Tuesday 9 February 2010

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு

இலங்கை பாராளுமன்றம் செவ்வாயன்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் நாள் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் (19 - 26 ) இதற்கான வேட்பாளர் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட முடியாதபடி அவரது பிரஜாவுரிமை பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கூட்டணியில் போட்டியிடுபவர்களை தெரிவு செய்யுமுகமாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக தலைமையில் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியும் சகோதரர்களுமே இதில் செல்வாக்கு செலுத்துவார்கள் என்பது வெளிப்படையானது .

இதேவேளை ஏற்கனவே எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்கள் கட்சிதாவி அரசாங்கத்திடம் சென்றுவிட்டனர். அவர்கள் தற்போதுள்ள அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர். தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் இவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது அரசாங்கத்தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் எனத்தெரிகிறது.

மேலும் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச இத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். (ஏற்கனவே மகிந்தவின் குடும்பத்தைச்சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்தில் உள்ளனர் ). இந்த அரச குடும்பத்தின் அடுத்த வாரிசும் இத்தேர்தலில் இறங்குவதால் தேர்தல் களம் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேபோல ஐக்கிய தேசிய கட்சியிலும் ரணில் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு வேட்பாளர் தேர்வு சூடு பிடித்துள்ளது.

மகிந்த தரப்பினர் தேர்தலில் பெயருக்கு போட்டியிட்டாலும் தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தின் கையில் இருப்பதால் (அவரது மனைவியும் மகளுந்தான்) மகிந்த தரப்பின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார்கள் சிலர்.

இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவரது மனைவி செய்தியாளர்களை சந்தித்து தனது கணவர் கைது செய்யப்படவில்லை கடத்தப்பட்டுள்ளார், அவரை சந்திக்க விடவில்லை, அவருக்கு தினமும் கொடுக்க வேண்டிய மருந்துகளை வழங்கவிடவில்லை எனக்கூறி அழுதுள்ளார். ஆனால் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு புறம் ஊடகப்போரும் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை பொன்சேகாவை மீட்டுத்தரும்படி ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோதே இந்தக்கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன் பின்னர் செவ்வாயன்று நாடு திரும்பிய ரணில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தமது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திகேசு ஜெயகாந்தன்

2 comments:

Unknown said...

//மகிந்த தரப்பினர் தேர்தலில் பெயருக்கு போட்டியிட்டாலும் தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தின் கையில் இருப்பதால் (அவரது மனைவியும் மகளுந்தான்)//

மேலே நீங்கள் சொன்ன விஷயம் கொஞ்சம் புரியவில்லை, தயவு செய்து தெளிவு படுத்த முடியுமா? ஆனால் ஒன்று தெரியும் உங்கள் ஊகம் எப்போதும் பிழைத்ததில்லை என்பது.

ஜீவேந்திரன் said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர். இருந்தாலும் இத்தளத்தில் வெளியான 'தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளி வாய்க்கால் தொடர்ச்சியா? ' 'தேர்தலில் பெரும் மோசடி - சூடாகிறது களம்' ஆகிய கட்டுரைகளை வாசிக்கவும் விவரம் விளங்கும்.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.