Tuesday, 18 May 2010

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்?

மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று.

ஓரிரண்டு தசாப்த காலங்களாக உலகின் பார்வை தென்னாசியா மீது திருப்பி வைத்திருந்தவர்கள் புலிகள் என்பதையும், அதன் தலைவர் பிரபாகரன் ஒரு ஆளுமை நிறைந்த மனிதராக அப்பொழுதில் பார்க்கப்பட்டார் என்பதும் எதிரிகள் கூட ஏற்கிற ஒரு யதார்த்தம்.

அவ்வாறான நிலையிலிருந்த விடுதலைப்புலிகள் இன்று வட-கிழக்குப் பிரதேசங்களில் முற்றாக இல்லை என்பதோடு, அடுத்த தலைமைக்கான ஒருவரை விட்டுவைக்காது முற்றாக எல்லாருமே அழிந்து போனார்கள் என்பது ஏற்பதற்கு சற்றுக்கடினமான உண்மை.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துத் தளபதிகளுமே ஏதோ ஒரு நம்பிக்கையின் பிரகாரமே முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றார்கள். உயிரைக் கொடுத்துப்போராடினார்கள். ஆனால் அவர்களின் மரணத்தில் மகிழ்பவர்களாய் அவர்களிற்கு இறுதிவரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த புலிகள் இன்று மாறிவிட்டார்கள்.

ஏனென்றால் பிரபாகரனும் அவரது படைக்கட்டுமானமும் நினைவு கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்களின் வாரிசுகளாக அறிவித்து ஐரோப்பாவில் பதுங்கியிருப்பவகேளே மறைக்கிற ஒரு கொடிய நேரப் பதிவு இது. தங்களது தலைவன் என்றல்ல ஒரு சிறந்த போராளியென்றாவது அல்லது கொண்ட கொள்கைக்காக உயிர் மாண்ட ஒரு மனிதன் என்ற மரியாதைக்காவது கௌரவிக்கப்பட வேண்டிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்த தொண்டர்களாலேயே பிரபாகரனின் மரணமும், பிரபாகரனியமும் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் அற்ற ஒரு குழுமமாக எதிராளிகளால் வர்ணிக்கப்பட்ட புலிகள் அவ்வாறானவர்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்த பல தமிழர்களையும் மாற வைக்கிற அளவிற்கு இவர்களது இப்போதைய உள்ளக மோதல்கள் வியாபித்திருக்கின்றன.

எந்த ஒரு போரிலும் வன்மமாகப் போராடும் விடுதலைப்புலிகள் இந்த ஈழப்போர் நான்கில் செய்மதித் தொலைபேசியூடாகக் கதைத்தபடி, தங்களின் புலம்பெயர்ந்த தொடர்புகளின் அறிவுறுத்தல்களின் படி போராடினார்கள். அதுவே அவர்களின் முடிவுரையெழுதலாகவும் அமைந்து விட்டது.

இந்தத் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் மேற்குலக நாடுகளின் பேரிலான கற்பனாவாதத்தை விடுதலைப்புலிகள் மத்தியில் விதைத்து விட்டதோடு தங்களது புலம்பெயர்ந்த தொடர்புகள் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் என்ற எண்ணத்தையும் வலுவாக களத்திலிருந்த புலிகளிற்கு ஏற்படுத்தியிருந்தது.

லண்டனில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். ஜேர்மனியில் 50 ஆயிரம் பேர் திரண்டனர், ரொறன்டோவில் 1 லட்சத்து ஐம்பதினாயிரம் திரண்டனர். லண்டனில் மெற்றோ போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. ஜேர்மனியில் சுரங்கப்பாதைப் போக்குவரத்துத் தடைப்பட்டது. ரொறன்ரோவில் ஹைவே மறிக்கப்பட்டது போன்ற கூப்பாடுகள் வன்னியில் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் உண்மை யாதெனில் மேற்குலக நாடுகளின் புலிகளின் வழிநடத்துனர்களின் செயற்பாடுகள் அந்த அரசாங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடைய தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இருந்த ஆதரவைக் குறைத்து அவர்களை தமிழர் விவகாரங்களிலிருந்து தனிமைப்பட வைத்தது.

இதற்கும் மேலாக ஊடக ஆதிக்கத்தைக் கொண்டிருந்த புலிகள் உண்மைகளை மறைத்து மாயை நிலையிலே புலம்பெயர்ந்த மக்களை வைத்திருந்தார். ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையிலும், பிரதேச கட்டுப்பாடு முறியடிக்கப்பட்ட நிலையிலும் வன்னித்தலைமை சொன்ன செய்திகளை புலம்பெயர் புலிகள் மக்களிடம் நேர்மையாகச் சொல்லவில்லை. முடிவு கடலை நோக்கிக் கண்ணெறிந்தபடியே செய்மதித் தொலைதொடர்பில் புலம்பெயர்ந்த தமது தொடர்புகளுடன் உரையாடிய படியே அங்கிருந்தவர்கள் புலிகளின் தலைமை களமாடி மடிந்தார்கள்.

களத்தின் உண்மை நிலையை புலத்திற்கு உரைக்காத புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளார்கள் களத்தையும் புலத்தையும் மாயையில் வைத்திருந்ததே இந்தப் போராட்டத்தின் இழப்பிற்கான முழுமுதற்காரணம். புலிகளின் பலம் தொடர்பான அதீத கற்பனையை விதைத்து விட்ட இவர்கள், 15,000 புலிகள் தாக்குதலிற்காக காட்டிற்குள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை மே மாதம் பரப்பி விட்டு விடுதலைப்புலிகள் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பொன்றை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.

இதனால் அவர்கள் பெற்ற நன்மை எதுவெனில் இறுதிநேரத்தில் கூட சேர்க்கப்பட்ட பெருமளவு நிதியேயாகும். இதுவே இன்றைக்கும் பிரபாகரன் இருக்கிறார். காட்டிற்குள் எங்கள் படையணிகள் இருக்கின்றன என்ற பொய்களை புலம்பெயர்ந்த புலிகள் பரப்புவதற்குக் காரணமாகும்.

காட்டிற்குள் ஒரு புலிகூட இல்லை. இருந்தவர்களையும் இவர்கள் அரசாங்கத்தின் கூலிகள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறி அந்நியப்படுத்தி விட்டார்கள். சிறீலங்கா கூறுவது போல ஒரு புலிகூட அங்கே இல்லை. எனவே இவர்கள் இனிப் போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்குவதற்கான தகுதியை ஒரு சிறு அளவு கூட கொண்டிராத ஒரு கூட்டமாக மாறி விட்டார்கள்.

கவனிக்க ஊடகதர்மம் பற்ற இரவுபகலாக அழுது வடிக்கும் தமிழ்நெற், பதிவு, சங்கதி போன்ற இணையத்தளங்கள் இன்றுவரை மக்களிற்கு உண்மையை மறைக்கும் தளங்களாகவே செயற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் முழு நிதிச் செயற்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிற தமிழ்நெற் இணையத்தளத்தின் பொறுப்பாளர் நோர்வே ஜெயா புலிகளின் சம்பளப்பட்டியலிலுள்ள ஒரு ஊழியர் என்பதும், தொடர்ந்து சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதுமே பிரபாகரனின் மரணத்தை இன்றுவரை அவர் மறைப்பதற்குக் காரணமாகும்.

உண்மையை மறைப்பவன் விடுதலைப்போராளியல்ல. புலிகளால் ஊதியத்திற்கு ஊதியத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழியாக புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். பிரபாகரன் இருக்கிறார் என்ற பொய்யின் மூலம் பணம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருக்கிறார்கள்.

புலத்திற்கும் களத்திற்குமான புரிந்துணர்வின்மையானனது கட்டுவதற்குக் கந்தல் துணி கூடக் கிடைக்காத ஒரு தருணத்தில், கந்தல் துணி போதும் என களம் தவிக்க, கந்தல் துணி வேண்டாம் பட்டுத்துணி வேண்டும் என புலம் அடாவடித்தனம் பண்ணியதே இந்த முள்ளவாய்க்கால் துன்பத்திற்கான அடிப்படை.

ஆயுதக்கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகளின் கப்பற்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காகவே வணக்காமண் என்ற கப்பலை அனுப்பி, சிறீலங்காக் கடற்படையின் பாதுகாப்பு வலயத்தை மேலும் பலமாக்கிய புலம்பெயர்ந்த புலிகளின் மதிநுட்பத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகளேயில்லை. இனிக்கப்பல்கள் வருவதற்கே வாய்ப்பில்லை என்றவுடன் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிற்கு உள்ளான கப்பல்கள் போக மீதி இருந்தவை ஆழ் கடலில் தமது ஆயுதங்களைக் கொட்ட பிரபாகரன் உத்தரவிடுகிற அளவிற்கு அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டுப்பிரிவினரின் செயற்பாடுகளின் பின்னடைவு இருந்தது.

கஸ்ரோ குழுமம் என்ற இந்தக் குழுவின் பேச்சை தீவிரமாக நம்பிய பிரபாகரன் அதுவரை தொடர்பாளராக இருந்த கே.பி. என்பவரை ஓரங்கட்டி விட்டு கஸ்ரோ சார் அணியிடம் வெளிநாட்டுப் பொறுப்புக்களை ஒப்படைக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகள் பற்றிய அல்லது புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பற்றிய எந்தவொரு அறிவோ அனுபவமோ இல்லாதவர்களை இவற்றைக் கவனிக்குமாறு அனுப்பபட்டதால் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள கஸ்ரோவிற்கு ஆதரவானவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. இதுவே இவர்களின் தோல்வி முகமாயிற்று.

இவர்களின் தொடர் தோல்விகளைப் பிரபாகரன் கிரகித்த போது போர் முடிவுறும் நிலையை அடைந்திருந்தது. 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கே.பியுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்து பழைய நிலையையடை பிரபாகரன் விரும்பினாலும் அதற்கான காலம் பிரபாகனிற்குப் போதாமலிருந்தது.

எனினும் மே மாதம் 8ம் திகதி விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முழுப்பழியும் கஸ்ரோ குழுமத்தின் மீதே பிரபாகரனால் சுமத்தப்பட கஸ்ரோ நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார். இது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களிற்குத் தெரியாமலே நடக்கிறது. பிரபாகரனால் போராட்டத்தின் இறுதியில் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட குழுமம் கஸ்ரோ குழுமம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறு கஸ்ரோ இறந்ததே தெரியாமல் இருந்த கஸ்ரோவின் வெளிநாட்டுத் தலைமைத் தொடர்பாளர் நெடியவன் மே 14ம் தேதி திருமதி அடேல் பாலசிங்கத்தைத் தொடர்பு கொண்டு தனக்கும் கஸ்ரோவிற்கும் கடந்த பல நாட்களாகத் தொடர்பு இல்லையென்ற தனது கவலையை வெளியிடுகிறார். அவ்வளவிற்கு அந்தக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் ஐரோப்பிய. வுட அமெரிக்க நாடுகளில் நிதி சேகரிப்பை மட்டும் நிறுத்தவேயில்லை.

மறுபுறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும் கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள் மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இது தமது நிலைமையில் ஏதோ ஒரு மாற்றம் வந்துவிட்டது என்பதை புலம்பெயர்ந்த கஸ்ரோவின் “முன்னைநாள்” தொடர்புகளிற்கு காட்டி நிற்கிறது. எனவே அவர்கள் மௌனமாக கே.பி. செய்வதைப் பார்த்தவாறு தமது நாட்களை ஓட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து கே.பி.யினால் பரிமாறப்பட்ட முக்கிய தகவல்களை பிரபாகரனிடம் பகிர்வதற்கான தொடர்பாளரான வேல் என்ற இடைநிலைத் தளபதிக்கு பிரபாகரனிடம் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறாமல் தங்களின் ஊடகவே அதனை செய்த கஸ்ரோ பிரிவின் செயற்பாடே பிரபாகரனை அதியுச்ச கோபத்திற்கு இறுதிநாட்களில் ஆட்படுத்தியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளே அவர்களை துரோகிகள் என அறிவிப்பதற்கு பிரபாகரனை இட்டுச் சென்றது.

மே 17ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த கஸ்ரோ குழுமம் தலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கஸ்ரோவின் தலைமைத் தொடர்பாளராக நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை ஓரங்கட்டுகிறது.

நெடியவன் என்பவர் ஒரு ஆளுமை நிறைந்த புலியல்ல. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களிற்கு அழைத்துச் செல்வதே அவரது தொழில். ஆவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல்வயப்பட்டதால், கஸ்ரோவின் அனுமதியோடு அவரை மனமுடித்து நோர்வேயில் வதியும் ஒரு புலி.

இவ்வாறு மணமுடித்து வெளிநாடு சென்றவரை கஸ்ரோ தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்ட அவமானம். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் புலிகளின் சொத்துக்களைப் வசப்படுத்திக் கொள்ளவும், புலிகளின் ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தலைவராக புலம்பெயர்ந்த புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

மறுபுறத்தே காலம் தனது பக்கமில்லையென்றதை பிரபாகரன் உணர்ந்த போது அவரது செல்வங்களான சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும் களப்பலியாகியிருந்தனர். சயனைட் வில்லை பலவந்தமாகப் நம்பிக்கைக்குரியவர்களால் பறிக்கப்பட்ட பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலானவர்கள் 15ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் உடைக்கப்பட்டு சென்ற கரும்புலிகள் தலைமையிலான அணியினால் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைக்க முடியவில்லை. இத்தாக்குதலில் பொட்டம்மானும் உயிரிழக்கிறார். பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்க்காலிற்குள் முடங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் பிரபாகரனும், தென்முனையில் சூசையும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த சூசை கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என. உடனே கே.பி.

படைகளையும் அரசாங்கதையும் திசை திருப்ப ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் 2000 போராளிகளும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருப்பதாக. இது அந்த இடத்தில் பிரபாகரன் இல்லை என்று நம்ப வைப்பதற்காக

ஆனால் அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார். கூடவே மதிவதனி பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் என பிரபாகரனின் சந்ததியே நேர்மையாக போரில் மடிகிறது.

கே.பி.க்கு அதன் பின்பு சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு மீண்டும் வரவேயில்லை. சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த படம் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முழுதாக முற்றுப் பெற்றது.

ஆனால் இப்போது தப்பி சிறையிருக்கும் விடுதலைப்புலிகளில் வெளியுறவுத் தொடர்பாளர் திலீபன், வேல் மற்றும் தொலைதொடர்புப் பரிவர்த்தனைப் பொறுப்பாளர்கள்; புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்தால் அவர்களால் சிறிலங்கா அரசிற்கு இணையாக யுத்தக்குற்றவாளிகள் ஆக்கப்படப்போவது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களும். ஓவ்வொரு நாடுகளிலும் தமிழ் மக்களைப் பொய் கூறி ஏமாற்றிய புலிகளின் முகவர்களுமேயாகும்.

போராட்டத்தின் முற்றுப் பெறுதலோடு தாயகத்தில் எஞ்சியிருந்த புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி தயாமோகன் உள்ளிட்ட பலர், செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி உள்ளிட்ட பலரையும் இலங்கையிலிருந்து மீட்டெடுத்த கே.பி. செய்த ஒரு செயல் அவரது முடிவிற்குக் காரணமாயிற்று. நெடியவன் அல்ல புலிகளின் தலைவர். தானே புலிகளின் தலைவர் என கே.பி. அறிவித்த மூன்றாம் நாளே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கைதியாக்கப்படுகிறார்.

இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த ஒருவர் கைதியாக்கப்படுகிறார். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் புகுவதாக புலம்பெயர் புலிகள் அறிவிக்கிறார்கள். தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் அறிவிக்கின்றனர்.

இப்போது விளங்குகிறதா என்ன நடந்தது என்று? புலிகளின் உள்ளிருந்து அறுக்கும் பகை நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அதற்கு உதாரணம் நோர்வேயில் கலவியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்கிற ஒரு சிறு பையன்.

- கீர்த்தி

- (இக்கட்டுரை ஆராய்வினால் எழுதப்படவில்லை).

நன்றி - இனியொரு ( http://inioru.com/?p=12918 )

0 comments:

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.