருக்காக என்ற கேள்வி மக்கள் மனங்களில் உள்ளது. இவற்றை இரண்டு நாட்களில் பொருத்தி வீடுகளை அமைத்து விடலாம். ஆனால் இவை மக்களுக்கு வழங்கப்படுகின்றவை அல்ல. இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு என்ற போர்வையில் வன்னியில் பாரிய அளவில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தவே திட்டங்கள் தீட்டப்படுவதாக தெரிகிறது.

மக்களை பொறுத்தவரை வெகு சிலருக்கு இந்தியாவினால் தகடுகளும் சீமெந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு எவ்வித கட்டுமானப் பொருட்களும் வழங்கப்படவில்லை. தொழில் செய்வதற்கு எவ்வித ஏற்பாடுகளும், உதவிகளும் இல்லாத காரணத்தால் மக்களிடம் பணமும் இல்லை. எனவே மிகப்பெரும்பாலான மக்கள் சிறு சிறு குடிசைகளை அமைத்துக்கொண்டு நீர், மின்சாரம், முறையான போக்குவரத்து என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் விடப்பட்டுள்ளனர்.

அவர்களது குடிசைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் பத்தடி தூரத்திலேயே கண்ணி வெடிகளும், ஏவுகணைகளும், வெடிக்காத ஏனைய வெடிபொருட்களும் தாராளமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றை தாண்டியே தண்ணீர், விறகு போன்றவற்றை சேகரிக்க வேண்டியுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இம் மக்களது குழந்தைகள் இந்த வெடி பொருட்கள் உள்ள சூழலில்தான் வசிக்கின்றனர். அவர்கள் எவ்விதம் இந்த கண்ணி வெடிகள், ஏனைய வெடி பொருட்களை இனம் காண முடியும்? தெரிந்தே அவர்கள் அவ்விதம் விடப்பட்டு இருக்கிறார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே மிக கொடுமையான போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி வந்தவர்களே இந்த மக்கள். கிளிநொச்சி வரை புலிகள் தந்திரமாக பின்வாங்குவதாக நம்பி அவர்களுடன் விரும்பியே இந்த மக்கள் சென்றனர். எனினும் கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்கள் அங்கிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லவே விரும்பினர். ஆனால் அதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை.

கடுமையான காயம் அடைந்தவர்கள் கூட வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் யுத்தம் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு உக்கிரமடைந்த போதும் கூட புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. புலிகளை மீறி சென்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். அதே போல அங்கிருந்து தப்பி சென்றவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றார்கள்.

கடைசி நாட்களில் பெருமளவில் வெளியேறிய பொது மக்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் தப்பிச்சென்ற பெரும்பாலானவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட அவர்களது உடலங்களை கடற்படை வள்ளங்களில் கொண்டு சென்று கடலில் கொட்டியுள்ளனர்.

கடைசி நாட்களில் 30 000 வரையான பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்த மக்கள், போராளிகள் என 27 000 இற்கும் மேற்பட்டோர் குற்றுயிருடன் புதைக்கப்பட்டார்கள். வாகனங்களில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வாகனத்தோடு தகர்க்கப்பட்டார்கள். ஒரு குறுகிய சிறு பிரதேசத்துக்குள் வாழ்ந்த மக்கள் மீது பல்குழல் பீரங்கிகள் குண்டுகளை பொழிந்தன.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஆண்- பெண் பிள்ளைகள் புலிகளால் பலவந்தமாக கதறக்கதற கடத்தி செல்லப்பட்டு அவர்களது கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. தமது பிள்ளைகளை பாதுகாக்க முயன்ற பெற்றோர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டார்கள் இதிலிருந்து தப்புவதற்கு பெற்றோர் சிறுமிகளைக்கூட திருமணம் செய்து வைத்தனர். ஆனால் போர் உக்கிரம் அடைய அனைவரும் பலாத்காரமாக இழுத்துச்செல்லப்பட்டனர்.

போர் முடிவடைய ஓரிரு நாட்கள் இருந்த போது கூட இளம்பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு அவர்களது தலை முடியை புலிகள் கத்தரித்துள்ளனர். இதன் பலன் ஒன்றுமறியா அப்பாவி பெண்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி புதைக்கப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் சிறைகளில் வாடுகிறார்கள்.

இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டு தமது போராட்ட அர்ப்பணிப்பை காட்டிய புலி உறுப்பினர்கள் தற்போது இராணுவத்துடன் இயங்கி தமது விசுவாசத்தை காட்டி வருகிறார்கள். அதிலும் கொஞ்சம் சிங்களம் பேசத்தெரிந்த புலிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். சரணடைந்த இந்த சில நூறு புலி உறுப்பினர்கள் தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் தமது விசுவாசத்தை நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே போராளிகளையும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்களையும் காட்டிக்கொடுப்பது இவர்களது பணியாக உள்ளது. தனிப்பட்ட கோப தாபங்களும் தீர்த்துக்கொள்ளப்படுகிறது.

மக்கள் மீள குடியேறிய பகுதிகளில் அதிகளவில் கொள்ளை, குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெயாத நபர்கள் அங்கிருந்த கணவன் மனைவியை வாளினால் வெட்டியும், துப்பாக்கியினால் சுட்டும் துன்புறுத்தி அங்கிருந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதில் மனைவியான விக்னேஸ்வரியின் கை துண்டிக்கப்படும் நிலையில் காணப்பட்டதுடன் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. கணவனான இராசலிங்கத்திற்கு வயிற்றுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை விடக்கொடுமையாக மீளக்குடியேறிய மக்கள் மீது இராணுவம் பாலியல் கொடுமைகளை புரிந்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கு காட்டிக்கொடுக்கும் புலிகள் உதவி வருகிறார்கள்.

விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது 6 இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விசாரணைகள் வழமை போல மூடி மறைக்கப்பட்டு விடும் என்பதை பலரும் அறிவார்கள்.

கண்ணி வெடியகற்றல், வேலிகட்டல், வீடு கட்ட உதவுதல் போன்றவற்றிட்கு சில இராணுவத்தினர் உதவி செய்கின்றனர். ஆனால் அவ்வாறு பகலில் நோட்டமிடுகின்ற சில இராணுவத்தினர் இரவில் பெண்கள் மீது வன்கொடுமை புரிகிறார்கள். இதில் இராணுவத்தினருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த புலிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

சரியோ பிழையோ தலைமை இருக்கும் போது கட்டுப்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது மிக மோசமான கொடுமைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் புலிகள் என இவர்களால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை எடுத்துச்சொல்ல அமைப்புகளோ, செய்தி ஊடகங்களோ அங்கு இல்லை. போக்குவரத்து ,மின்சாரம் போன்ற வசதிகள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்? எங்கு தப்பிச்செல்ல முடியும்?

எதிரி, சிங்களவன் என்று சொல்லப்பட்டவர்கள்தான் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், எங்களுக்கு ஈழம் பெற்று தருவதாக சொன்னவர்களுமா கொடுமைப்படுத்த வேண்டும்?

கார்த்திகேசு ஜெயகாந்தன்

2 comments:

satheshpandian said...

Good story....

Nalliah said...

தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது
மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.

பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை
முன்னெடுத்தன.

இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.

பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல
மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால்
விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே
தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில்
ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிகக் முடியாது.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில்
நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை
செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம்
ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.

எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை
கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே.
அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.

ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில்
ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை
நிர்வகித்து ஆயிரக்கனக்கனவர்களை எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை
செய்து கொன்று புதைத்தனர்

அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும்
நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தில் இருந்த
வந்தவர்களே.

நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திருப்பி பார்க்க வேண்டும்.

ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?

-Nalliah Thayabharan

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.