சிங்கள செய்தித்தாளான திவயின மிக மோசமான இனவாத எழுத்துகளுக்கு பெயர்போனது.
இதனால் சிங்களவர் மத்தியில் இதற்கு பலத்த வரவேற்பு உண்டு. சிங்கள பௌத்த தேசியத்திற்கு மாற்று கருத்துடைய தமிழர்களை , ஏன் சிங்களவர்களைக்கூட தேசத்துரோகியாக சித்தரித்து அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற அர்த்தத்தில் திவயின எழுதும். அப்படி எழுதப்பட்டு பல சிங்கள செய்தியாளர்கள், புத்தி ஜீவிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பத்தி எழுத்தாளர் சிவராம் அப்படி கொல்லப்பட்ட ஒருவர்தான்.
தமிழர்களை சிங்களவர்களின் எதிரிகளாக சித்தரிப்பதில் மிகச்சிறந்த திறமையாளர்களாக திவயின செய்தியாளர்கள் உள்ளனர். கடந்தகாலங்களில் இராணுவத்தில் சிங்கள இளைஞர்களை சேர்ப்பதில் திவயின முக்கிய பங்காற்றியது . அதுபோல இலங்கை இராணுவத்தின் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் மறைத்து அவற்றை சிங்களவர்களின் வெற்றிகளாக சித்தரித்து மயிர் கூச்செறியும் கட்டுரைகளை வெளியிடுவதில் திவயின கைதேர்ந்தது. இதனால் சிங்கள அரசியல்வாதிகளும் திவயினவுக்கு சார்பாகவே நடந்து கொள்ளவது வழமை.
நீண்ட காலமாகவே தமிழர்கள் மீது வஞ்சினம் கொள்ளத்தக்க வகையில் திவயின எழுதி வருகிறது.
தமிழர்கள் மீது சிங்களவர்கள் பொறாமை கொள்ளத்தக்க விதத்தில், கோபம் கொள்ளத்தக்க விதத்தில் இதில் செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது.
'இலங்கையின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் உள்ளது'... 'சிங்களவர்களின் பணத்தை தமிழ் முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள்'. ..'சிங்களவர்களின் வேலை வாய்ப்புகளை தமிழர்கள் தட்டிப்பறிக்கிறார்கள்'... 'சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கிறார்கள்'... 'கொழும்பில் தமிழர்கள் பெருகி விட்டார்கள்'... 'சிங்கள மாணவர்களின் வாய்ப்புகள் தமிழ் மாணவர்களால் பறி போகிறது'..'கொழும்பு புலிகளின் கோட்டையாகி விட்டது'.. இது போன்ற தலைப்புகளில் மோசமான புனை கதைகளை கட்டுரைகளாக வெளியிடுவதில் திவயின செய்தியாளர்கள் மன்னர்கள். அதே போல ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில்களின் போது சிங்கள இனவாதத்தை மதவாதத்தை யார் கொண்டு செல்லகூடியவர்களோ அவர்களுக்கே திவயின தனது ஆதரவை வழங்கும்.
இந்த அடிப்படையிலேயே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை திவயின ஆதரித்து நின்றது. மகிந்த வெற்றி பெற வேண்டுமானால் மீண்டும் இனவாதமும் தமிழருக்கு எதிரான குரோதமும் தூண்டி விடப்படவேண்டிய அவசியத்தை தெரிந்து கொண்ட திவயின செவ்வனே தனது பணியை ஆற்றியது. ஏனெனில் புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஓரளவு அமைதியடைந்து காணப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை, மதவாதத்தை தூண்டி விட வேண்டியது அவசியமாக இருந்தது எனலாம்.
புலிகளிகளின் சர்வதேச கட்டமைப்பு இன்னமும் இருக்கின்றது எனக்கூறி அதனை உடைத்தெறிய மகிந்தவின் ஆட்சியே தேவையானது என தொடர்ந்து எழுதிய திவயின சரத்பொன்சேகா அதிபரானால் மீண்டும் புலிகளுக்கு உயிர் வழங்கி விடுவார் என சிங்கள மக்களை பயமுறுத்தியது .சரத் பொன்சேகாவை போர் வெற்றியின் போது மாவீரனாக புகழாரம் சூட்டிய இதே பத்திரிகை, தேர்தல் காலத்தில் இவரை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் கைக்கூலி என விளம்பரப்படுத்தியது. இந்த மேற்குலக நாடுகளின் சதிவலையில் சிங்களவர் இரையாக வேண்டுமா? என கேள்வியும் எழுப்பியது.
மனோகணேசன், ஹக்கீம் போன்றவர்களோடு பொன்சேகா கூட்டு சேர்ந்தபோது அதனை சிங்கள மக்களுக்கு எதிரான திட்டமாக கடுமையாக விமர்சித்து எழுதித்தள்ளியது. இந்த நிலையில்தான் சரத்பொன்சேகா தமிழ் கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்தார். இந்த அருமையான வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்ட திவயின வெளுத்து வாங்கத்தொடங்கியது.
தமிழர்களுக்கு ஈழத்தை வழங்கும் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும், அது தொடர்பில் சரத் பொன்சேகா தமிழ் கூட்டமைப்புடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பயத்தை விதைத்தது. தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளாக வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கு சுயாட்சி போன்ற விடயங்களை கூறி கடுமையாக விமர்சனம் செய்தது. இதற்கு பொன்சேகா உடன்பட்டு விட்டார் , இது தனி நாடு கொடுப்பதற்கு சமனாகும் எனத்தெரிவித்தது . உடனடித்தேவையான தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் போன்ற விடயங்களையும் கூட பயங்கரவாத கோரிக்கையாகவே இது சித்தரித்தது. ஏற்கனவே தமிழ் கூட்டமைப்பு புலிகளின் மறுவடிவம் என சிங்கள மக்கள் மத்தியில் வலுவான கருத்து ஊன்றப்பட்டு இருந்ததால், திவயினவின் பிரசாரம் மிக நன்றாகவே எடுபட்டது.
இவ்வாறு இன மத ஒற்றுமைக்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக எழுதி வரும் திவயினவின் செயற்பாடானது இலங்கை மக்களது நிம்மதியான வாழ்வுக்கும் எதிர்கால சமாதானத்திற்கும் மிகப்பெரும் தடையாகவே உள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல சிங்கள மக்களது மனங்களில் விதைக்கப்படுள்ள இனவாதத்தை ஆறவிடாது தொடர்ந்தும் எரியச்செய்வதில் திவயின முக்கிய காரணியாக உள்ளது. 83 ஆடிக்கலவரம் போன்ற கடந்த கால இனவன்முறைகளுக்கு காரணமாக இருந்த திவயின இனிவரும் காலங்களிலும் தனது பணியை செவ்வனே செய்யவே போகிறது. அது போல கடந்த காலங்களைப்போலவே எதிர்காலத்திலும் இதன் செயற்பாடானது இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற, மக்களிடையே ஒற்றுமை தோன்ற என்றுமே பாரிய தடையாக இருக்கப்போகிறது.
(இந்த தளத்தில் எழுதப்படுகிற விடயங்கள் தொடர்பில் உங்களது கருத்து பல சமயங்களில் இதை ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம். அது எவ்வாறு இருந்தாலும் உங்களது கருத்து மிக முக்கியமானதும் பெறுமதியானதும் ஆகும். அதன் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் பெறக்கூடியதாக இருக்கும். எனவே தயவு செய்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள பின்னூட்ட பெட்டியில் பதிந்து விட்டு செல்லுங்கள். அப்படியே தயவுசெய்து வாக்களிக்கவும் மறந்து விடாதீர்கள்.உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும் ).
--- கா.ஜெயகாந்தன் ----
http://jeevendran.blogspot.com/
2 comments:
முதலில் உங்கள் வலைப் பூவின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இலங்கையின் ஊடகத்துறையைப் பொறுத்தளவில் வலுவான பக்க சார்பற்ற ஓர் ஊடகம் இல்லையென்பது வருத்தமான ஓர் விடயமாகும்.ஒவ்வொரு ஊடகங்கள் பக்கச்சார்பான கருத்துக்கள் வெளியிடுவதால் மக்கள் ஒரு பக்கத்தில் சார்ந்து நச்சுக் கருத்துக்களை உள்வாங்கி மற்ற இனங்களுக்ககிடையில் வஞ்சம் தீர்க்க முயற்சிக்கின்றனர். இந்நிலை மாறும் வரை ஒரு பக்கத்தில் சார்ந்து இருக்கும் ஊடகங்களின் கை ஓங்கி இருக்கும்.
முதலில் உங்கள் வலைப் பூவின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இலங்கையின் ஊடகத்துறையைப் பொறுத்தளவில் வலுவான பக்க சார்பற்ற ஓர் ஊடகம் இல்லையென்பது வருத்தமான ஓர் விடயமாகும்.ஒவ்வொரு ஊடகங்கள் பக்கச்சார்பான கருத்துக்கள் வெளியிடுவதால் மக்கள் ஒரு பக்கத்தில் சார்ந்து நச்சுக் கருத்துக்களை உள்வாங்கி மற்ற இனங்களுக்ககிடையில் வஞ்சம் தீர்க்க முயற்சிக்கின்றனர். இந்நிலை மாறும் வரை ஒரு பக்கத்தில் சார்ந்து இருக்கும் ஊடகங்களின் கை ஓங்கி இருக்கும்.
Post a Comment