Saturday, 13 March 2010

சந்தி சிரிக்கும் தமிழர் அரசியல் - தமிழ் ஈழம் 20/20

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடம்பெற்று வருகின்ற கூத்துகள் மக்களிடையே ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் தேசியம் தமிழர் விடுதலை என்று வாய்கிழிய பேசியவர்கள் இன்று நாடாளுமன்ற பதவிகளுக்காக வெட்கம் மானம் இழந்து அடிதடியில் இறங்கியுள்ளனர்.

காலம் காலமாக இவ்வாறான பிழைப்புவாத அரசியலையே தமிழர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கேவலமான அரசியல் காரணமாகவே தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சிங்கள அரசியல்வாதிகள் தமிழரது சுயநல கேவலங்கெட்ட அரசியலை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தினார்கள். தமிழ் நண்டுகள் ஒரு போதும் இலக்கை அடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அது கடந்த காலம் போகட்டும் என்று ஒதுக்கி விட்டாலும் இப்போது என்ன நடக்கிறது?

பல்வேறு வழிகளிலும் பெரும் இழப்புகளை சந்தித்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் பெரு மூச்சு விட்டார்கள். இனியாவது தமது தலைவர்கள் ஒற்றுமையாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பாடுபடுவார்கள் என நம்பினார்கள்.

நந்தவனத்திலோர் ஆண்டியைப்போல விடுதலைப்பானையை முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் போட்டுடைத்த பின்னர் தமிழர்களுக்கு இருந்த ஒரு நம்பிக்கை வெளிச்சமாக தமிழ் கூட்டமைப்பே காணப்பட்டது. புலிகள் அரசியல் தெரியாதவர்கள் துப்பாக்கியை மட்டுமே நம்பியவர்கள், தமிழ் கூட்டமைப்பு அப்படியல்ல. அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் எனவே அரசியல் ரீதியாக விடுதலை வென்று எடுக்கப்படும் என பல ஆய்வாளர்கள் வழமை போல தமது பத்திகளை நிரப்பினார்கள். வழமை போல மக்களும் நம்பினார்கள்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் பொய்த்து போய்விட்டது.

முள்ளிவாய்க்காலில் அங்குசம் காணாமல் போய்விட்டதால் தமிழ் கூட்டமைப்பு யானை தறிகெட்டு ஓடத்தொடங்கி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி 8 அணிகளாக பிரிந்து IPL 20/20 போட்டியில் ஆடுவதைப்போல இப்போது தமிழ் கூட்டமைப்பு நான்கு துண்டுகளாக பிரிந்து தேர்தல் போட்டியில் ஆடுகிறது.

அணி 1. சம்பந்தர் மாவை சுரேஷ் ஆகியோரின் கூட்டமைப்பு.

அணி 2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தமிழ் காங்கிரஸ்

அணி3. சிவாஜிலிங்கம்,சிறீகாந்தா ஆகியோரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

அணி 4. மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ள சிவநாதன் கிசோர் , கனகரத்தினம், தங்கேஸ்வரி ஆகியோரின் அணி

இப்போது அணிகளின் விவரங்களைப்பார்ப்போம்.

சிவநாதன் கிசோர் புலிகளின் தோல்வியுடன் மகிந்தவை போய்ப்பார்த்து சரணடைந்தார். ஆசையோடு மகிந்தவை கட்டித்தழுவி தனது பிழைப்பை உறுதிப்படுத்தினார்.

தமிழ் மக்களது வாக்குகளால் பதவியை பெற்று தமிழரை கொன்றவனின் கால்களை நக்கியதால் அவர் மைதானத்திற்கு வராமலேயே ஆட்டமிழந்தார். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தராமையால் கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றோரும் மகிந்தவிடம் சரணடைய நேர்ந்தது.

அடுத்தது புலம்பெயர்ந்த தமிழர்களால் வீணாக போனவர்தான் சிவாஜிலிங்கம். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் வழமைபோல வெளிநாடுகளில் வசதியாக வாழும் அரசியல் சனிகள் மன்னிக்கவும் ஞானிகள் கொதித்து எழுந்தார்கள். மகிந்தவும் சிங்களவன்தான் சரத்தும் சிங்களவன்தான். ஒருவன் கொல்லச்சொன்னவன், மற்றவன் கொன்றவன். எதற்காக அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்? ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எம்மிடம் ஒரு தமிழன் இல்லையா? என்று வீராவேசமாக கர்ஜித்தார்கள்.

இதைக்கேட்ட சிவாஜிலிங்கம் முந்திரிக்கொட்டை போல முன்வந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒதுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அநியாயமாக ஆட்டமிழப்பு செய்யப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படி உசுப்பேத்தியவர்கள் கூட தேர்தலின் போது அவரைக்கண்டு கொள்ளவில்லை.

தமிழ் கூட்டமைப்பில் சம்பந்தர் மாவை சுரேஷ் தரப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் தரப்பும் ஒரு அணி போல தோன்றினாலும் உள்ளே பிரச்சனைகள் ஆரம்பித்திருந்தன. இந்த நிலையில்தான் தமிழ் கூட்டமைப்பில் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. இதை காரணமாக கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகி தாம் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இப்போது முக்கியமான பலப்பரிட்சை இந்த இரு அணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு முழுவதிலும் அவர்களுக்கு செல்வாக்கு உண்டு. தமிழ் காங்கிரசிற்கு குடாநாட்டில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் ஞானிகளும் கூட்டமைப்புக்கு சார்பாகவும் தமிழ் காங்கிரசுக்கு ஆதரவாகவும் என பிரிந்து நிற்கிறார்கள்.

இங்கே ஒரு உண்மை வெளிப்படையானது. தமிழர்கள் பலமாக இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். தமிழர்கள் ஒரு அணியாக பலமாக இருந்தால் அது எப்போதுமே ஆளும் சிங்கள தரப்பிற்கு நெருக்கடியாகவே அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதிலும் நரி மூளை படைத்த மகிந்த பிரித்தாளும் தந்திரத்தில் தேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை பிளந்தவர். ஒற்றுமைக்கும் கட்டுக்கோப்புக்கும் பெயர்போன ஜேவிபி கட்சியை உடைத்தவர், முஸ்லிம் காங்கிரசை சிதைத்தவர்.

எனவே தமிழர்கள் ஒரு அணியாக பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர விடுவாரா என்ன. எனவேதான் அவர் பிள்ளையான் முதல் சுயேட்சைகள் வரை களத்தில் இறக்கியிருக்கிறார். இப்படியான ஒரு நேரத்தில்தான் கூட்டமைப்பும் காங்கிரசும் பலிக்கடாவாக தாமே போய் மகிந்தவிடம் கழுத்தை நீட்டியிருக்கிறார்கள்.

சரியோ பிழையோ விடுதலைப்புலிகள் தமிழரது தலைமைத்துவமாக கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை எதோ ஒரு நம்பிக்கையில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.இப்போது தமிழர்களுக்கென ஒரு உறுதியான தலைமைத்துவம் இல்லாமல் போயுள்ளமை வெளிப்படையானது. இது தமிழருக்கு மிகவும் ஆபத்தான சூழலாகும்.

இப்படியான ஒரு தருணத்தில் பிரிந்து மோதிக்கொள்ளும் தமிழ் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் தாமே தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் என்கிறார்கள்.தமிழ் காங்கிரசானது சம்பந்தர் தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது.

'சம்பந்தர், மாவை, சுரேஷ் தரப்பு இந்தியாவின் தாளத்திற்கு ஆடுகின்றனர். அடிக்கடி இந்தியாவிற்கு சென்று ஆலோசனை பெறுகின்றனர். இந்தியாவே அவர்களை இயக்குகிறது' என்பது ஒரு குற்றச்சாட்டு . இதே குற்றச்சாட்டையே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

'தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது.சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது' என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு தமிழ் கூட்டமைப்பு,

'தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்தன' என பதில் சொல்கிறது.

அடுத்ததாக தமிழ் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு

'2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர்'

'அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர். மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் அடித்துக் கூறிவிட்டனர்.தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பானது,

'எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம்'

'இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். ஆனால் இன்று ''மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம்'' என்று கூறுகிறார். ஓர் வரைபு உருவாக்கப்பட்டால்தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத்தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது.

கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா?தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை' என்கிறது.

தமிழ் காங்கிரசின் அடுத்த குற்றச்சாட்டு

'விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. இது விடுதலைப்புலிகளின் சார்பு அணியினரை அகற்றும் மறைமுகமான நடவடிக்கை' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பு

'பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். மே 2009 ற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் விடுப்பு எடுத்தால் பதவி பறி போகும் என்ற நிலையில் பதவிகளை காப்பாற்ற வேண்டும் என பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்புகிறது.

இதே வேளை தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாதுரை விநாயகமூர்த்தி கூறும்போது, 'செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி கூட்டமைப்பைப் சிதைப்பது உகந்தது அல்ல. அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது?

இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே! அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது. கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, வரலாற்றுத் தவறு இழைக்கத் தாம் விரும்பவில்லை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்ட எல்லா விடயங்களையும் வழங்குவதற்குத் தமிழ்க் கூட்டமைப்புத் தயாராக இருக்கும்போது அதிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்தும் காரணம் ஏதும் அகப்படவில்லை எனவே வெளியேறும் முடிவை ஏற்றுக்கொள்ளவேயில்லை' என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள்... ..பதில்கள்... ..எதிர் குற்றச்சாட்டுகள்... ..அவதூறுகள்.. ..என IPL 20/20 போட்டிகளை போல தமிழ் ஈழ போட்டிகள் மிக விறு விறுப்பாக இடம்பெற்று வருகிறது.

இந்த சுற்றுப்போட்டியை மகிந்த டக்லஸ் கருணா பிள்ளையான் சித்தார்த்தன் குழுவினர் மிகவும் அனுபவித்து உற்சாகமூட்டி பார்த்து வருகிறார்கள். ஒரு வகையில் இந்த போட்டியை அவர்களே ஏற்பாடு செய்திருப்பதால் போட்டியின் இலாபங்களை அவர்களே அனுபவிக்க போகிறார்கள்.

ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இராணுவ காவலில் உள்ளமை பற்றியோ .. 20 000 இற்கும் அதிகமான இளையவர்கள் புலிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியோ.......நாளாந்தம் சிறுக சிறுக சத்தமின்றி கொன்று புதைக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ...இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மீள குடியேற சென்ற மக்களுக்கு எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, தொழில் தொடங்க எந்த உதவியும் இல்லை. இவை குறித்து எமது தமிழர்களின் பிரதிநிதிகளாக கூறிக்கொள்கின்ற இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு எப்படியாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் போதும்.

இவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதனூடாக தமிழ் மக்களது எல்லா பிரச்சனைகளும் தீரப்போகிறது.

தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது...

உரிமையா? வெங்காயம்....

விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க.....

வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜீவேந்திரன்

Jeevendran

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

9 comments:

Anonymous said...

Nallathu saar... Thanks for accepting that tigers knew politics also

ஜோதிஜி said...

சிறப்பு

Paheerathan said...

வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

உண்மைதான் ஜீவேந்திரன்.

டக்ளஸ் வென்றாலும் பரவாயில்லை கூட்டமைப்பு வெல்லக்கூடாது என்கிறது கஜேந்திரன் ஆதரவுக்குழு-செய்தி, வாழ்க தமிழ் தேசியம்

வதீஸ் said...

நிஜத்தினை அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். தமிழ் மக்களுடைய ஏக தலைவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் உண்மையிலே என்ன சொல்லுவதென்று தெரியவில்லை

kanthan said...

தலைப்பு சூப்பர், படம் கலக்கல்,
கட்டுரை சூப்பரோ, சூப்பர்; தமிழர்களின் தற்கால அரசியல் நிலவரத்தினை அப்படியே படம் பிடித்துக்காட்டி இருக்கின்றீர்கள் ஜீவேந்திரன். தமிழர்கள் தற்கால அரசியலை விளங்கி வாக்களிக்கா விட்டால், பாவம்தான்.

// தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது...
உரிமையா? வெங்காயம்....

விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க..... //

உண்மையாகவே, மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இவை, ஒரு தமிழனாக கொஞ்சம் கவலையோடு......

ugantheepan said...

தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சோரம் போகக்கூடியவர்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் மூலம் நாம் கற்ற பாடம்.
சிங்களவர்களின் திட்டமிடப்பட்ட ஆப்புக்கு முந்திக்கொண்டு நம்மவர்கள் மாட்டிக்கொள்வதை இப்போது காணக்கூடியதாகவிருக்கின்றது. இது தமிழரின் அரசியல் எதிர்காலம் அழிக்கப்படுவதை உணர்த்துக்கின்றது.

இந்த இடத்தில்தான் தேசிய தலைவரின் முக்கியத்துவத்தின் இடைவெளியை நாம் பார்க்கின்றோம்.
ஜீவேந்திரன் அண்ணா, உங்களுடைய ஆய்வு கட்டுரை நீண்டதாக இருந்தாலும் இன்றைய காலத்துக்கு மிகவும் முக்கியத்துவமிக்க ஆய்வு கட்டுரை, இலங்கை தமிழ் அரசியலை வேண்டிநிற்பவர்களுக்கு தெளிவை கொடுக்ககூடியதகவிருப்பதால் எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மடல்.:
--கஜேந்திரன் குழுவினரின் அதிகரித்துவரும் அட்டகாசங்கள்--
கஜேந்திரன் குழுவினரின் அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்ஈழம் பெற்றுத்தருவோம் என பத்திரிகைகளில் அறிக்கை விடும் கஜேந்திரன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசாங்க படைகளுடனும் டக்ளஸ் குழுவுடனும் இணைந்து செய்து வரும் அட்டகாசங்களால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இராணுவ பாதுகாப்புடனும் டக்ளசின் ஆசிர்வாதத்துடனும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரன் குழுவினர் டக்ளஸ் வெல்லுவதை பற்றி பரவாயில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றனர்.

வெள்ளைவானில் வரும் கஜேந்திரன் குழுவினர் நள்ளிரவு வேளையில் கூட சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கூட்டமைப்பு துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ள இடங்களில் அதை கிழித்து விட்டு தங்களின் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.

இலங்கை அரசின் பூரண ஆதரவுடனேயே கஜேந்திரன் குழுவினர் தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் மீது இலங்கை அரசாங்கம் முன்னர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றதுடன் பல கோடி ரூபாய்களை கஜேந்திரன் குழுவுக்கு மகிந்த ராசபக்ச அரசு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

கஜேந்திரனும் பத்மினியும் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மகிந்த, கோதபாயா, டக்ளஸ் ஆகியோரை சந்தித்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

கூட்டமைப்பை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்றும் உங்களுக்கு எதிராக செயற்படமாட்டோம் என கஜேந்திரன் டக்ளசுக்கு உறுதி கூறியதாகவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.

கஜேந்திரன் குழுவுக்கு டக்ளசுடனும், மகிந்த ராசபக்ச அரசுடனும் இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது.

இதை ஊடகங்களில் வெளியிடுவதால் எமக்கு அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் வரலாம் என்பதுடன் சட்டபிரச்சினை காரணமாகவும் இதை தற்போது வெளியிடாமல் இருக்கிறோம்.

இதுபற்றி எம்முடன் தொடர்பு கொண்டால் முழுவிபரங்களையும் நாங்கள் தருவோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து சி.பரம்சோதி
sothy1970@gmail.com

jeevendran said...

-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்-

நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது.


இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம்.

சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும்.

நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்!

jeevendran said...

-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்- continue
பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள்.


ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும்.

ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது.

ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.

எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன.
இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்!

தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்-
paruththiyan@gmail.com

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.