Saturday 24 November 2012

பாலஸ்தீனத்தின் கண்ணீர் - ஐ.நா. சொல்ல மறந்த கதை

பாலஸ்தீனத்தின் கண்ணீர் - ஐ.நா. சொல்ல மறந்த கதை

'இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் உலகம் காணாத பேரழிவிற்கு உட்பட்ட யூதர்கள் தமது பூர்வீக நாடான இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தனர். கட்டாந்தரையாக மக்கள் வாழாத இடமாக கிடந்த நிலத்தில் யூதர்கள் தமது குடியிருப்புகளை அமைத்தனர்.அவர்களை பாலஸ்தீனர்களும் அரபுக்களும் தாக்கினர். எனவே தம்மை பாதுகாத்துக்கொள்ளுமுகமாக யூதர்கள் போர்களில் ஈடுபட்டனர்'.

இப்படித்தான் எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனம் பற்றி அறிந்து வைத்துள்ளனர்.ஆனால் உண்மை அதுவல்ல.

பாலஸ்தீனம் என்பது மிகவும் உயர்வான கலாசாரம் கொண்ட மக்கள் வாழ்ந்த பிரதேசம். அதை யூதர்கள் ஆக்கிரமித்தனர். இன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மத தீவீரவாதம் இந்தளவு கொழுந்து விட்டு எரிவதற்கு பாலஸ்தீன ஆக்கிரமிப்பு ஒரு மிக முக்கிய காரணமாக அமைகிறது. இஸ்லாமிய மத பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எவ்வளவு சரியானதோ அதேபோல அல்லது அதைவிட ஒரு மடங்கு மேலாக சியோனிச பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சியோனிசம் என்பது யூத தேசியவாதத்தின் அடிப்படையாகும். பைபிள் (பழைய ஏற்பாடு ) கதையின் அடிப்படையில் ஜகொப் (Jacob) என்பவரது வாரிசுகளே யூதர்கள், அவர்களது நிலமே இஸ்ரேல். எனவே உலகம் முழுவதும் பரவி கொடுமைக்கு உள்ளாகும் யூதர்களது துன்பத்திற்கு முடிவாக இருக்கூடியது தமது பூர்வீக நாடான இஸ்ரேலை மீண்டும் அடைவது என்பதே சியோனிசவாதிகளின் வாதமாகும்.

இந்த வாதத்தின் அடிப்படையில் 1881 இல் பாலஸ்தீனத்தில் நவீன கால குடியேற்றம் ஆரம்பமானது. இந்த குடியேற்றம் போரின் அடிப்படையில் அல்லாது அரேபியர், துருக்கியரிடமிருந்து நிலங்களை வாங்குவதன் மூலம் இடம்பெற்றது.

1878 ஆம் ஆண்டு 462 465 ஆக இருந்த பாலஸ்தீன சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 96 வீதமாக இருந்தனர். யூதர்கள் 3.2 வீதமே இருந்தனர்.

ஆனால் 1882-1914 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவிலிருந்து 65 000 யூதர்கள் புதிதாக வந்து குடியேறினர். இதன் பலனாக 1922 ஆம் ஆண்டு சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 87.6 வீதமாகவும், யூதர்கள் 11 வீதமாகவும் மாறினர். இதற்கு இஸ்ரேல் எனும் தனி நாடு அமைவதில் பிரித்தானியா காட்டிய அக்கறை முக்கிய காரணமாக இருந்ததுடன் யூதர்களுக்கு பலத்தை தருவதாகவும் அமைந்தது. குறிப்பாக 1920 களில் பாலஸ்தீனம் பிரித்தானிய நிர்வாகத்துக்குள் வந்தமை பாலஸ்தீனர்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

1920-1931 ஆண்டு காலப்பகுதியில் மேலும் 108 825 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். இக்காலப்பகுதியில் அரேபியருக்கும் யூதருக்கும் இடையில் மோதல் வலுத்தது. 1929 ல் நிகழ்ந்த மோதல்களில் 133 யூதர்கள் அரபுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும் குடியேற்றம் தொடர்ந்தது. 1931ஆண்டு சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 81.6 வீதமாகவும், யூதர்கள் 16.9 வீதமாகவும் மாறினர். இதற்கு ஜெர்மனியில் நாசிகளின் பயங்கரவாதமும் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக ஹிட்லரது பயங்கரவாதம் காரணமாக 1932-1936 ஆண்டு காலப்பகுதியில் 174 000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் வந்து குவிந்தனர். பின்னர் 1937-1945 ஆண்டு காலப்பகுதியில் 119 800 யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அதாவது 1878 ஆம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் தொகையில் 3.2 வீதமாகவும், 1922 ல் 11% வீதமாகவும் இருந்த யூதர்கள் 1940 ஆம் ஆண்டில் 30% வீதமாக உயர்ந்தனர். அதேபோல பாலஸ்தீனத்தின் 28 வீதமான நிலப்பகுதியும் சியோனிச நிறுவனங்களால் வாங்கப்பட்டு இருந்தன. யூத மக்களில் பலரும் தமக்கான நிலங்களை வாங்கி இருந்தனர்.

இந்த குடியேற்றங்களுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் கலகங்களில் ஈடுபட்ட போதும் யூதர்கள் வெற்றி கொண்டனர். இதேவேளை 1939 இல் பிரித்தானியா யூதர்களின் வருகையையும் ,யூதர்களால் பெருமளவில் நிலங்கள் வாங்கப்படுவதையும் கட்டுப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டது. பிரித்தானியாவின் ஆட்சியில் அதிருப்தி கொண்டிருந்த சில யூத ஆயுத குழுக்கள் பிரித்தானிய படைகளுக்கு எதிராக மறைமுகமான தாக்குதல்களில் ஈடுபட்டன. அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான வன்முறைகளை கட்டுப்படுத்தமுடியாத நிலையில் 1947 ஆம் ஆண்டு பிரித்தானியா பாலஸ்தீன பிரச்னையை ஐ.நா.விடம் கொண்டு சென்றது. ஐ.நா. வானது பிரித்தானிய அமெரிக்க அழுத்தங்களுக்கு உட்பட்டு பாலஸ்தீனத்தை அரபு, யூத நாடுகளாக பிரிப்பதாக அறிவித்தது.ஜெருசேலம் சர்வதேச நகராக அறிவிக்கப்பட்டது.

பாலஸ்தீன சனத்தொகையில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான சனத்தொகையை கொண்ட அரபுக்களுக்கு 43 வீதமான நிலத்தையும், மூன்றில் ஒரு சனத்தொகையை கொண்ட யூதர்களுக்கு 56 வீதமான நிலத்தையும் வழங்குவதாக ஐ.நா அறிவித்தது. அதிலும் யூதர்களுக்கு வளமான நிலங்கள் வழங்கப்பட்டதன.

எனினும் திருப்தியடையாத யூதர்கள் பல முக்கிய அரபு பிரதேசங்களை கைப்பற்றினர். நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அரபுக்கள் சகல உடமைகளையும் இழந்து அகதிகளாக பல நாடுகளுக்கும் தப்பியோடவேண்டி ஏற்பட்டது.

இதன் விளைவாக 1948 ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி அயல் நாடுகளின் அரபு ராணுவ வீரர்கள் பாலஸ்தீனத்தில் புகுந்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போரை மூர்க்கத்தனமாக நடத்தியது. இஸ்ரேலது யுத்த தந்திரங்களை நன்கறிந்த போர் வரலாற்று வல்லுனரான Martin Van Creveld இனது கருத்தின்படி படைப்பலத்தில் அரபு ராணுவமே பின்தங்கி இருந்தது. 68 000 அரபு படை வீரர்களும் 90 000 இஸ்ரேல் படை வீரர்களும் போரில் பங்கு கொண்டனர். 78 வீதமான பாலஸ்தீன நிலங்கள் இஸ்ரேலுக்கு உரியதாக மாறின. 'மேற்குக்கரை' ஜோர்தானின் கட்டுப்பாட்டிலும், 'காசா' பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டிலும் வந்தன.

போரின் பின்னர் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமாதானம் அறிவிக்கப்பட்டாலும் கூட பாலஸ்தீனத்தில் சமாதானம் கானல் நீராகவே அமைந்தது. எழு இலட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிமுகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பலஸ்தீன மக்கள் வாழ்ந்த நிலங்கள் யூத குடியிருப்புகளாகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றப்பட்டன. இதன் மூலமாக பாலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அழிக்கப்பட்டன. பாலஸ்தீனர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

1950 களிலும் முற்றாக அமைதி நிலவவில்லை.சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றே வந்தன. 1956 இல் எகிப்து சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கியது தொடர்பில் எகிப்திற்கும் பிரித்தானிய-பிரான்ஸ் தரப்புக்குமிடையே போர் ஏற்பட்டது. இதில் எகிப்திற்கு எதிரான அணியில் இஸ்ரேல் இணைந்து போரிட்டது.

1967ல் சிரியா, யோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடனான போரில் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரை ஆகியவை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மேலும் பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

ஆக்கிரமைப்பை கண்டித்த ஐ.நா பாதுகாப்புசபை ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியபோதும் இன்றுவரை அது இடம்பெறவேயில்லை. இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கம்,ஹமாஸ் போன்றவற்றின் தாக்குதல்களும் அதற்கு எதிரான பாதுகாப்பு தாக்குதல்கள் என்ற வகையில் இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்ந்தன.இஸ்ரேல் தனது பாதுகாப்பை காரணம் காட்டி சோதனைசாவடிகளையும் காசா போன்ற பகுதிகளை பிரித்து தடுப்பு சுவர்களையும் எழுப்பியுள்ளது. பாலஸ்தீன மக்களின் சுந்திர நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வைத்தியசாலையைக்கூட நூறு கிலோமீற்றர்கள் சுற்றி செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உணவு முதல் மருந்து வரை சகல அடிப்படை தேவைகளும் இஸ்ரேல் ராணுவத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் செல்வசெழிப்பான நாடாக மிளிர பாலஸ்தீனம் வேலையில்லா திண்டாட்டத்திலும் வறுமையிலும் உழல்கிறது.

இஸ்ரேல் நாட்டினை ஏற்றுக்கொண்டால் பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி கிடைக்கும் என்ற அடிப்படையில் 1994 இல் ஒஸ்லோ உடன்படிக்கையின்படி பாலஸ்தீன அதிகாரசபையை பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டார். அவர் இறந்தே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக அது பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்குள் மேலும் அதிகமான உள்முரண்பாடுகளை ஏற்படுத்தியது. காசாவை ஹமாசும், மேற்குக்கரையை பத்தா அமைப்பும் கட்டுபாட்டில் கொண்டுள்ளன.

2008 டிசெம்பர் 27 ஆம் திகதி ஹமாஸ் குழுவினரின் எறிகணை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி மூன்று வார இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டது. இப்போரில் 1417 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காச பகுதியின் சகல கட்டமைப்புகளும் அழிவிற்கு உள்ளாகின. இப்படுகொலைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தென்னாப்பிரிக்க நீதிபதி ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் உருவாக்கிய குழு தனது அறிக்கையில் இஸ்ரேலின் போர் குற்றங்களை எடுத்து சொல்லியிருந்து. எனினும் வழமை போலவே இஸ்ரேல் அதனை கண்டுகொள்ளவில்லை. அந்த அறிக்கையும் குப்பையில் வீசப்பட்டுவிட்டது. ஐ.நா.இஸ்ரேல் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத வகையில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.

இன்றுவரை இந்த நிலையே பாலஸ்தீனத்தில் நிலவுகிறது. பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கெடுபிடிகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும், மீன்பிடி போன்ற வாழ்வாதார தடைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு முறையாக மின்சாரமோ,எரிபொருளோ,சுதந்திர நடமாட்டத்திற்கான போக்குவரத்து வசதிகளோ இல்லை. இந்த மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலகில் எந்த சக்தியும் இல்லை.தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டியும், சுதந்திரமான வாழ்வு வேண்டியும் பாலஸ்தீன மக்கள் இந்தகணம் வரை போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவிலிருந்து தமது பிரதேசத்தின் மீது ஹமாசால் தொடுக்கப்படுகின்ற எறிகணை தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்காகவே தாக்குதல்களை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. சமாதானத்திற்கான நோபெல் பரிசு வாங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இஸ்ரேல் தற்பாதுகாப்பு தாக்குதலையே மேற்கொள்வதாகவும் அதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உண்டென்றும் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

ஆனால் இஸ்ரேலில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டியே இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்பது அவதானிகளின் கருத்தாக இருக்கிறது.

இதேவேளை கடந்த வியாழன்று (29.11.12) பாலஸ்தீன வரலாற்றில் மிக முக்கிய நாளாக அமைந்தது. ஐ.நா சபையில் இது வரை பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மேற்கு கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்குமாறு ஐ.நா. பொது சபையில் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றுள்ளது. இது நூறு வீதம் தனி நாட்டுக்கான அங்கீகாரம் இல்லை என்ற போதும் ஐ.நா சபையினது பார்வையாளர் அந்தஸ்த்துக்கான பிரேரணையில் பாலஸ்தீனம் வெற்றி பெற்று விட்டது.

இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு பாலஸ்தீனம் இருந்து வந்திருந்தது. இப்போது கிடைத்த வெற்றியின் மூலம் ஐ.நாவின் பார்வையாளார் தகுதி பெற்ற நாடாக (Observer status) பாலஸ்தீனம் மாறியிருக்கிறது. இது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையாகும். இந்த வெற்றியானது பாலஸ்தீனத்தின் தனி நாட்டுக்கான போராட்ட பாதையில் பெறுமதியான நகர்வாக அமைகிறது.

மேலும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணாமாக பாலஸ்தீன மக்கள் மத்தியில் தோன்றிய பதட்டமான நிலையில் பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதியாகவுள்ள மஹ்முட்அபாசும் ஏதாவது செய்தாக வேண்டிய நிலை இருந்ததை மறுக்க முடியாது. தற்போது இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதன் மூலம் அப்பாசின் செல்வாக்கு காப்பாற்றப்பட்டுள்ளது எனலாம்.

இது இவ்வாறு இருக்க அமேரிக்கா, இஸ்ரேல், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இந்த விடயத்தில் தமது காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க பெரும் முயற்சியை மேற்கொண்டன. இதன் பலனாக 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா, ஜேர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. எனினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 138 நாடுகள் வாக்களித்ததன் மூலம் தீர்மானம் பாலஸ்தீனத்திற்கு சாதகமாக வெற்றியில் முடிந்தது.

அடுத்ததாக தனி நாட்டுக்கான இலக்கிலும் பாலஸ்தீனம் வெற்றியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறலாம். - என்.ஜீவேந்திரன்


0 comments:

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.