Monday 18 January 2010

யார்தான் உண்மையான துரோகி???

தமிழர் அரசியலில் துரோகி என்ற வார்த்தை மிக பரவலான பிரயோகம் கொண்டதாக மாறிவிட்டது. வெகு சாதாரணமாக தமது அரசியல் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை மற்றவர் துரோகி பட்டமளிப்பது சகஜமாகி விட்டது. இதில் எந்த பாரபட்சமும் இல்லை. இவர் அவரை துரோகி என்பார், அவர் இவரை துரோகி என்பார்.

புலிகள் இருக்கும் வரை மட்டுப்பட்டிருந்த துரோகி பட்டங்கள் (இதை அவர்களே பெரும்பாலும் வழங்கி வந்ததால்) இப்போது மிக சாதாரணமாக எல்லோராலும் எல்லோருக்கும் மிக இலகுவாக இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா போன்றவர்கள் புலிகளது காலத்திலேயே துரோக பட்டங்களை பெற்றுக்கொண்டதால் அவற்றைப்பற்றி பேசுவதில் பலனில்லை. ஆனால் மிகவும் மதிக்கப்பட்ட, தலைவருக்கு மிக நெருக்கமான நீண்ட கால நண்பரும் விடுதைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தூணாகவும் விளங்கிய கே.பி போரின் பின்னர் திடிரென துரோகியாகி விட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக கூறியமையே இந்த துரோகி பட்டத்திற்கு காரணம் என நீங்கள் இன்னும் நம்பினால் உங்களை அந்த ஆண்டவனாலும்(கடவுள் இல்லை என்றாலும் இந்த மாதிரி இடங்களில் தேவைப்படுகிறார்) காப்பாற்ற முடியாது.

கே.பிக்கு துரோகி பட்டத்தையும் கொடுத்து அவரை சிறிலங்கா அரசிடம் மாட்டியும் விட்டது நெடியவன் குழுவே என்பது மிக பரவலானவர்களின் நம்பிக்கை. கேபியை காட்டி கொடுத்ததால் இப்போது நெடியவனும் துரோகியாகி விட்டார். மறுபுறம் கேபிக்கு ஆதரவு தெரிவித்த உருத்திரகுமார் போன்றோரும் நெடியவன் போன்ற குழுவினரால் துரோகிகளாகவே சொல்லப்படுகின்றனர்.

இன்னொருபுறம் புலிகள் சில தவறான முடிவுகளை எடுத்தமையே தோல்விக்கு காரணமாகி விட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொன்ன ஒரு வரிக்காக அவர் துரோகி என்ற பட்டங்கள் உலகெங்கும் பரந்துள்ள பல தமிழ் நெஞ்சங்களால் (அப்படித்தான் யாராவது ஒருவர் அவருக்கு பிடித்தமான இணையத்தளத்தில் எழுதிவிட்டு சொல்லிக்கொள்வது வழமை) உடனடியாக வழங்கப்பட்டது.

அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவை ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் மக்களை கொன்ற சரத்பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கலாம். மகிந்த மீண்டும் வந்தால் இலங்கை மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும். போர் குற்றம் செய்த அரசு தலைவர் ஆள்வதால் தமிழ் மக்கள் மீது சர்வதேச அனுதாபம் இருக்கும் என்றது ஒருதரப்பு. உடனே அவர்கள் மறு தரப்பால் துரோகிகளாக வசை பாடப்பட்டார்கள். தமிழனை கொன்றவனை விட கொல்ல சொன்னவனே எமது எதிரி. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? என்பது இவர்களின் வாதம்.

எனவே இந்த தரப்பு நாங்கள் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கினால் மகிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தலாம். தமிழ் மக்களின் பாரிய அழிவுக்கு காரணமான மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்றார்கள். உடனே மகிந்தவை ஆதரித்த தரப்பு இவர்களை துரோகி என்றார்கள். அதற்கு சொன்ன காரணங்கள், சரத் பொன்சேகா ஒரு இனவாதி. ரணிலுடனான பேச்சு முறிய காரணமே சரத் பொன்சேகாதான். யாழ்குடாநாட்டின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை மாற்றி அமைக்கவோ மக்களை குடியமர்த்தவோ சரத் பொன்சேகா சம்மதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை கூட உதாசீனம் செய்யும் அளவுக்கு அவர் சிங்கள இனவாதியாக இருந்தார் என்பன. எப்படியோ இந்த இருதரப்பும் துரோகிகள் ஆகிவிட்டன. சரி அதோடு முடிந்ததா துரோக பட்டியல்....இல்லை.

இன்னுமொருதரப்பு வீராவேசமாக சொன்னது...எதற்கு நாம் மாறி மாறி இந்த சிங்கள அடக்குமுறையாளர்களுக்கு சாமரம் வீச வேண்டும். ஏன் எங்களில் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக்கூட எமக்கு தகுதி இல்லையா? எம்மிடம் ஒற்றுமை இல்லையா? இந்த தமிழ் கூட்டமைப்பு ஒரு துரோக கும்பல். அவர்களுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாதா என்றார்கள். உடனே இது தமிழர்களின் வாக்கை பிரித்து மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் துரோகிகளின் திட்டம் என்ற கூச்சல் எழுந்தது. இதன் மூலம் சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்கப்படும் என்றார்கள். இப்போது சிவாஜிலிங்கத்திற்கு இந்த குற்றச்சாட்டையே சுமத்துகிறார்கள். அது போக இது இந்திய றோ அமைப்பினுடைய திட்டம். இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருந்த சிவாஜி லிங்கம் றோவுக்கு பலியாகி விட்டார். புலிகளது தோல்விக்கு பின்பு மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்த துரோகி ஸ்ரீகாந்தாவுடன் சென்றுதான் கட்டுப்பணத்தை செலுத்தினார். எனவே அவர் துரோகி. (ஏற்கனவே புலிகளது தோல்விக்கு பின்பு மகிந்தவை போய் சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிளவினை ஏற்படுத்த முனைந்ததால் கிஷோர் துரோகியாகி விட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்). எனவே தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் மறைமுகமாக மகிந்தவை ஆதரிக்கும் துரோகிகள் ஆனார்கள்.

இது தவிர இங்கு நான் குறிப்பிட மறந்த இன்னும் எத்தனையோ துரோகிகள் இருக்கிறார்கள்.

சரி இப்போது சொல்லுங்கள் யார்தான் உண்மையான துரோகி???

- ஜீவேந்திரன்

4 comments:

kanthan said...

நீங்களும் நாளை துரோகி பட்டம் பெறலாம். அது இருக்க, இப்படியே போனால் மக்களை விட துரோகிகள் அதிகமாகி விடுவார்களோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.

inaiyaveli said...

பல தமிழ் நியூஸ் வெப் தளங்கள் இன்று ஒன்றை எழுதுகின்றன. ஒருவரை குற்றம் சாட்டுகின்றன. ஒருவரை துரோகி என்கின்றன. அடுத்த நாள் வேறு ஒருவரை குற்றம் சாட்டுகின்றன வேறு ஒருவரை துரோகி என்கின்றன. முன்பு தாங்கள் எழுதியதை மறந்து விட்டு இன்னொன்றை சொல்கின்றன. யாரும் அதை கேட்பதில்லை (கேட்டாலும் பதில் வருமா என்ன?)

Vijay Anand Raju said...

Machan..truly brilliant...beautiful and neutral articulation..good work! continue.

vijay

ஜீவேந்திரன் said...

பின்னூட்டம் போட்ட நண்பர்களுக்கும், தமிலிஷில் வாக்களித்த நண்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.