தமிழக மாணவர் போராட்டம் சொல்லித்தரும் பாடங்கள்
ஏறு தழுவுதல் உரிமையை பிரதானமாக கொண்டு தமிழக இளையவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏழு நாட்கள் நடத்திய போராட்டம் வெற்றியடைந்த போதும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களையும் அது விட்டு சென்றுள்ளது.
இது வெறுமனே ஜல்லிக்கட்டு போராட்டமாக பார்க்க முடியாது. ஊழல் முதல் விவசாயிகள் தற்கொலை வரை பல்வேறு பிரச்சனைகளால் மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த இளையவர்கள் வெடித்து கிளம்பிய ஒரு இடமே ஜல்லிக்கட்டு. மேலும் மாணவர் போராட்டம் இத்தனை பெரிதாகும் என்று உளவுத்துறை எதிர்பார்க்காமை, ஜெயலலிதா போன்ற ஒரு மக்கள் விரோத சர்வாதிகாரி முதலமைச்சராக இல்லாமை, அதிமுக கட்சியில் இடம்பெற்றுவரும் அதிகார போட்டி போன்ற பல காரணிகளும் போராட்டம் வெற்றி பெற ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருந்தன.
ஒரு தலைவனோ அரசியல் கட்சியோ அமைப்புகளோ தலைமை தாங்காமல் இளையவர்கள் தாமாக ஒன்று கூடி இந்த போராட்டத்தை நடத்தியமை அனைவரையும் வியக்க வைத்து உலகுக்கே முன் உதாரணமாக அமைந்து விட்டது என்பது உண்மைதான். அதேவேளை தன்னிச்சையான மக்கள் போராட்டம் ஒன்றை அதிகார வர்க்கத்தாலும் சந்தர்ப்பவாதிகளாலும் திசை திருப்பவும் முடியும் என்பதை இந்த போராட்டம் கோடிட்டு காட்டியுள்ளது.
மக்கள் போராட்டம் ஒன்றில் சினிமா நட்சத்திரங்களோ பிரபலங்களோ அனுமதிக்கப்படுவது ஆபத்தில் சென்று முடியும் என்பதை முதல் பாடமாக கொள்ளலாம். ஹிப்ஹாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, லோரன்ஸ், விவேக், சிம்பு போன்றவர்கள் போராட்டத்தை கடைசி நேரத்தில் திசை திருப்பவும் கொச்சைப்படுத்தவும் காரணமாக அமைந்தனர். ஆரம்பத்தில் வீராவேசமாக பேசிய சேரன், அமீர் போன்றோர் பின்னர் காணாமல் போயினர். என்னதான் பிரபலம் ஒருவர் மூலம் போராட்டக்காரரின் கருத்துக்கள் செய்தி ஊடகங்களின் கவனத்தை பெறுகிறது என வாதிட்டாலும் அது போராட்டத்தை ஆபத்தில் தள்ளவே பெரும் வாய்ப்புள்ளது என்பதை இந்த ஏறுதழுவுதலுக்கான உரிமை போராட்டம் வெளிப்படையாக காட்டி நிற்கிறது. மக்களின் நியாயமான உரிமை போராட்டத்திற்கு பிரபலங்களின் முகங்கள் தேவைப்படாது. அவர்களின் தார்மீக ஆதரவே போதுமானது. இந்த இடத்தில் நடிகர் கமல் இளையவர்களின் போராட்டத்தில் நடிகர்கள் நுழைந்து ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப கூடாது என்று ஆரம்பத்திலேயே தெளிவாக கூறியமையை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
நடிகர்கள் பிரபலங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட ஒரு வாழ்வில் இருப்பவர்கள். அவர்கள் இயல்பாகவே தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும், ஊடகங்களின் ஒளி தம்மீது படவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் போராட்ட களத்தின் யதார்த்தம் வேறு மாதிரியானது. அவர்களால் அந்த வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாது. மக்களின் உரிமையே போராட்டத்தின் மையம் என்பதை அவர்களால் உணர முடியாத அளவுக்கு ஊடக வெளிச்சம் அவர்களின் கண்களை மறைக்கும். எனவே ஆரம்பத்தில் பிரபலங்கள் எவ்வளவு உண்மையாக மக்கள் உரிமை போராட்டத்தில் பங்கெடுத்தாலும் அது கடைசிவரை அவ்வாறே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. போராட்டத்தை விரும்பாத அல்லது போராட்டத்தால் பாதிக்கப்படுகின்ற தரப்புகளும் பிரபலங்களை விலைக்கு வாங்குவதன் மூலம் போராட்டத்தை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது. மறுபுறம் பிரபலங்களின் சிறு உணர்வுகள் கூட போராட்டத்தின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கவும் சிலவேளை வெறுக்க வைக்கவும் முடியும். அதை இந்த ஏறு தழுவுதலுக்கான உரிமை போராட்டத்தின் இறுதி நாட்களில் காண முடிந்தது. குறிப்பாக இசையமைப்பாளர் ஆதியின் கருத்து போராடும் இளையவர்கள் நோக்கத்தையே கொச்சைப்படுத்தி மக்களை திசை திரும்புவதாக அமைந்தது.
அடுத்த பாடம் காவல்துறை ஒருபோதும் போராட்டக்கார்களது அல்லது மக்களது நண்பனாக இருக்கமுடியாது என்பது. ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு காவல்துறை உதவுவதாகவும் போராட்டக்காரர்களின் நண்பனாக காவல்துறை இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. உண்மையில் ஒரு முதலாளித்துவ நாட்டில் காவல்துறை என்பது ஆளும் வர்க்கத்திற்கு அதிகார வர்க்கத்தற்கு சேவை செய்யும் அமைப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தமது எஜமானர்களையும் அவர்கள் சார்ந்த முதலாளிகள் நிறுவனங்களையும் சார்ந்து நிற்பார்களே தவிர மக்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் இருக்கவும் முடியாது.
உண்மை இப்படியிருக்க இந்த போராட்டத்தில் காவல்துறை போராட்டக்காரர்களுக்கு சார்பாக இருக்கிறது என்றே திரும்ப திரும்ப புகைப்படங்கள் காணொளிகள் மூலம் சொல்லப்பட்டது. இந்த தவறான புரிதல் போராட்டங்களுக்கு புதிதான மாணவர்களிடமும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். மக்கள் மத்தியிலும் இப்படியான அபிப்பிராயமே சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டது.
ஆனால் ஏழாவது நாள் காவல்துறை செய்த கொடுமைகள் அவர்கள் ஒரு போதும் மக்களின் நண்பனாக இருக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாக பதிவுசெய்துள்ளது. தனியார் வாகனங்கள் குடிசைகள் சொத்துக்களுக்கு காவல்துறையே தீ வைக்கும் ஒளிப்படங்களைக்கண்டு முழு இந்தியாவும் அதிர்ந்துபோயுள்ளது. காவல்துறை பொது மக்களது பொருட்களை திருடும் காட்சிகளும் அப்பாவி பொதுமக்களை கதற கதற அடித்து துவைக்கும் காட்சிகளும், வன்முறையில் ஈடுபடும் காட்சிகளும், போராட்டக்காரர்களின் உணவை திருடி உண்ணும் காட்சிகளும் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
தமிழக காவல்துறை வன்முறையை தடுப்பதாக கூறிக்கொண்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தியயுள்ளது. கலவரத்தை அடக்குவதாக கூ றி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த காலங்களில் அணு உலை எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம், மீனவர் போராட்டம் என எல்லா சந்தர்ப்பங்களிலும் காவல்துறை பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து இருக்கிறது.
இலங்கையில் கூட சிங்கள மக்களில் பலர் தமிழர்களுடனான முரண்பாடு காரணமாக பாதுகாப்பு படையினருக்கு மிகுந்த ஆதரவை வழங்கி இருந்தார்கள். ஆனால் ஜேவிபி அமைப்பின் போராட்டத்தை அடக்க தமது சொந்த சிங்கள மக்கள் மீதே மிக கொடூரமான வன்முறையை இலங்கை படையினர் நிகழ்த்தியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள கிராம மக்கள் மீது கோட்டாபே ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல அமெரிக்காவில் Dakota Access oil pipeline permit தொடர்பான அமெரிக்க பூர்வ குடிகளின் போராட்டத்தின் போதும் அமெரிக்க காவல்துறை வன்முறையை நடத்தியிருந்தது. வடக்கிலிருந்து எண்ணெயை கொண்டு செல்லும் குழாய்களை தமது பாரம்பரிய நிலங்களினூடாக அமைப்பதற்கு அம்மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இத்திட்டமானது தமது பாரம்பரிய நிலங்களை பாழ்படுத்துவதுடன் தம்மை அந்த பாரம்பரிய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தை கொண்டதென அம்மக்கள் அறப்போராட்டத்தை நடத்தினர். ஆனால் முதலாளிகளின் அடியாட்களான அமெரிக்க காவல்துறை வழமை போல பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. ஆக முன்னேறிய அமெரிக்க என்றால் என்ன, வறுமையான இந்தியா இலங்கை என்றால் என்ன எல்லா இடங்களிலும் காவல்துறை அதிகார வர்க்கத்திற்கு சார்பாகவே நடந்து கொள்ளும் என்பது வெளிப்படை. எனவே போராட்டக்கார்கள் காவல்துறையை அண்டவிடுவது ஆபத்தாகவே முடியும்.
இன்னொருபுறம் இந்துத்துவ வலதுசாரிகள் இப்போராட்டம் மோடியை நோகடிக்கும் என்பதால் பல வகைகளிலும் எதிர்ப்பை காட்டினார்கள். ஹெச்.ராஜா, சுப்பிரமணிய சாமி போன்ற பா.ஜ.கவினர் நேரடியாக எதிர்ப்பை காட்டினார்கள். ஆனால் இந்துத்துவ கருத்துக்கு ஆதரவான பொதுமக்களும் இளையவர்களும் (இவர்களில் மிக பெரும்பாலானவர்கள் பிராமணர்களாக இருக்கின்றமை புரிந்துகொள்ள கூடியதே) ஆரம்பம் முதலே இந்த மாணவர் போராட்டத்தை சந்தேக கண்ணுடனும் தவறாகவும் எழுதி வந்ததை காண கூடியதாக இருந்தது. தற்போது போராட்டம் முடிந்த பின்னரும் காவல்துறையின் கொடுமைகளைப் பற்றி வாயே திறக்காமல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று எழுதி வருகிறார்கள். எவ்வளவு சொல்லியும் கலைந்து போகாத காரணத்தால் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேர்ந்தது என்று எழுதுகிறார்கள். ஏன் அன்று காலை 6 மணிக்கு வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றவேண்டும் சில மணி நேரங்கள் பொறுத்து சட்டப் பேரவையில் ஒருமனதாக ஜல்லிக்கட்டு தடையை முற்றிலும் நீக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட தகவலை மாணவர்களிடம் அறிவித்து கலைய சொல்லியிருக்கலாமே என்று இவர்களிடம் கேட்டால் பதில் இல்லை. இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த மெரீனா கடற்கரை தேவை என்று முட்டாள்தனமாக பதில் சொல்கிறார்கள். பொது பிரச்சனை ஒன்றுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது இவர்களுக்கு தவறாகவே தெரியவில்லை என்பதே இங்கு கொடுமையானது. எனவே மிக சாதாரணமாக மக்களோடு மக்களாக இருந்து கொண்டே மக்களுக்கு எதிரான போக்கை கொண்டுள்ள இந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் சார்பு வலதுசாரிகள் போன்றோர் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இந்த மாணவர் போராட்டத்தில் இடது சாரிகளின் நிலைப்பாடு நகைப்புக்குரியதாக இருந்தது. ஜல்லிக்கட்டை அவர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு வர்க்க மற்றும் சாதிய காரணங்களை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். முகநூலில் இயங்கும் இடதுசாரி சார்பானவர்கள் கூட ஆரம்பம் முதலே இந்த போராட்டத்தை எதிர்த்தும் கிண்டல் செய்துமே எழுதி வந்தார்கள். தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் போராட்டம் எதிர்பாராத வகையில் எழுச்சியடைந்ததும் தமது கருத்தை மாற்றி மெது மெதுவாக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டார்கள். காவல்துறை மக்களை தாக்கியதும் முற்று முழுதாக போராட்டத்தை இவர்களே நடத்தியது போல எழுத தொடங்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசாங்கமே இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கிறது என்று கூறிவிட்டு இப்போது அரசாங்கம் போராட்டத்திற்கு எதிரானது என்று மாற்றி எழுதுவது குறித்து அவர்கள் வெட்கப்படவில்லை. இடதுசாரிகளை போலவே விஷால், திரிஷா, ரஜினி குடும்பத்தவர் என பலரும் போராட்டத்தின் எழுச்சிக்கு பயந்து போராட்டத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை வெளியிட்டனர். எனவே இப்படியான சந்தர்ப்பவாதிகள் குறித்தும் இவர்களின் நகர்வு குறித்தும் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்வது அவசியம்.
இவை ஒருபுறமிருக்க இந்த ஏறு தழுவும் உரிமைக்கான போராட்டம் வேறு சில சிந்தனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போராடிய இளையவர்கள் தமக்கான தலைமை அல்லது தமது கருத்தை அதிகார பூர்வமாக வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்யாமை ஒரு பாதகமான அம்சமாக இருந்ததை காண கூடியதாக உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தியே ஆர்.ஜே.பாலாஜி, ஆதி, லோரன்ஸ் போன்ற சினிமாக்காரர்கள் அடிக்கடி ஊடகங்களில் தோன்றி போராட்டத்தை தமது தலைமையில் முன்னெடுப்பதுபோல காட்டிக்கொண்டார்கள். தமது சொந்த கருத்துக்களை போராட்டக்காரர்களின் கருத்தாக முன்வைத்தனர். இறுதியில் மாணவர் போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டமாக சித்தரித்தார்கள். இது குறித்து போராட்ட குழுவில் இயங்கிய இளைஞர் கூறும்போது '' லோரன்ஸ் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் அடிபட்டு வந்ததாக சொன்னார். எனவே அவருக்கு மட்டும் நாங்கள் ஒரு நாற்காலியை இருக்க கொடுத்தோம். ஆனால் அதனை அவர் போராட்டத்தின் தலைமையை அவருக்கு கொடுத்ததாக சூழலை மாற்றிக்கொண்டார். வேறு எவரையும் பேச விடாமல் அவராக கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவரும் அவரை சுற்றி இருந்த சிலரும் ஆரம்பத்திலிருந்து போராடிய மாணவர்களை ஊடக கண்களில் இருந்து அகற்றிவிட்டனர்'' என்றார். எனவே போராட்டம் ஒன்று நடக்கும் போது வெளி நபர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் மடத்தையே கட்டிவிடுவார்கள் என்பதும் இந்த போராட்டத்தில் வெளிப்பட்ட ஓர் அம்சமாக பார்க்கலாம்.
இவை தவிர போராடிய மாணவர்கள் மீது பல விமர்சனங்கள் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், அதற்காக அவர்கள் போராட வரவில்லை. கூடங்குளம் போராட்டம் இடம் பெறும்போது கண்டுகொள்ளவில்லை, சாதிய வன்முறைகள் இடம்பெறும்போது அதற்கு எதிராக போராடவில்லை, தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கொள்கை திணிப்பு மற்றும் மத வன்முறைகளுக்கு எதிராக போராடவில்லை, மத்திய அரசின் கல்வி கொள்கை மற்றும் தனியார் கல்வி கொள்ளைக்கு எதிராக போராடவில்லை ஆனால் வருடத்தில் ஒருமுறை நடக்கும் ஏறு தழுவும் விளையாட்டுக்கு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள் என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களில் உண்மை இருந்தபோதும் சினிமாவிலும் சமூக வலைத்தளங்களிலும் வீணாக நேரத்தை செலவழிக்கும் பொறுப்பற்ற ஊதாரிகளாக எண்ணப்பட்ட இன்றைய இளையவர்கள் பொது பிரச்சனை ஒன்றுக்காக அதிகார வர்க்கத்திற்கு எதிராக சுயநலம் இன்றி ஒன்று கூடி போராடினார்கள். அறவழியில் சிறிதும் குழப்பங்கள் இன்றி போராடினார்கள். வன்முறைகளில் இறங்கவில்லை. நூறு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இருந்தாலும் எந்த சீண்டலோ தொந்தரவோ இல்லாமல் பண்பு காத்தனர். கட்டுக்கோப்பாக நடந்து கொண்டனர். போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, குப்பைகளை அகற்றுவது என அருமையாக தன்னிச்சையாக செயல்பட்டார்கள். விமர்சனங்களுக்கு அப்பால் இவை போன்ற சாதக அம்சங்களை பார்க்கும் போது விமர்சங்களை இலகுவாக கடந்து சென்றுவிட முடிகிறது. மேலும் எதிர்காலத்தில் அவற்றை திருத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
ஆக இந்த மாணவர் போராட்டம் பல பாடங்களை எதிர்கால மக்கள் போராட்டங்களுக்கு விட்டு சென்றுள்ளது. கற்றுக்கொண்டால் நல்லது.
- என்.ஜீவேந்திரன்.