Thursday, 10 June 2010

பரதேசி ஞாநியும் பன்னாடை விமர்சனமும்

போர் குற்றம் புரிந்தமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்சே அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் தான் குற்றவாளியாகும் சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காக பல கண் துடைப்பு நாடகங்களை நடத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை இலங்கையில் நடத்துவது. இதன் மூலம் இலங்கையை அமைதியான, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நாடாகவும், படுகொலைகளே நடக்காத சுத்தமான பூமியாக தி‌ரித்து‌க் காட்டவும் அது முயன்றது. இதன் காரணமாகவே தமிழ் திரையுலகமும், தமிழ் அமைப்புகளும், வைகோ, சீமான், நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் இலங்கையில் திரைப்பட விழாவை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தங்களது போராட்டங்களின் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்தனர். திரைப்பட விழா பெருத்த தோல்வியில் முடிந்தது.

இது தமிழகத்திலுள்ள சில அறிவு‌‌ஜீவிகளுக்கு மாறாத அ‌‌ஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சகர் ஞாநி வார இதழ் ஒன்றில் திரைத்துறையின‌ரின் புறக்கணிப்பை கண்டித்து எழுதியிருக்கிறார். போர் மனிதர்களை பி‌ரிக்குமாம், கலைதான் ஒன்றிணைக்குமாம். தமிழ் திரைத்துறையினர் இலங்கை போய் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமாம். ஆனால் அப்படி செய்யாமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்களாம்.

மனசாட்சியை முன்னிறுத்தி இதேபோல் காருண்யத்தின் மடையை ஞாநி அந்த கட்டுரையில் எக்கச்சக்கமாக திறந்திருக்கிறார். அவை பற்றி மேலும் குறிப்பிடுவதற்குமுன் ஞாநியின் விமர்சன முறை பற்றியும் ஈழப் பிரச்சனையில் அவரது மனநிலை எத்தகையது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ILE இசை விமர்சகர்கள், சினிமா விமர்சகர்கள், அரசியல் விமர்கர்கள் என்று தனித்தனியே இருக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த துறையில் வல்லுனர்களாக இருப்பார்கள். ஆனால் ஞாநி ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிப்பவர். இதன் காரணமாக அவரது விமர்சனத்தில் தனி மனித விருப்பு வெறுப்பு எப்போதும் துலக்கமாகவே வெளிப்படும். ஈழப் பிரச்சனையே அதற்கு ச‌ரியான உதாரணம்.

இதே வார இதழில் சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி வி‌ரிவாக எழுதியிருந்தார். கட்டுரை அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

சென்னை குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பேசும் போது எதற்கு தேவையில்லாமல் ஈழம் குறித்துப் பேசுகிறவர்களை இழுக்க வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனை பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை மடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனை பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும். ஏன் ஞாநி கூட உள்ளூர் பிரச்சனைகள் எத்தனையோ முடிக்கப்படாமல் இருக்கும் போது வெளிநாட்டு பிரச்சனைக்கு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆக, அவரது நோக்கம் உள்ளூரா வெளியூரா என்பதல்ல. ஈழம் ஞாநிக்கு அலர்‌ஜி. அது குறித்துப் பேசுகிறவர்களை எப்படியேனும் மட்டம்தட்ட வேண்டும். மேலே சொன்ன கட்டுரையில் வெளிப்பட்டது இந்த மனநிலைதான்.

ஈழம் குறித்து பேசுகிறவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்பதான தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி, அவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்க வேண்டும் என்பதே ஞாநியின் நோக்கம். காரணம் ஈழப் பிரச்சனையில் அவர் தமிழர்கள் சார்பாக நிற்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஈழப் போராளிகளை முன்னிறுத்தி ராஜபக்சேயின் படுகொலைகளை மறைக்கும் ஒரு படுதாவாகவே அவரது பேச்சும் எழுத்தும் இன்று வரை இருந்து வந்திருக்கிறது. இதற்காக அவர் தனது உய‌ரிய கொள்கைகள் எனக் கருதுகிறவற்றையே காலில் போட்டு மிதிக்கவும் தயங்கியதில்லை.

உதாரணமாக, சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பாராட்டி எழுதிய ஞாநி, அரசியல் கருத்து வேற்றுமை உள்ள இருவர் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பரஸ்பரம் நலம் விசா‌ரிப்பதும் ஆரோக்கியமான செயல் என்று கூறி, அப்படியில்லாத திராவிட கட்சி தலைவர்களை குட்டவும் செய்தார்.

அதே ஞாநி, ஜெகத் கஸ்பர் பாதி‌ரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ‘ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்ப‌ரின் புலி ஆதரவு கொள்கையை ஆத‌ரிக்கிறாரா?’

சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசா‌ரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத் கஸ்பர் விஷயத்தில் மட்டும் நீ யார் பக்கம் என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?

ஏனென்றால் ஈழமும் ஈழப் போராளிகளும் ஞாநியால் சகித்துக் கொள்ள முடியாதவை. எத்தனை முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம், நலம் விசா‌ரிக்கலாம். ஆனால் ஈழத்தை ஆத‌ரிப்பவன் என்றால் மட்டும் அவனுடன் யாரும் பேசக்கூடாது, பழகக் கூடாது, ஒரே மேடையில் தோன்றக் கூடாது. இதற்கு பெயர்தான் நவீன தீண்டாமை.

மேலே உள்ள ஞாநியின் இரு கருத்துகளுமே ஈழம் எத்தனை தூரம் அவருக்கு அலர்‌ஜி என்பதை உணர்த்திவிடுகின்றன. இதன் எதிரொலிதான் திரைப்பட விழாவை புறக்கணித்த திரையுலகினரை மனசாட்சியில்லாதவர்கள் என்று ஞாநி சாடியிருப்பதும்.

மனித மனங்களை பி‌ரிப்பது அரசியல், ஒன்றிணைப்பது கலை என்று தனது கட்டுரையில் உருகியிருக்கிறார் ஞாநி. இதில் வேடிக்கை என்னவென்றால் ஞாநி வக்காலத்து வாங்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி கலையையே பி‌ரித்து ஒரு அசிங்கத்தை பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி என்று பெயர் இருந்தாலும் இந்தி திரைப்படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் விருது வழங்குவார்கள். இந்தியாவில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டி, கன்னடம், வங்கம் என பிற மொழிகளை அவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை. இந்தியா என்றால் அவர்களுக்கு இந்தி மட்டும்தான்.

இந்திய மொழிகளையே மதிக்கவும், இணைக்கவும் தெ‌ரியாத ஒரு திமிர் பிடித்த அகாதமியின் முதுகில் ஏறி சிங்களவனையும், தமிழனையும் ஒன்றிணைக்க வேண்டுமாம். உளறலுக்கு ஒரு அளவில்லையா?

இறுதிகட்டப் போரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கு என்ன காரணம்? ராஜபக்சே அரசு மற்றும் புலிகளின் தவறான அரசியலே காரணம் என்று எழுதுகிறார் ஞாநி. புலிகளை முன்னிறுத்தி கொலைகாரன் ராஜபக்சேவை எப்படி காப்பாற்றுகிறார் பாருங்கள். திரைப்பட விழாவுக்கு செல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று இரண்டு பக்கம் கண்டிப்பவர், ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்தவனை ஒரே வ‌ரியில் தாண்டிச் செல்கிறார். இதுதான் அறிவு‌‌ஜீவி ஞாநியின் மனசாட்சி.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதும் நாம் கி‌ரிக்கெட் விளையாடினோம், இப்போது மட்டும் ஏன் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்று இன்னொரு வக்காலத்து. ஐயா, நாம் இப்போதும் இலங்கையுடன் கி‌ரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோது அமிதாப்பச்சன் பாகிஸ்தானில் டான்ஸ் ஆடினாரா என்பதுதான் எங்கள் கேள்வி? இல்லை, மும்பையில் கசாப் தாக்குதல் நடத்திய ஓராண்டு நிறைவு விழாவை பாகிஸ்தானில் விருது விழா நடத்தி கொண்டாடுவார்களா? அதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று எந்த விமர்சகனாவது எழுதுவானா?

எத்தனை பெ‌ரிய யுத்தம் நடந்தாலும் கலைஞர்களு‌ம், விளையாட்டு வீரர்களும் கலாச்சார ப‌‌ரிவர்த்தனை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று எழுதுகிறார் ஞாநி. நிறவெறி காரணமாக பதக்கத்தை ஆற்றில் எறிந்த முகமது அலியும், அதே நிறவெறி காரணமாக விளையாட்டுத் துறையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்ட தென் ஆப்பி‌ரிக்காவும் இந்த அறிவு‌‌ஜீவியின் நினைவுகளிலிருந்து மறந்து போனது துரதிர்ஷ்டம்.

சிங்களவனுக்கும், தமிழனுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று மாய்ந்து போய் எழுதுகிறார் ஞாநி. இந்த நல்லுறவு கோஷம் ஒரு கொலைகாரனையும், பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்த ஒரு படுபாதக நிகழ்வையும் சாமர்த்தியமாக மறைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

போலீஸ்காரர் ஒருவனிடம் நீ பணத்தை திருடினாயா என்று கேட்பதற்கும் திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வியில் அவன் திருடன் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரண்டாவது கேள்வியில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதன் மூலம் குற்றம் சாற்றப்பட்டவன் நான் திருடனில்லை என்று மறுப்பதற்கான சாத்தியத்தை போலீஸ்காரர் நிராக‌ரித்துவிடுகிறார்.

ஞாநி போன்றவர்களின் சிங்கள, தமிழர் நல்லுறவு கோஷமும் இத்தகையதே. நல்லுறவைப் பற்றி கூக்குரல் இடுவதன் மூலம் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கெதிரான நீதி எங்கே என்று கேட்கும் குரல்களை தாண்டிச் செல்லப் பார்க்கிறார்கள். கொலைகளைப் பற்றியும், கொலைகாரனைப் பற்றியும் பேச முன்வராதவர்கள் கலை பற்றியும், நல்லுறவு பற்றியும் பேச தகுதியில்லாதவர்கள்.

ஞாநி தனது கட்டுரையில் ஈழத் தமிழர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கவில்லை, அதேநேரம் சிங்களவர்கள் உலகத்தரமான படங்களை இயக்கியிருக்கிறார்கள், கண் தானம் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார். சமீபத்தில் இலங்கை சென்று வந்த விமர்சகர் அ.மார்க்ஸ் இதே வார இதழில் எழுதியிருந்த கட்டுரையில், சோழர்களால் இடிக்கப்பட்ட புத்தவிகாரை பார்க்க முடியவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.

பிள்ளைக்கறி சாப்பிடுகிற ஒரு கொலைகாரனைப் பற்றி பேசும் போது, இல்லையில்லை அவன் நன்றாகப் பாடக் கூடியவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதையேதான் இந்த அறிவு‌‌ஜீவிகளும் செய்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியத‌ற்கு நாம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகள் சர்வதேச சமூகத்தின் முன்பாக நிறுத்தக் கூடிய சந்தர்ப்பம் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் பிள்ளைக்கறி தின்பவனின் குரல்வளத்தை மெச்சுவதும், உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அவனது கோயிலை இடித்தான் என்பதும் எத்தகைய சந்தர்ப்பவாதம்?

ஹிட்ல‌ரின் படையால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை பற்றி பல நூறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று ஸ்டீவன் ஸபீல்பெர்க் இயக்கிய சிண்ட்லர்ஸ் லிஸ்ட். இந்தப் படத்தில் யூதர்களின் படுகொலைகள் கச்சிதமாக சித்த‌ரிக்கப்பட்டிருந்தது. வரலாறை ஸ்பீல்பெர்க் மறு உருவாக்கம் செய்திருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெளிவந்த போது பல அறிவு‌‌ஜீவிகள் படத்தை எதிர்த்தனர்.

யூதர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படம் வெளிவரும் போது நிலைமை மாறிவிட்டது. யூதர்கள்தான் இன்று பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொடூரமான ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் யூதர்கள்பால் கருணை ஏற்படுத்தும் சிண்ட்லர்ஸ் லிஸ்டை ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். சுருக்கமாக ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு ஆன்ம பலம் தராதீர்கள்.

இந்த அறிவு வெளிச்சம் நமது அறிவு‌‌ஜீவிகளுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எதி‌ரியின் கருணையை நம் மீது பீய்ச்சியடிப்பதன் மூலம் நடந்த படுகொலைக்கான நீதியை இவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எதி‌ரியின் நல்ல அம்சங்களை பட்டியலிடுவதன் மூலம், பார் நான் எவ்வளவு நடுநிலையான விமர்சகன் என்று மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் மார்தட்ட கொடுக்கப்படும் விலை எத்தகையது என்பதை அறிவு‌‌ஜீவிகள் உணர வேண்டும்.

தமிழ் அமைப்புகளும், தமிழ் திரையுலகமும் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் பலன்களும் காலத்தின் கட்டாயம். அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் ஒவ்வொரு கலைஞனும், தமிழனும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழனுக்கு நேர்மையான அஞ்சலியை செலுத்தியிருக்கிறான். இந்த அஞ்சலிதான் ஒவ்வொரு தமிழனின் ஆகச் சிறந்த மனசாட்சியாக இருக்க முடியும்.

நன்றி - வெப்துனியா

5 comments:

ttpian said...

IPPADIUMA

Anonymous said...

Kumudam is degrading itself, by publishing his article.

Anand said...

மிகச்சிறந்த கட்டுரை.

Anonymous said...

நச்

பிரஷா said...

மிகச்சிறந்த கட்டுரை.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.